Published:Updated:

நடிப்பு, இசை மட்டுமல்ல... இதிலும் சிம்புதான் பெஸ்ட்...!

நடிப்பு, இசை மட்டுமல்ல... இதிலும் சிம்புதான் பெஸ்ட்...!
நடிப்பு, இசை மட்டுமல்ல... இதிலும் சிம்புதான் பெஸ்ட்...!

நடிப்பு, இசை மட்டுமல்ல... இதிலும் சிம்புதான் பெஸ்ட்...!

ஃபேஷன், சினிமா இரண்டும் ஒன்றுக்கொன்று பரஸ்பர ஈர்ப்பு கொண்ட கலைத்துறைகள். சினிமாக்களில் நடிகர்கள் அணியும் ஆடைகளே  ட்ரெண்டில் உள்ள ஃபேஷனில் பெரும்பான்மையான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று சொல்லலாம். அப்படி, நம் ஊரில் சினிமா மூலமாக ஃபேஷனில் பல மாற்றங்களை புகுத்தியவர்களில் மிக முக்கியமானவர் தேசிங்கு ராஜேந்தர் சிலம்பரசன் எனும் எஸ்.டி.ஆர் எனும் சிம்பு.

அன்று சினிமாவில் ரஜினி அணியும் ஆடைகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. ஜீன்ஸ் சட்டைகள், பன்க் மோட்டோ ஜாக்கெட்டுகள், லெதர் ஜாக்கெட்டுகள், நீளமான நியூ ராக் ஃபேஷன் பூட்கள் என விதவிதமான ஆடை, அணிகலன்களை பாடல்களில் பெரும்பாலும் அணிந்து வருவார். அதனால் ஈர்க்கபட்டவர்கள், அந்த ஆடைகள் நம் ஊர் தட்பவெட்ப சூழ்நிலைக்கு பொருந்தாத போதிலும் அணிந்து மகிழ்ந்தனர். ரஜினிக்கு அடுத்ததாக ஆடை விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கொண்டவர் விஜய். ஷார்ட் ஷர்டுகள், கார்கோ பேன்ட்டுகள், பூட் கட் போன்றவை விஜய் படங்களில் அணிந்து நடித்தபின்பே தான் இங்கே பிரபலமானது. ஆனாலும், இவர்கள் இருவரும் ஆடை மற்றும் அணிகலன்களில் கவனம் செலுத்திய அளவிற்கு புது லுக், புது ஹேர்ஸ்டைல்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை. இங்கு தான் சிம்பு தனித்து நிற்கிறார். புது ஸ்டைல் ஆடை, அணிகலன்கள் மட்டுமல்லாது புது ஹேர்ஸ்டைல்கள், புது ஃபேஷியல் ஹேர்ஸ்டைல்கள் போன்றவற்றிலும் புதுமையைப் புகுத்தி புகுந்து விளையாடுவார்  சிம்பு.

சிம்பு  ஹீரோவாக நடித்த இரண்டாவது படம் 'தம்'. இந்த படத்தில் 'பிளேடு' உருவில் டாலர் ஒன்றை கழுத்தில் அணிந்திருப்பார். அந்த டாலர் பட்டித்தொட்டி எங்கும் படு பிரபலமடைந்தது. 'பிளேடு' டாலர் அணிவதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் திட்டி தீர்த்தாலும், அதன் விற்பனை படு ஜோராக நடந்தது. அதே படத்தில், கைகளில் கறுப்பு கலர் லெதர் பேண்டுகள், கயிறு மற்றும் சில்வர் பிரேஸ்லேட் போன்றவற்றை மொத்தமாக அணிந்து படா சைஸ் மோதிரம் ஒன்றும் அணிந்திருப்பார். அதுவும் அன்று இளைஞர்கள் மத்தியில் செம ட்ரெண்ட். கைகளில் அணிந்திருப்பவற்றை மக்களுக்கு காட்டவே, விரல்களை ஆட்டி காண்பித்து 'விரலாட்டி நடிகர்' என்ற பட்டப்பெயரை வாங்கி கொண்டார். ஹிஹி...

