Published:Updated:

பரகாய பிரவேசத்தில் ஜொலிப்பது ஜெயம் ரவியா... அர்விந்த் சாமியா..?! - போகன் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
பரகாய பிரவேசத்தில் ஜொலிப்பது ஜெயம் ரவியா... அர்விந்த் சாமியா..?! - போகன் விமர்சனம்
பரகாய பிரவேசத்தில் ஜொலிப்பது ஜெயம் ரவியா... அர்விந்த் சாமியா..?! - போகன் விமர்சனம்

‘தீமைதான் வெல்லும்’ என்று கெத்து காட்டிய அர்விந்த்சாமியும், ‘நான் போலீஸ் யூனிஃபார்ம் போட்ட போராளி’ என்று அந்தத் தீமையை அழிக்க நினைத்த ஜெயம்ரவியும் மோதி விளையாடும் இன்னுமொரு படம் போகன். ஜெயம்ரவி அதே போலீஸ் உடையில் வர.. அர்விந்த்சாமி கருப்புக் கோட்டுக்குப் பதில் ப்ளூ, ப்ரவுன் என்று கலர் கலர் கோட்டில் வருகிறார். எப்படி இருக்கிறது படம்?

ஸ்டிரிக்ட் அசிஸ்டெண்ட் கமிஷனர் விக்ரமாக ஜெயம் ரவி. பெரிய ஜுவல்லர்ஸ் ஒன்றில் கத்தை கத்தையாக பணம் கொள்ளை போகிறது. அடுத்ததாக, வங்கி ஒன்றிலிருந்து. பணத்தை எடுத்துக்கொண்டு, அர்விந்த் சாமியின் காரில் வைத்த வங்கி அதிகாரி ‘ஆடுகளம்’ நரேன், ஜெயம் ரவியின் அப்பா. போலீஸ் அவரைக் கைது செய்ய, அவர் நடந்தது எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்கிறார். அப்பாவுக்காக களமிறங்கும் ஜெயம் ரவி, அர்விந்த் சாமியை ஸ்கெட்ச் போட்டு கைது செய்துவிடுகிறார்.

விசாரணையைக் கொஞ்சமும் சளைக்காமல் அசால்டாக எதிர்கொள்கிறார் அர்விந்த்சாமி. துப்பாக்கி காட்டி மிரட்டும்போதும் பயம் இல்லை. ‘பத்து நிமிஷம் உன்கூட இருக்கற போலீஸ் செத்துப்போவான். அப்பறம் வா’ என்று அர்விந்த்சாமி சொன்ன சிறிது நேரத்தில் ஜெயம் ரவியின் குழுவில் இருக்கும் நாகேந்திர பிரசாத்தை, சக போலீஸ்காரரே கொல்கிறார். இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று புரியாமல் கொதித்துப் போய் அர்விந்த்சாமி இருக்கும் விசாரணை அறைக்குச் செல்லும் ஜெயம்ரவி.. கொஞ்ச நேரத்தில் அர்விந்த்சாமியாக வெளியே வருகிறார். அதற்குப் பிறகு நடக்கும் அதிரி புதிரிகளும்.. ‘ஆஆஆஆவ்’ க்ளைமாக்ஸும்தான் போகன்.

ஆயகலைகள் 64ல் 52வது கலையான பரகாயப் பிரவேசம்தான் கதையின் ஆணிவேர். வில்லன் இவர்தான். ஹீரோ இவர்தான் என்று எந்த சஸ்பென்ஸ், ட்விஸ்டெல்லாம் வைக்காமல் ‘இந்தா வெச்சுக்கோ.. இதான் கதை’ என்று சொல்லியபடியே நகர்கிற திரைக்கதை. 

ஜெயம் ரவி - அர்விந்த்சாமி இருவருமாய் பார்ட்னர்ஷிப் போட்டு நடித்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாய் கண்ணியம் காட்டிவிட்டு, வீட்டிற்குச் சென்றதும் ‘பொண்ணு ஃபோட்டோ எங்க?” என்று கல்யாணத்துக்கு ஏங்கும் பேச்சிலர் ஃபீலிங்கைக் கச்சிதமாய் வெளிப்படுத்துகிறார் ஜெயம் ரவி. இடைவேளைக்குப் பின், அர்விந்த் சாமியாகி அந்தச் சிறைக் காட்சியில் ’நீன்னா... நீ இல்லடா.. நான்’ என்று வசனம் பேசும்போதும் செம ப்ரோ. ஆனால் அவரை  ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்கிறார் அர்விந்த்சாமி. வில்லனாகவும், ஹீரோவாகவும் மாஸ் காட்டுகிறார். கைது செய்யப்பட்டு ஜெயிலில் தனது அப்பாவுக்காக (அதாவது என்னான்னா, ஜெயம் ரவியின் அப்பாவுக்காக!) உருகும்போதும், மீண்டும் தன் உடல் கிடைக்கப் பெற்று ஜெயம் ரவியை மிரட்டும்போதும்...  நடிப்பில், தீமைதான் வெல்லுது சாரே!

ஹன்சிகாவுக்கு கலர்ஃபுல் ஏரியாவைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு.  கொஞ்சம் கூடுதலாகவே நடிக்க ஸ்கோப். அதையும் சரிவரச் செய்திருக்கிறார். குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் ரகளை. அந்தக் காட்சியின் வசனங்களில் செம மாடுலேஷன்! குரலுதவி செய்திருக்கும் சவிதாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். ஆனால், ஹீரோயின்களையும் குடிக்கவைப்பது என்ன ட்ரெண்ட் ப்ரோ?   கொஞ்சமே வந்தாலும் கமிஷனர் ஆபீஸில் ஸ்டைலாக சிகரெட் பிடித்தபடி மிரட்டும் காட்சியில் நாசர்.. ‘நீங்க நிறைய நடிங்களேன் சார்’ என்று சொல்லவைக்கிறார். படத்தில் அர்விந்த்சாமி பாடிலேங்வேஜில் பலர் நடித்திருந்தாலும்,  ஆடுகளம் நரேன் அந்த உடல்மொழியைச் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கிறார்.

