Published:Updated:

இன்னும் எத்தனை படங்களில் இதை சகிக்கணும் பாஸ்? - எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

இன்னும் எத்தனை படங்களில் இதை சகிக்கணும் பாஸ்? - எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்
இன்னும் எத்தனை படங்களில் இதை சகிக்கணும் பாஸ்? - எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

இன்னும் எத்தனை படங்களில் இதை சகிக்கணும் பாஸ்? - எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

 'கழட்டி விடும் காதலியா, கை கொடுக்கும் நண்பர்களா?' என்ற அரதப்பழசான பட்டிமன்றத் தலைப்பை வைத்துக் கிளுகிளுப்பாய்க் கிச்சுகிச்சு மூட்டுவதுதான் 'எனக்கு வாய்த்த அடிமைகள்'.

தன் காதலி பிரணிதா தன்னைக் கழட்டிவிட்டு, இன்னொருவனுடன் கைகோக்கப் போவதால் லாட்ஜில் ரூம் போட்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறார் ஜெய். இதை நெருங்கிய நண்பர்களான காளிவெங்கட், கருணாகரன், நவீனிடம் சொல்ல... முதலில் விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் மூவரும் பின்பு ஜெய்யை வலைவீசித் துழாவுகிறார்கள். இவர்கள் ஜெய்யைக் கண்டுபிடித்தார்களா? ஜெய் தற்கொலை செய்துகொண்டாரா, இல்லையா? நாயகனுக்கு வாய்த்த அடிமைகள் மூவருக்கும் என்ன ஆனது என்பதை 'அடல்ட் ஒன்லி காமெடி' சேர்த்து சிரிக்க சிரிக்க கதை சொல்கிறது 'எனக்கு வாய்த்த அடிமைகள்'. 

சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் ஜெய், வீக் என்ட்டைக் கொண்டாட வாரா வாரம் ஆரவாரமாக அவரது நண்பர்களுடன் பிக்னிக் செல்வது வழக்கம். இந்த பிக்னிக் டிரிப்பில் பிரணிதாவையும் பிக்அப் செய்ய. இருவரும் தங்கள் காதலைச் சொல்லும் முன்பே 'கிஸ்கா' (அதுதாங்க கசமுசா) நடந்து முடிந்துவிடுகிறது. சில மாதங்களில் பிரணிதா ஜெய்யைக் கழட்டிவிட்டு  வேறு ஒருவருடன் கமிட் ஆகிறார். இது தெரிந்ததும் மனமுடையும் ஜெய், தற்கொலை எண்ணத்திற்குச் செல்கிறார். இதை சரி செய்யச் சொல்லி மனோதத்துவ நிபுணரான தம்பிராமையாவை சந்திக்கிறார். அங்கிருந்து துவங்குகிறது கதை. அதற்குமேல் என்ன ஆகிறது என்பதை மேலே உள்ள பாராவிலேயே சொல்லியாச்சு. இந்தக் கதைக்கு ஏற்றபடி காமெடி மிக்ஸ் பண்ணிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மகேந்திரன் ராஜமணி. 

காமெடியாக கதை சொல்ல வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே அடல்ட் ஜோக்ஸைத் தூவியிருப்பது நெருடல். அதுவும் இந்தப் படத்துக்கு யூ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதுதான் இருப்பதிலேயே பெரிய ஜோக். (நம்ம சென்சார் போர்டுக்கு என்ன தான் ஆச்சு?)

இதுவரை, தான் நடித்த எல்லாப் படங்களிலும் எப்படி நடித்தாரோ, அப்படியே இந்தப் படத்திலும் ஜெய். தனது ஃப்ளாஷ்பேக்கை வெறித்தனமாகச் சொல்லி தம்பிராமையாவைக் கலங்கவிடுவது, படத்தின் முதல் பாதி முழுக்க ஒரே அறைக்குள் ஒற்றை ஆளாக பெர்ஃபார்ம் செய்தே சமாளிப்பது, 'கடைசியில பிரேம்ஜி பாட்டுக்கு எல்லாம் டான்ஸ் ஆட விட்டுட்டாங்களே...' என்று டயலாக் அடித்து மட்டையாவது, விஷத்தைக் குடிக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பது என ஜெய் தனது வழக்கமான நடிப்பிலேயே ஃப்ரீ ஹிட் அடிக்கிறார். ஜெய்யைத் தேடி அலையும் அடிமைகளான 'ஷேர் ஆட்டோ டிரைவர்'  காளிவெங்கட், 'பேங்க் கேசியர்' கருணாகரன், 'கஸ்டமர் கேர்' நவீன் என மூவரின் காமெடியும் படத்தை ஜாலி மூடிலேயே வைத்திருக்கிறது.

