Published:Updated:

ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவரையும் நெகிழ வைத்த எஸ்.எஸ்.வாசன் ஆவணப்படம்... இதுதான்!

வெ.நீலகண்டன்
ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவரையும் நெகிழ வைத்த  எஸ்.எஸ்.வாசன் ஆவணப்படம்... இதுதான்!
ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவரையும் நெகிழ வைத்த எஸ்.எஸ்.வாசன் ஆவணப்படம்... இதுதான்!

15 நிமிடங்கள் ஓடியது அந்த ஆவணப்படம். படம் முடிந்ததும் ஒட்டுமொத்த அரங்கும் ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கியது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த ரஜினியின் கண்கள் கலங்கியிருந்தன. முதல் எஸ்.எஸ்.வாசன் விருதைப் பெறத் தயாராக, மேடைக்கு அருகிலுள்ள அறையில் காத்திருந்த கமலஹாசனின் முகத்தில் பெருமிதம் ததும்பியது. கவிஞர் வைரமுத்துவிடம் மெல்லிய சிலிர்ப்பு வெளிப்பட்டது. விஜய், சிவகார்த்திகேயன் என்று அரங்கில் இருந்த அத்தனை பேருமே தம்மை மறந்து நெகிழ்ந்துதான் போயிருந்தார்கள். 

இன்று பெருவிருட்சமாக வளர்ந்து நிற்கும் ஆனந்த விகடனின் கர்த்தா எஸ்.எஸ்.வாசன் அவர்களின் வாழ்க்கையை உள்ளடக்கிய ஆவணப்படம் அது. ஜனவரி 13ம் தேதி, சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கும் விழாவில்தான் இந்த உணர்ச்சிமயமான காட்சி. தமிழ்த் திரையுலகமே மொத்தமாகத் திரண்டிருந்த இந்த மேடையில்,  திரையிடப்பட்டது இந்த ஆவணப்படம். 

திருத்துறைப்பூண்டியில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாயின் பராமரிப்பில் வளர்ந்த ஒருவர், தன் தீரா உழைப்பால் இதழியல் துறையிலும், திரைப்படத்துறையிலும் மிகப்பெரும் ஆளுமையாக வளர்ந்து, வரலாறாகிப் போன கதையை கருப்பு-வெள்ளை சித்திரமாக காட்சிப்படுத்தியது அந்த ஆவணப்படம். விகடனின் வரலாறாக மட்டுமின்றி தமிழகத்தின் மொத்த இதழியல் வரலாற்றையும் உள்ளடக்கிய இந்த ஆவணப்படம், நிகழ்வின் முத்தாய்ப்புகளில் ஒன்றாக அமைந்தது. 

கீழே உள்ள வீடியோவில் வைரமுத்துவின் அறிமுகத்தோடு 4.40வது நிமிடத்தில் ஆரம்பிக்கிறது எஸ்.எஸ்.வாசன் ஆவணப்படம். 1904 ஜனவரி 4ம் தேதி பிறந்த, சுப்பிரமணியம் ஸ்ரீனிவாசனுக்கு சொந்தம் என்று சொல்ல, அம்மா பாலாம்பாளைத் தவிர யாருமில்லை. இட்லிக்கடை நடத்தி தம் பிள்ளையை சிறப்புற வளர்க்கிறார் அந்தத் தாய். படிப்பு மட்டுமே தன் வாழ்க்கையை மாற்றும் என்று தெளிவாகப் புரிந்துகொண்ட ஸ்ரீனிவாசன், நன்றாகப் படித்தார். 1926ல் மேல்படிப்புக்காக சென்னை வருகிறார். சாலைகளை நிறைத்தோடும் டிராம் வண்டிகளும், மோட்டார் வாகனங்களுமாக பரபரத்துக் கிடக்கிற சென்னை, ஸ்ரீனிவாசனுக்கு புதுவிதமான அனுபவங்களைப் படிப்பிக்கிறது. பச்சையப்பன் கல்லூரியில் இணைந்த அவர், அம்மாவை வதைக்காமல் தன் சுய உழைப்பிலேயே படிப்பை முடிக்க நினைக்கிறார். பகுதிநேரமாக சிறு சிறு வணிகங்களில் இறங்குகிறார். ஆங்கில புத்தகங்களை மொழி பெயர்ப்பது, 1 ரூபாய்க்கு 144 பொருட்களை விற்பது, விளம்பரங்கள் சேகரித்து பத்திரிகைகளுக்குத் தருவது, ஓடும் ரயிலில் பேப்பர் விற்பது என தன் மனதுக்கு உகந்த வேலைகளை எல்லாம் செய்யத் தொடங்கினார். 

வித்தியாசமான சிந்தனை, சிந்தனையை செயல்படுத்தும் முனைப்பு, எந்த தடைகளையும் எதிர்கொள்ளத் தயங்காத தைரியம், இழப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படும் தீவிரம் போன்ற தனித்தன்மைகள் இயல்பிலேயே ஸ்ரீனிவாசனுக்கு இருந்தன. சிறு சிறு வணிகங்கள் மூலம் ஓரளவுக்கு காசு சேர்ந்ததும், தன் தாயை சென்னைக்கே அழைத்துக் கொள்கிறார். 

எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் இன்றி, தென்படும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்த முனைகிற ஸ்ரீனிவாசனுக்கு மெட்ராஸ் எலெக்ட்ரிசிடி சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து மாதம் 20 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. முதல் நாள் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது, அவரை சந்திக்கும் ஒரு மனிதர் ஸ்ரீனிவாசனுக்குள் புதிய சிந்தனையை விதைக்கிறார். கீழே உள்ள வீடியோவில் 8.53வது  நிமிடத்தில் பாருங்கள். மொழிபெயர்ப்பு வேலை. எலெக்ட்ரிசிடி வேலைக்குப் போய் ஒரு மாதத்தில் சம்பாதிக்கும் தொகை இரண்டு வாரத்தில் கிடைக்குமானால் அதையே தொழிலாகச் செய்யலாமே என்று முடிவெடுத்து வேலைக்குச் செல்லாமல் திரும்பி விடுகிறார். 

அடுத்த கட்டமாக, மொழிபெயர்த்து ஏன் பிறருக்குத் தர வேண்டும் என்ற சிந்தனை வர, சொந்தமாக புதிதாக ஒரு அச்சகம் வாங்க முடிவெடுக்கிறார். "புதிய அச்சகத்தை வாங்குவதற்குப் பதில் இயங்கிக்கொண்டிருக்கும் அச்சகத்தை வாங்கினால், அந்த வாடிக்கையாளர்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம்" என்று அம்மா ஆலோசனை சொல்ல, அர்த்தம் பொதிந்த அம்மாவின் அறிவுரையை ஏற்று இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு அச்சகத்தை வாங்கி, ஒரு ஆங்கில நூலை தமிழுக்கு மொழி பெயர்க்கிறார்.

அச்சிட்ட புத்தகத்தை விற்பனை செய்வதற்காக ஒரு மாத இதழில் விளம்பரம் கொடுத்து, முன்பணமும் கட்டிவிட்டு காத்திருந்தார். ஆனால், குறிப்பிட்ட நாளில் அந்த இதழ் வரவில்லை. அதனால் கோபமுற்ற ஸ்ரீனிவாசன், அந்த பத்திரிகை அலுவலகத்திற்குச் செல்கிறார். இந்த வீடியோவின் 11.02ல் ஆரம்பிக்கிற அந்தக் காட்சிகளும், பின்னணி இசையும் நிச்சயம் பார்க்கும் பலரையும் சிலிர்க்க வைக்கும்.  அந்தப் பத்திரிகையின் பெயர்தான் ஆனந்த விகடன். அதை பூதூர் வைத்தியநாதயர் என்பவர் நடத்தி வந்தார். பத்திரிகை பெரும் நஷ்டத்தில் இயங்குவதாகவும், இனிமேல் பத்திரிகை வெளிவராது என்றும் அவர் சொல்ல, சில நொடி சிந்தனைக்குப் பிறகு, "இந்தப் பத்திரிகை நிறுவனத்தை நான் வாங்கிக்கிறேன்... என்ன விலை எதிர்பார்க்கிறேள்" என்று கேட்கிறார் ஸ்ரீனிவாசன். அதிர்ந்து போன வைத்தியநாதயர், பின்னர் சுதாரித்துக் கொண்டு, "ஆனந்த விகடன்... 8 எழுத்து.... எழுத்துக்கு 25 ரூபாய் மேனி 200 ரூபாய் கொடுத்துட்டு வாங்கிக்கோ ஓய்" என்று சொல்ல நிறுவனம் கைமாறுகிறது. 

ஆனந்த விகடனை வாங்கிய ஸ்ரீனிவாசன், உடனடியாக அதற்கு புத்துயிர் ஊட்டும் வேலையில் இறங்குகிறார். முதல் வேலையாக ஆண்டு சந்தாவை இரண்டு ரூபாயில் இருந்து 1 ரூபாயாகக் குறைக்கிறார். பல போட்டிகளை அறிவிக்கிறார். அக்காலத்திய புதிய எழுத்தாளர்களை எல்லாம் இதழுக்குள் இறக்குகிறார். எழுத்து நடையை எளிய தமிழுக்கு மாற்றி, நிறைய கேளிக்கை சித்திரங்களை வரையச் செய்கிறார். சுவாரஸ்யமான துணுக்குகளை இடம்பெறச் செய்கிறார். படிப்படியாக ஆனந்த விகடன் வேறு தளத்திற்கு மாறியது. விற்பனை வளர்ந்தது. எப்போது இதழ் வரும் என்று கால்கடுக்க ரயில் நிலையத்தில் காத்திருந்து மக்கள் வாங்கினார்கள். மாதந்தோறும் வெளியான ஆனந்த விகடன் வெகு சீக்கிரமே வாரப் பத்திரிகையாக மாறியது. 

இதழியலில் வெற்றிகரமாக பயணித்த ஸ்ரீனிவாசன் அடுத்து இலக்கு வைத்தது சினிமாவின் மீது. சில படங்களை வினியோகம் செய்தார். ஆனால் அது லாபகரமாக இல்லை. அடுத்தகட்டமாக தான் எழுதிய சதி லீலாவதி கதை திரைப்படமாக வெளிவந்தது. அதில் ராமச்சந்திரனாக அறிமுகமானவர் தான் பின்நாளில் புரட்சித்தலைவராக, தமிழகத்தின் முதல்வராக மாறிய எம்ஜிஆர். 

வினியோகஸ்தராக, கதாசிரியராக சாதித்த ஸ்ரீனிவாசன் தயாரிப்பாளராக விரும்பினார். படத் தயாரிப்புக்கான பணிகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் மோஷன் பிக்சர்ஸ் என்ற ஸ்டூடியோ விற்பனைக்கு வந்தது. அதில் ஏற்பட்ட தீ விபத்தால் பலர் அதை வாங்க தயக்கம் காட்டினார். ஸ்ரீனிவாசன் தயங்காமல் அதை வாங்கி ஜெமினி ஸ்டூடியோ என்று பெயரிட்டு 600 பேரை பணியில் அமர்த்தினார். இந்தியாவில் பெரிய ஸ்டூடியோவாக அது மாறியது.

1948ல் இந்திய சினிமாவின் சாதனைகளில் ஒன்றாக இன்றளவும் கருதப்படும் ‘சந்திரலேகா’ படம் வெளிவந்தது. 40 லட்ச ரூபாய் பட்ஜெட். இன்றைய மதிப்பில் 225 கோடி. ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் 5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இதை வெளியிட ஸ்ரீனிவாசன் பட்டபாடு... வார்த்தைகளில் சொல்ல முடியாது. தொடக்கத்திலேயே இயக்குனர் ராகவாச்சாரி கருத்து வேறுபாட்டால் விலகினார். பதற்றமே இல்லாமல் தானே இயக்குனரானார். படம் முடிந்து விட்டது. வெளியிட பணமில்லை. கடன் தர ஆளில்லை. சிறுக சிறுக, தான் சேமித்த பணத்தைக் கொடுத்து மகனின் கவலை போக்குகிறார் தாய் வாலாம்பாள். 

"அம்மா... ஒருவேளை இந்தப்படம் சரியாப் போகலேன்னா நாம நடுத்தெருவுக்கு வந்திடுவோம்" என்று ஸ்ரீனிவாசன் சொல்ல, "அதனால என்னப்பா... இதுக்கு முன்னாடி நாம அங்கே தானே இருந்தோம். நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்சுத் தானே இந்த இடத்துக்கு வந்திருக்கோம். திரும்பவும் அங்கே போறதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்று அந்த தாய் சொல்லும் காட்சி ரஜினி உள்ளிட்ட பார்த்த அத்தனை விழிகளையும் நீர் அரும்ப வைத்தது. 

சந்திரலேகா படம்  ஸ்ரீனிவாசனை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அதை இந்திக்கும் கொண்டு சென்றார். இந்தித் திரையுலகம் மிரண்டு போனது. எல்லோரின் பார்வையும் "மெட்ராஸ்" மீது நிலை கொண்டது. தெலுங்கு கன்னடம், மலையாளம், குஜராத்தி, பெங்காலி என எல்லா மொழிகளிலும் தம் சுவடுகளை ஆழப் பதிவு செய்தது ஜெமினி ஸ்டூடியோ. 

ஸ்ரீனிவாசனின் பிறப்பில் தொடங்கும் இந்த ஆவணப்படம், அவர் எஸ்.எஸ்.வாசன் என மாறி வரலாற்று நாயகனாக பதிவானது வரையிலான கதையை உணர்வுப்பூர்வமாக பேசியது. ஆனந்த விகடன் விருது வழங்கும் விழாவை இந்தப்படம் அர்த்தமுள்ளதாகவும், கவித்துவமாகவும் மாற்றியது என்றால் அது மிகையில்லை!

வீடியோவிற்கு:

-வெ.நீலகண்டன்