Published:Updated:

இந்தக் கொடுமை எல்லாம் இல்லாத சண்டைக் காட்சிகள் எப்ப வரும்?

Vikatan Correspondent
இந்தக் கொடுமை எல்லாம் இல்லாத சண்டைக் காட்சிகள் எப்ப வரும்?
இந்தக் கொடுமை எல்லாம் இல்லாத சண்டைக் காட்சிகள் எப்ப வரும்?

தமிழ் சினிமாவுல கதை, திரைக்கதை எல்லாம் விடுங்க சாரே! அதைவிட அவசரமா மாற்ற வேண்டியது ஒண்ணு இருக்கு. சண்டைக் காட்சிகள். என்னதான் ஹாலிவுட் 'ஜுராசிக் பார்க்'ல டைனோசருக்கு டூப் போட்ட மாஸ்டராவே இருந்தாலும் கோலிவுட் வந்தா பேரரசு மாதிரி மாறிடுறாரு. இவங்களை எல்லாம் இப்படி மாத்திடுறதாலதான் விஷால் இன்னும் அப்டேட் ஆகாம பஸ் பிடிச்சுப் போய் சண்டை போட்டுகிட்டே இருக்கார். ஸோ டெக்னீஷியன்களே... நீங்க சண்டைக்காட்சிகள்ல மாற்ற வேண்டிய விஷயங்களோட லிஸ்ட் இதோ!

* பிளாக் அண்ட் ஒயிட் காலத்துல எல்லோரும் ஒண்டிக்கு ஒண்டியாதான் சண்டை போடுவாங்க. இந்த குரூப் வார், கேங் வார் எல்லாம் கலர் படம் வந்தபிறகுதான். அதுலேயும் நரம்பு எழ நிற்கிற ஹீரோவைப் பார்த்து முறைச்சுக்கிடே ஒரு ஓரமா நிற்கிற அடியாளைப் பார்ப்பார் வில்லன். உடனே பத்து மணிக்குக் கடை தேடி ஓடுற மாதிரி ஓடிப்போய் அடி வாங்குவார் அந்த ஒதுக்குப்புற அடியாள். ஒவ்வொருத்தரையா அடிச்சு கடைசில வில்லனைப் போட்டு வெளுப்பார் ஹீரோ. இதை முன்னாடியே பண்ணியிருந்தா இத்தனைப் பேரு அடி வாங்கியிருக்கவே தேவை இல்லையேய்யா!

* டி.டி.எஸ், டால்பி அட்மோஸ், ஆரோன்னு எக்கச்சக்க அப்டேட்கள் வந்தாச்சு. ஆனா, இன்னமும் சண்டைக் காட்சிகள்ல பயன்படுத்துற ஒரு சத்தம் இருக்கு... யெஸ்! ஹீரோ கையை காலை முறுக்குறப்போ வர்ற முறுக்கு உடையுற சத்தம்தான். நிஜத்துல கையைக் காலை எவ்வளவு ஆட்டுனாலும் வலிதான் வருதே தவிர சத்தம் வர மாட்டுதே! அப்புறம் ஏன் இந்த பில்ட் அப்பு?

* சுந்தர்.சி போன்ற இயக்குநர்கள்கிட்ட கேட்டே ஆக வேண்டிய கேள்வி இது. சண்டைக் காட்சிகள்ல உருட்டுக்கட்டைல அத்தனை அடி அடிச்சாலும் திரும்ப எழுந்து பாயற படா படா ஆளுங்க காமெடிக் காட்சிகள்ல மட்டும் அடிச்ச உடனேயே கீழே விழுந்து மயங்கிடுறாங்களே? காமெடிப் படம்னாலும் ஒரு லாஜிக் வேணாமா ஜி?

* தமிழ் சினிமாக்கள்ல அடியாட்களை விட அதிகமா அடி வாங்கினது டாடா சுமோவாதான் இருக்கும். பறக்கவிட்டு வெடிக்க வைக்கிறது, பார்ட் பார்ட்டா கழட்டி மேயறது, ஹீரோவை பேனட்ல உட்கார வெச்சு பங்கி ஜம்பிங் பண்றதுனு பாடா படுத்துறீங்களே! பாவம்ய்யா அந்த வாயில்லாப் பூச்சி. வி.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கய்யா!

* அது கார் அட்ராசிட்டின்னா இது ரயில் அநியாயம். பரபர சேஸிங் காட்சியில கரெக்ட்டா ஹீரோ தண்டவாளத்தைக் கடந்ததும் ரயில் சொய்ங்னு குறுக்கே விழுந்து பாய்ஞ்சு சேஸிங்கை முடிச்சு வைக்குதே... இன்னும் எத்தனைப் படத்துல? வில்லன் சுதாரிச்சுப் பின்னாலேயே கிளம்பினா கரெக்ட்டா அந்நேரம் இன்னொரு ரயில் வந்து பாய்ஞ்சு திரும்பத் தடுக்கும். அடுத்தடுத்து ரயில் வர்றதைக்கூட பொறுத்துக்கலாம் ப்ரோ! ஆனா சிங்கிள் ட்ராக்ல எதிரெதிர் டைரக்‌ஷன்ல எப்படி அடுத்தடுத்து ரயில் வரும்? ஸ்ஸ்ஸ்ஸ்!

* இதுதான் ரொம்ப முக்கியமான மேட்டர். மத்த விஷயங்களை எல்லாம் விடுங்க. அவ்வளவு அடி வாங்கின ஹீரோ தன்னால எழுந்து கை கால் சுளுக்கு, முதுகு தசைப்பிடிப்பு, மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட பத்து வகையான பிரச்னைகளையும் அவராவே குணப்படுத்திகிட்டு சண்டையை கன்டினியூ பண்றாரே! எப்படி இது? முடியலை ஜி!

-நித்திஷ்