Published:Updated:

நானிக்கு இதெல்லாம் சாதாரணம், ஆனால்... - நேனு லோக்கல் படம் எப்படி?

நானிக்கு இதெல்லாம் சாதாரணம், ஆனால்... - நேனு லோக்கல் படம் எப்படி?
நானிக்கு இதெல்லாம் சாதாரணம், ஆனால்... - நேனு லோக்கல் படம் எப்படி?

நானிக்கு இதெல்லாம் சாதாரணம், ஆனால்... - நேனு லோக்கல் படம் எப்படி?

'நேனு லோக்கல்' இந்த வருடத்தில் நானி நடிக்கும் முதல் படம். சென்ற வருடத்தில் நானி நடித்த ‛க்ருஷ்ணகாடி வீர ப்ரேம கதா’, ஜென்டில்மேன், மஜ்னு படங்களில், ஜென்டில்மேன் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான படம். தமிழில் நவரச நாயகன் கார்த்தி நடித்த சந்தித்தவேளையிலே படத்தின் அதே கான்செப்ட்தான். அதைக் கொஞ்சம் த்ரில்லராக கொடுத்தால் எப்படி இருக்கும்? நானி நடித்த ஜென்டில்மேன் மாதிரி இருக்கும். இந்த மூன்று படங்களும் ஓரளவுக்கு ஓடி வசூலும் செய்தது. 

'நேனு லோக்கல்' படத்தில் முழுக்க காமெடியை மட்டும் பெரிதாக நம்பி களம் இறங்கியிருக்கிறார் நானி. ஓரளவு வேலையும் செய்திருக்கிறது. இன்ஜினியரிங்கில் அரியர் எக்ஸாமிலேயே செஞ்சுரி போடும் அளவுக்கு எழுதிக் கொண்டே இருக்கிறார் பாபு (நானி), ஆனால் பாஸ் மட்டும் ஆகவில்லை. ஒவ்வொரு முறை நானி தேர்வுக்கு வரும் போதும், மேற்பார்வையாளராக வரும் சச்சின் கேல்கரே கடுப்பாகிறார். ஒருகட்டத்தில், பாஸ் ஆகித் தொலை என அவரே பிட் அடிக்க புக்கை எடுத்துக் கொடுக்க, நானி பாஸ் ஆகிறார். நெக்ஸ்ட் என்ன என யோசிக்கும் போது கீர்த்தியைப் பார்க்கிறார். பார்த்ததும் காதல். பின்னாலேயே அலைந்து தொல்லை செய்து, அவருக்காகச் சண்டை போட்டு, அவரின் தோழி காதலைச் சேர்த்து வைத்து கீர்த்தி மனதில் இடம் பிடிக்கிறார் நானி. காலையில் நேரில் வந்து காதலை சொல்கிறேன் என்கிறார் கீர்த்தி. ஆனால், அடுத்த நாள் பிரச்னை தான் வருகிறது. கீர்த்தியை ஒரு தலையாகக் காதலித்த நவீன் சந்திரா தான் அந்தப் பிரச்னை. என்ன பிரச்னை..  பிறகு என்ன ஆகிறது..  என்பது மீதிக் கதை. 

முன்பு சொன்னது போல காமெடியும், டைமிங்கும் நானிக்கு பக்காவாக வருகிறது. சச்சின் கேல்கரைக் கலாய்ப்பது, கீர்த்தியைக் காதலிக்க வைப்பதற்காகப் பின்னாலேயே சுற்றுவது, விநாயகருக்கு வணக்கம் வைக்காமல் போகும் ஈகோ, 'சிகரெட் பிடிச்சா லோக்கல்னாலும் சரி லோக்கல் இல்லனாலும் சரி, செத்திருவிங்கடா டேய்' என வார்னிங் துவங்கி படத்துடன் நம்மைக் கடைசிவரை கட்டிப் போடுவது நானி தான். 