அடுத்ததாக நடித்த 'அலை' படத்தில் க்ளீன் ஷேவ், ஸ்ட்ரெய்ட்னிங் செய்யபட்ட ஹேர் ஸ்டைல் என கொஞ்சம் 'எலைட்' லுக்கில் இருப்பார். புருவத்தில் வளையம், நெற்றியில் எலாஸ்டிக் பேண்டு, சட்டை ஸ்லீவ்களில் நாடா, கான்ட்ராஸ்டான கலர்களில் பொத்தான்கள் என 'குத்து' படத்தில் வேற லுக்கில் இருப்பார். படம் ரிலீஸான பிறகு,  ஸ்லீவ்களில் நாடா வைத்தும், கான்ட்ராஸ்டான பொத்தான்கள் வைத்தும் தைக்க சொல்லி டெய்லர்களுக்கு ஆர்டர் குவிந்தது. அதேபோல், 'மன்மதன்' படத்தில் மெல்லிய ஒயர் பேண்ட் ஒன்று அணிந்து வருவார் சிம்பு. அப்போது, செம பிரபலமாக இருந்த ஒயர் பேண்டை இன்றும் சிலர் அணிந்து வருகிறார்கள். மன்மதன் படம் வந்த சமயம், இந்த பேண்டுகள் கடைகளில் கிடைக்காமல் எலெக்ட்ரிக் ஒயர்களையும், டயர்களை அறுத்தும் ஆண் சமூவம் கைகளில் அணிந்து கொண்டு திரிந்தது.

வல்லவன் படத்தில் 'ஹிப்ஹாப்' ஸ்டைல் காஸ்ட்யூம்களில் பட்டையை கிளப்பியிருப்பார். ஸ்லீவ் லெஸ் டி-ஷர்டுகள், விரல் மற்றும் மணிக்கட்டுகளில் பேண்டுகள், காது முழுக்க ஸ்டட்டுகள், டாட்டூ, ஹிப்ஹாப் தொப்பி என செம ஸ்டைலாக இருப்பார். 'வல்லவன்' வந்த பிறகு தான் நம் ஊரில் விரல் பேண்டுகள் விற்பனை ஆரம்பமானது. லூஸு பெண்ணே பாட்டில் அவர் அணிந்து வரும் காஸ்ட்யூம்கள் அன்று பலருக்கு கனவு காஸ்ட்யூம்கள்.

கிருதாவில் கோடுபோடும் கலாச்சாரமும் 'வல்லவனில் ஆரம்பித்ததுதான். காளை படத்தில் லாங் ஸ்ட்ரெய்ட்னிங் ஹேர்ஸ்டைல், 'விடிவி'யில் ஃபார்மல் உடைகள்,  'சிலம்பாட்டம்' படத்தில் வேட்டி,சட்டையில் என எல்லா ஸ்டைலுமே சிம்புவுக்கு பக்காவாக பொருந்தும். அதன் பிறகு சிம்பு தான் நடித்த படங்களில் 'ஸ்ட்ரீட் ஃபேஷனை' கையில் எடுத்தார். போடா போடி படத்தில் 'இங்கிலாந்து ஸ்ட்ரீட் ஃபேஷன் ஸ்டைலில் அவர் அணிந்திருக்கும் அனைத்து ஆடைகளும் அவ்வளவு அழகாக இருக்கும். போடா போடி படத்திற்கு பின்பு தான் இப்போதையஃபேஷனான 'ஹாரெம்' பேண்ட்டுகள் இங்கே பிரபலமானது. இப்படி, நிறைய ஃபேஷன்களை அவர் முயற்சித்து அது வெற்றியடைய காரணம் நிச்சயம் அவரது உடல்வாகு தான். அதனால், சீக்கிரமே ஸ்லிம்மாகி பழைய சிம்புவா வாங்க மிஸ்டர் எஸ்.டி.ஆர்...

-ப.சூரியராஜ்

அடுத்த கட்டுரைக்கு