படம் முழுவதும் ஏதாவது ஒரு படத்தை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பது பெரும்குறை. அர்விந்த்சாமி இண்ட்ரோ தனிஒருவன், ஜெயம் ரவி இண்ட்ரோ ரோமியோ ஜூலியட், ஹன்சிகா குடி சீன் போக்கிரி ராஜா, அர்விந்த் சாமி ஃப்ளாஷ்பேக் - பல படங்கள், வாராய் நீ வாராய் பாடல் ’விக்ரம்’ படத்தின் மீண்டும் மீண்டும் வா, செந்துரா செந்தூரா - தனி ஒருவன் கண்ணால கண்ணால, கண்ட்ரோல் ரூமில் கம்ப்யூட்டர் ஆசாமி பேனா ஆட்டுவது - உன்னைப் போல் ஒருவன், ஓலைச்சுவடி விழும் கடைசி சீன்.. தி மாஸ்க் என்று குறிப்பெடுக்க முடியாத அளவுக்கு “இன்ஸ்பிரேஷன்”. இனி இவர்தான் அவர் என்ற ப்ளாட்டை வைத்துக் கொண்டு இடைவேளைக்குப் பின் சிக்ஸர்களாக அடித்திருக்கலாம். ஆனால் மிஸ் செய்துவிட்டார்கள். காமெடிக்கு ஸ்கோப் இருந்தும், அது படத்தில் மிகவும் குறைவே. 


ஓப்பனிங் ஜெயம்ரவி ஃபைட், அதகளம். ஒரு இடம் விடாமல் அவர் தாவிக்குதித்து ஓடி சேஸ் செய்து என்று விறுவிறு காட்சி. அதற்குத் துணை நின்ற சௌந்தரராஜனின் காமிராவுக்கும், பரபர எடிட் செய்த ஆண்டனிக்கும்.. கைகுலுக்கல்கள். அனிருத் குரலில் டமாலு டுமீலு பாடலிலும், போகன் போகன் பாடலிலும் கவனம் ஈர்க்கும் இமான், மற்ற பாடல்களில் ஏமாற்றிவிடுகிறார். பின்னணி இசையிலும் சோதித்திருக்கிறார். க்ளைமாக்ஸிற்கு முன் கண்ட்ரோல் ரூமில் ஹீரோவும் வில்லனும் பேசிக் கொண்டிருக்க, பின்னணியில் விஜய் ப்ரகாஷ் பாடிக்கொண்டே இருக்கிறார். காதுவலிதான் மிச்சம். முக்கியக் கதாபாத்திரங்களைத் தவிர்த்து, சின்னச் சின்ன காஸ்டிங்கில் ஜெயம் ரவியுடன் வரும் அக்‌ஷரா கௌடா மட்டும் ஈர்க்கிறார். மற்றவர்களின் காஸ்டிங்கில் இன்னும் கவனம் சேர்த்திருக்கலாம். 15 நிமிடம் முன்பே முடிந்துவிடுகிற படத்துக்கு தேவையில்லாத தெலுங்குப்பட க்ளைமாக்ஸ். 'ஏன்யா இந்த வித்தைய வெச்சுக்கிட்டு இவ்வளவு சாதாரண வேலைகளையா செய்வீங்க?" என்று நாசர் கேட்பது இயக்குநருக்கும் சேர்த்துதான். ஆனாலும், கூடுவிட்டு கூடு என்று ப்ளூ கலர் க்ராஃபிக்ஸ் எல்லாம் வராதது ஆறுதல்.

கைது செய்து அழைத்துச் செல்கையில் ஜெயம்ரவியைப் பார்த்து அர்விந்த்சாமி கேட்கும் ‘என்னைப் பிடிக்க உனக்கு நட்புதானாடா கெடைச்சது?’,  கையில் பாட்டிலுடன், தூரத்தில் இருக்கும் ஹன்சிகாவைப் பார்த்துஅர்விந்த்சாமியாக இருக்கும் ஜெயம்ரவி சொல்லும் ‘இது மனுஷன் படைச்சது, அது கடவுள் படைச்சது.. இத விட்டாதான் அது கிடைக்கும்’ போன்ற வசனங்கள் குறிப்பிட வைக்கின்றன. அர்விந்த்சாமியைப் பிடிக்க ஜெயம் ரவியின் வியூகமும், ஜெயம்ரவியாய் அர்விந்த் சாமி ஹன்சிகாவை எதிர்கொள்ளும் காட்சியும் ரசிக்க வைக்கின்றன.  கூடவே.. இப்படி நாலைஞ்சு காட்சிகள் கெத்தா இருந்திருக்கலாமே ப்ரோ என்று கேட்கவும் வைக்கின்றன. 

செமத்தியான ஒன்லைன். திரைக்கதையில் இன்னும் கவனம் சேர்த்து, ஒன்றிரண்டு காட்சிகள் என்றில்லாமல் ஒவ்வொரு காட்சிகளுக்கும் மெனக்கெட்டிருந்தால் இன்னும் நிமிர்ந்து நின்றிருப்பான் இந்த போகன்.      

ட்ரெய்லருக்கு: