Published:Updated:

‛காலண்டர்ல குறிச்சு வைச்சிக்கோங்க அந்த நாளை..?!’ - ஞானவேல் ராஜாவுக்கு தமிழ் ராக்கர்ஸ் பதில்

‛காலண்டர்ல குறிச்சு வைச்சிக்கோங்க அந்த நாளை..?!’ - ஞானவேல் ராஜாவுக்கு தமிழ் ராக்கர்ஸ் பதில்
‛காலண்டர்ல குறிச்சு வைச்சிக்கோங்க அந்த நாளை..?!’ - ஞானவேல் ராஜாவுக்கு தமிழ் ராக்கர்ஸ் பதில்

‛காலண்டர்ல குறிச்சு வைச்சிக்கோங்க அந்த நாளை..?!’ - ஞானவேல் ராஜாவுக்கு தமிழ் ராக்கர்ஸ் பதில்

பிச்சைக்காரன், சைத்தான் படங்களின் வெற்றிக்குபிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'எமன்'. விஜய் ஆண்டனியை 'நான்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஜீவா சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மியா ஜார்ஜ், தியாகராஜன், சங்கிலி முருகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் 'ஸ்டுடியோ க்ரீன்' ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று, படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தனர்.

'விஜய் ஆண்டனி எனது நல்ல நண்பர். இப்படத்தின் பாடல்களை கேட்கும்போது அவருடைய வளர்ச்சி தெரிகிறது. ஜீவா சங்கருக்கு இந்தப்படம் அவர் சினிமா வாழ்க்கையில் நல்ல திருப்பு முனையாக அமையும்' என்றார் ஞானவேல்ராஜா. அதைத் தொடர்ந்து 'புதுப்படங்களை இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றிவரும் 'தமிழ் ராக்கர்ஸ்' இணையத்தை கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசினார்.

ஞானவேல் ராஜா பேசுகையில் '‛போகன் படம் சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது. ரிலீஸான அன்றே ஃபேஸ்புக்கில் அப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அதை கிட்டதட்ட இரண்டரை லட்சம் பேர் பார்த்து ஷேர் செய்துள்ளார்கள். இந்த படத்திற்காக அதன் தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருப்பார்; எவ்வளவு ரிஸ்க் எடுத்திருப்பார். இதைப் பார்க்கையில், அவரது மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்' என ஆத்திரமடைந்தார்.

மேலும், 'தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த 'அத்தாரின்டிகி தாரெடி' எனும் படம் எடிட் ஷூட்டிலிருந்து லீக் ஆனது. அப்போது பவன் கல்யாண் தனது ரசிகர்களை டிவிடியிலோ, இணையத்திலோ பார்க்க வேண்டாம், திரையரங்கிற்கு வந்து பாருங்கள் என வேண்டி கேட்டுக்கொண்டார். ஏழு நாட்கள் பொறுமையாக காத்திருந்து பின்னர் திரையரங்கில்தான் அப்படத்தை ரசிகர்கள் பார்த்தனர். ஆனால், இங்கே ஃபேஸ்புக்கில் முழுப்படத்தையும் ரிலீஸ் செய்யும் தைரியம் ஒருவனுக்கு இருக்கிறது. 'சி-3' படம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணிக்கே லைவ் ஸ்ட்ரீமிங் செய்கிறோம் என தமிழ் ராக்கர்ஸ் பதிவு போட்டிருக்கிறார்கள்.

ஃபைனான்ஸ் சரி செய்து படம் வெளியாகுமா இல்லையா என்ற பிரச்னை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் இவர்கள் 'நான் 11 மணிக்கு லைவ் போடுவேன்’ என உறுதியளிக்கிறார்கள். இதை ஒட்டுமொத்த திரையுலகமும் வேடிக்கை பார்த்துக்கொன்டிருக்கிறது. என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

‛டேய்...தமிழ் ராக்கர்ஸ்... உன்னை 6 மாதத்தில் தேடிப்பிடித்து உள்ளே போட்டு, அதை லைவ் ஸ்ட்ரீம் செய்வேன்’. நமக்குள்ளேயே, எனக்கு அவரைப் பிடிக்கவில்லை, இவரைப் பிடிக்கவில்லை என்று உட்கார்ந்திருந்தோம் என்றால், தொலைக்காட்சி சீரியல்கள் வரிசையில் நமது திரைத்துறையும் சேர்ந்துடும். இது நடக்காமல் இருக்க வேண்டும் எனில், நல்ல முடிவுகளை உடனே எடுக்க வேண்டும். இதைச் சொல்ல இந்த மேடையைப் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்' என்றார் ஞானவேல் ராஜா.

பின்னர் 'மக்களுக்கு எந்த கோபத்தை எங்கே காட்டணும்னு தெரியமாட்டேங்குது. ஓட்டுப் போட்டு யாரை ஜெயிக்க வெச்சோமோ அவங்களைத் தவிர மற்றவர்களிடமே அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அமைச்சர்களை நாம எந்த கேள்வியும் கேட்பதில்லை. ஆனால், நடிகர்களை குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம். எதுக்கு இவ்ளோ குற்றச்சாட்டு? எல்லா நடிகர்களுமே பல விதங்களில் மக்களுக்கு உதவி செஞ்சுட்டுதான் வர்றாங்க. உங்களை மகிழ்விக்கணும்னு தான் நாங்க ராப்பகல் பார்க்காமல் உழைக்கிறோம். அதற்கான மரியாதையை சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கணும்' என கேட்டுக்கொண்டார்.

இதற்கு தமிழ் ராக்கர்ஸ் இணையமானது அவர்களது முகநூல் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளது. ' நல்லா பேசுனீங்க ஞானவேல்ராஜா சார். உங்க காலண்டரில் குறிச்சு வைச்சுக்கோங்க... பிப்ரவரி 9ஆம் தேதி உங்களுடைய நாள் கிடையாது. எங்களுடைய நாள்' என பதிவுட்டுள்ளார்கள். பதிவிட்ட சில மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தின் ட்விட்டர் பக்கம் அழிக்கபட்டுவிட்டது.

- ப.சூரியராஜ் 

அடுத்த கட்டுரைக்கு