Published:Updated:

ஜெயம் ரவி-அர்விந்த் சாமி, ஜாக்கிசான் - சோனு சூட்... இந்த வாரம் ஜெயிக்கப்போவது யாரு? #WeekendMovies

ஜெயம் ரவி-அர்விந்த் சாமி, ஜாக்கிசான் - சோனு சூட்... இந்த வாரம் ஜெயிக்கப்போவது யாரு? #WeekendMovies
ஜெயம் ரவி-அர்விந்த் சாமி, ஜாக்கிசான் - சோனு சூட்... இந்த வாரம் ஜெயிக்கப்போவது யாரு? #WeekendMovies

சென்ற வாரம் தமிழில் வெளியான அதே கண்கள் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது, ரயீஸ், காபில் என இரண்டு இந்திப் படங்களும் வெளியாகியிருந்தது. இந்த வாரம் இன்னும் கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் வெளியாக இருக்கிறது. ஸோம்பி, குங்ஃபூ உட்பட தமிழ்ப்படங்களுடன் செம கலவையிலான இந்த வாரப் படங்கள் என்னென்ன?   

தமிழ்:

போகன்:

ரோமியோ ஜுலியட் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி, ஹன்சிகா, லக்‌ஷ்மன் மற்றும் தனி ஒருவனுக்குப் பிறகு ஜெயம்ரவி, அர்விந்த் சுவாமி என இரண்டு வித காம்போ இணைந்திருக்கும் படம்.  ஒரு ஆப்ரிக்கன் படத்தின் தழுவலில் தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார் இமான். படத்தை தயாரித்திருப்பது பிரபுதேவா. படம் நாளை (2ம் தேதி) வெளியாகவிருக்கிறது.

எனக்கு வாய்த்த அடிமைகள்:

மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய், ப்ரணிதா நடித்திருக்கும் படம் எனக்கு வாய்த்த அடிமைகள். காதல் + காமெடி ஜானரில் மீண்டும் ஒரு படமாக வர இருக்கிறது. மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் தயாநிதி. இந்தப் படமும் நாளை (2ம் தேதி) வெளியாகிறது.

மலையாளம்

ஃபுக்கிர்:

காமெடி ஜானரில் கெட்டிக்காரர் சித்திக். இதற்கு முந்தைய ஹிட்டான பாஸ்கர் த ராஸ்கல் கூட தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது. அவர் இயக்கியிருக்கும் படம் தான் ஃபுக்கிர். ஜெய் சூர்யா, லால், ப்ரயாகா இவர்களுடன் இயக்குநர் சித்திக்கும் நடித்திருக்கிறார். கிறிஸ்துமஸ் வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் பிப்ரவரி 3 அன்று வெளியாகவிருக்கிறது.

தெலுங்கு

நேனு லோக்கல்:

சென்ற வருடம் க்ருஷ்ணகாடி வீர ப்ரேம கதா, ஜென்டில்மேன், மஜ்னு என நானிக்கு அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் அமைந்தது. இந்த வருடத்தில் நானிக்கு முதல் படமாக வெளியாகிறது நேனு லோக்கல். துரத்தி துரத்தி கீர்த்தி சுரேஷை காதலித்து எப்படி காதலில் ஜெயிக்கிறார் என்ற கதை தான். காமெடி கலந்த படமாக இருக்கும் என டிரெய்லர் பார்த்தால் தெரிகிறது. படம் பிப்ரவரி 3 ரிலீஸ்.

நேனு லோக்கல் - டிரெய்லர்

ஆங்கிலம்

குங்ஃபூ யோகா:

தொல்லியல் பேராசிரியரான ஜாக்கிசான் இந்தியாவில் தொலைந்து போன ஒரு புதையலைத் தேடும் பயணம் தான் கதை. நெடுநாட்களாக ஜாக்கிசானை மிஸ் செய்த அத்தனை பேருக்கும் இது அன்லிமிட்டட் என்டர்டெய்ன்மென்டாக இருக்கும் என சொல்லலாம். ஜாக்கிசான் கூடவே நம்ம ஊர் சோனு சூட், அமைரா தஸ்தூர், திஷா பதானி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். போலீஸ் ஸ்டோரி, தி மித், சி.இஸட்12 போன்ற ஜாக்கிசானின் முந்தைய படங்களை இயக்கிய ஸ்டான்லி டாங் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சீனாவில் ஜனவரி 28ம் தேதியே வெளியாகிவிட்ட குங்ஃபூ யோகா இந்தியாவில் பிப்ரவரி 3ம் தேதி வெளியாகிறது. 

Kung Fu Yoga - Trailer

ரெசிடென்ட் ஈவில்: தி ஃபைனல் சாப்டர்:

இது தான் ரெசிடென்ட் ஈவில் சீரிஸின் கடைசி பாகம் என சொல்லப்படுகிறது. இதற்கு முன் 2012ல் வெளியான ரெசிடென்ட் ஈவில்: ரெட்ரிபூஷன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கிறது இந்த படம். முந்தைய பாகங்களைப் போல அம்பர்லா நிறுவனத்தின் சதிகளை முறியடித்து ஆலிஸ் எப்படி வெல்கிறார் என்பது தான் கதைக் களம், ஆனால் இந்த முறை ரெட் க்வீனிடமிருந்து ஒரு தகவல் வருகிறது, அம்பர்லா நிறுவனத்தின் ரகசிய பரிசோதனை சாலைக்கு வந்தால் ஸோம்பிகளை மீண்டும் பழையபடி மனிதர்களாக மாற்றும் மருந்து கிடைக்கும் என்கிறது. ஆலிஸ் என்ன செய்தார் என்பது தான் படம். பிப்ரவரி 3ம் தேதி படம் ரிலீஸ்.

தி கிரேட் வால்:

கூலிப்படை வீரனான வில்லியம் க்ரேட் வாலில் சிறைவைக்கப்படுகிறான். அப்போது அங்கு இருக்கும் புதிய ஜீவராசியை பார்க்கிறான். அதைப் பற்றி அங்கு இருக்கும் படைவீரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு தானும் அதை அழிப்பதில் பங்கு கொள்கிறான். அவைகளை எல்லோரும் சேர்ந்து அழித்தார்களா என்பது தான் தி க்ரேட் வால் படத்தின் கதை. டிசம்பரிலேயே சீனா மற்றும் பெய்ஜிங்கில் வெளியாகிவிட்ட படம் பிப்ரவரி 3ல் மற்ற நாடுகளில் வெளியாகிறது.

எந்த மாற்றமும் இல்லை என்றால் அடுத்த வாரம் துரைசிங்கத்தின் வேட்டை துவங்கும்!

- பா.ஜான்ஸன்