இத்தனை வருடமாகக் காதல் படங்கள் பார்த்து வருபவர்களுக்கு, கீர்த்தியின் ரோல் பற்றி விவரிக்க அவசியம் இல்லை. அதே தான்.. 'என் பின்னால சுத்துறது தவிர உனக்கு வேற வேலை இல்லயா?' எனக் கேட்டு கடுப்பாகி, பின்பு காதலில் விழும் கதாபாத்திரம். புதிதாக நடிக்கவோ, செய்யவோ அவருக்கும் ஒன்றும் கொடுக்கப்படவில்லை. என்ன ஒன்று, ஹீரோ தொல்லை தாங்காமல் மோசமான மேக்கப் மூலமாக அவரை விரட்டத் திட்டம் போடுகிறார் என்று ஒரு சீன் வைத்திருந்தால் கச்சிதமாக பொருந்தியிருக்கும். காரணம் படத்தில் கீர்த்தியின் மேக்கப் அப்படி! ரெமோ பார்த்தவர்கள் இந்தப் படம் பற்றி பெரிதாக அலட்டிக்கத் தேவை இல்லை தான். சிவா போல நானி நர்ஸ் கெட்டப் போடவில்லை, இதில் நானிக்கு விடப்படும் சவால், சிவாவுக்கு ரெமோவில் இல்லை. அவ்வளவு தான் வித்தியாசம். மற்றபடி சேம் கதை. 

நவீன் சந்திரா, ஈஸ்வரி ராவ், போத்சானி கிருஷ்ண முரளி, துளசி ஆகியோரின் டீமில் சச்சின் கேல்கருக்கு மட்டும் இறங்கி ஆட இடம் கிடைக்கிறது. மற்றவர்களுக்குக் கொஞ்சம் நீளமான கெஸ்ட் ரோல் தான். 

'அதிகாலைல எழுந்து ஒரு பொண்ணு படிச்சிட்டிருந்தா அது மார்ச்னு அர்த்தம். அதுவே ஒரு பையன் எழுந்து படிச்சா அது செப்டம்பர்னு அர்த்தம்', 'நான் போடுற சத்தத்தால இந்த க்ளாஸே டிஸ்டர்ப் ஆகுது. நீ மட்டும் ஏன் டிஸ்டர்ப் ஆகமாட்ற? என்ன போறாத காலம்?', என அடிக்கடி சில வசனங்கள் மூலம் சிரிப்பூட்டிக் கொண்டே இருக்கிறார்கள் எழுத்தாளர்கள் பிரசன்ன குமார், பேஸவாடா. அந்த போலீஸ் ஸ்டேஷன் கம்ப்ளெய்ன்ட் சீனும் செம ரகளை. ஆனால் முழுவதும் காமெடி டோனில் செல்கிறது படம். அதனால் முடியும் தருணத்தில் கொஞ்சம் சீரியஸான சீன், சென்டிமென்ட் டயலாக் எல்லாம் வரும் பொழுது, நாடகத்தனமாக இருப்பது போல தெரிகிறது. காரணம் அதுவரை நிறைய காமெடியாகவும், கொஞ்சம் இயல்பாகவும் செல்லும் கதை, திடீரென சென்டிமென்ட்டாக மாறும் பொழுது, கொஞ்சம் செயற்கையாக இருப்பது போன்ற எண்ணம் வருகிறது. ஆனால், இயக்குநர் த்ரிந்தா ராவ் நகினா தான் திட்டமிட்ட படத்தை எந்தக் குறையும் இன்றி தந்திருக்கிறார். அது மட்டும் ஆடியன்ஸுக்கு போதவில்லை என்பது தான் பிரச்னை.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில், ‛நெக்ஸ்ட் ஏன்டி’, ‛டிஸ்டர்ப் சேஸ்த்தா நின்னு’ பாடல்கள் இரண்டும் ஆட்டம் போட வைக்கிறது. ஆனால், 'இதை வேறு ஏதோ தெலுங்குப் படத்தில் கேட்டிருக்கோமே, அதுக்கு கூட தேவி ஸ்ரீபிரசாத் தானே மியூசிக்' என்ற யோசனை எழுகிறது. நிஸார் ஷஃபி கேமிரா படத்தையும், பாடல்களை கலர்ஃபுல்லாக பதிவு செய்திருக்கிறது. 

நானிக்கு இப்படிப்பட்ட படங்கள் எல்லாம் அசால்ட்டாக செய்யவரும். நடிப்பு சிறப்பாய் வருகிறது, டான்ஸ், காமெடி, ஆக்‌ஷன் எந்த ரோலையும் நன்றாகச் செய்கிறார். இருந்தும் இன்னும் காதலில் ஜெயிக்க சிரமப்படும் இளைஞன் ரோலிலேயே நடிப்பது வருத்தமளிக்கிறது. இடையில் எவடே சுப்ரமண்யம், பலே பலே மகாடிவோய், ஜென்டில்மேன் போல புது முயற்சிகளுக்கும் வாய்ப்பளித்து, பெர்ஃபாமன்ஸுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பரிசோதித்துப் பார்க்கும் நானி அதைத் தொடர்ச்சியாக செய்வதைப் பற்றி யோசிப்பது நல்லது.

அடுத்த கட்டுரைக்கு