ஹீரோயின் என சொல்லப்பட்டாலும் கெஸ்ட் ரோலிலேயே வந்து போயிருக்கிறார் ப்ரணிதா. அதுவும் காதலனோடு பார்ட்டி கொண்டாடும் ஹோட்டலின் பாத்ரூமிலேயே இன்னொருவருடன் நெருக்கமாக இருக்கும் விவகாரமான ரோல். 

மொட்டை ராஜேந்திரன், நவீன் அண்ட் கோ ப்ரெண்ட்ஸ், லொள்ளு சபா மனோகர் என படம் நெடுக காமெடியன்களை அலையவிட்டு ஏதோ ஒரு விதத்தில் ரசிக்க வைக்கிறார்கள். அதுவும் ரவுடி மொட்டை ராஜேந்திரனை அவரது எதிரிகள் போட்டுத் தள்ளுவதற்காகச் சுற்றி வளைக்க, அவரைக் காப்பாற்றி அழைத்துவரும் காட்சியின் பின்னணியில் அர்விந்த் சுவாமி, மனிஷா கொய்ராலா ஓடும் 'பம்பாய்' படத்தின் பின்னணி இசை ஒலிக்கும்போது, தியேட்டர் தெறித்துச் சிரிக்கிறது. (ஆனால் அந்தக் காட்சியிலும் அடல்ட் காமெடி!)

 ஒட்டுமொத்தப் படத்திலேயே போர் அடிக்கும் பகுதி, படவா கோபி நடத்தும் டி.வி. டாக் ஷோவும் அதில் சந்தானம் கருத்து சொல்வதும்தான். முதல் பாதி முழுக்க காமெடியில் நகர, மீதிப் படம் கொஞ்சம் யூ டேர்ன் அடித்து சுற்றி மீண்டும் கதைக்கு வருகிறது. க்ளைமாக்ஸில் ஆச்சர்யம் அளிக்கும் கெஸ்ட்ரோல் என்ட்ரி. சந்தோஷ் தயாநிதி இசையில் 'கண்ணாடிப் பூவுக்கு' மெலடியும், 'மண்ணெண்ணெய், வேப்பெண்ணெய்' பாடலும் செம. அதிலும் 'மண்ணெண்ணெய்' பாடலை டி.வி. நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து காட்சிப்படுத்தியிருக்கும் விதம் கவர்கிறது.  

இன்னொரு படமான போகனுடன் இந்த வாரம் வியாழனன்றே வெளியாகிவிட்டது இந்தப் படம். என்னதான் காமெடி கலகல என்றாலும் எப்போது பார்த்தாலும் பெண்களை ஏமாற்றுக்காரர்களாகவும் ஆண்களைப் பரிதாபத்துக்கு உரியவர்களாகவும் சித்தரிப்பதும், அதற்காக அபத்தமான வசனங்களை அள்ளித் தெளிப்பதும் அருவருப்பூட்டுகிறது. குறிப்பாக ஜெய் பேசும் வசனங்கள் முழுக்க, பசங்க காதல் தான் தெய்வீகம், விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டது, உண்மையான தமிழர் என்றால் பகிரவும்... ப்ளா ப்ளா ப்ளா ரேஞ்சில் இருப்பது மெகா சைஸ் கடுப்பு. சந்தானம் டி.வி. ஷோவில் 'கருத்து' என்று நினைத்து உதிர்க்கும் முத்துகள் இன்னும் அபத்தம். இன்னும் எத்தனை படத்தில்தான் இந்தக் கொடுமையைச் சகித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று தெரியவில்லை.

அடுத்த கட்டுரைக்கு