Published:Updated:

இயக்குநர் கெளதம் மேனன்... அண்ணன் கெளதம் மேனன் யார் பெஸ்ட்? - தங்கை உத்தரா மேனன்

ஆர்.வைதேகி
இயக்குநர் கெளதம் மேனன்... அண்ணன் கெளதம் மேனன் யார் பெஸ்ட்? - தங்கை உத்தரா மேனன்
இயக்குநர் கெளதம் மேனன்... அண்ணன் கெளதம் மேனன் யார் பெஸ்ட்? - தங்கை உத்தரா மேனன்

​கெளதம் மேனன் படங்களில் காஸ்டிங் மட்டுமல்ல, காஸ்ட்யூம்ஸும் கதை பேசும். "கெளதமோட முந்தைய படங்கள்ல நளினி ஸ்ரீராம் ஒர்க் பண்ணியிருப்பாங்க. அவங்க ஒர்க் பிரமாதமா இருக்கும். அவங்க அளவுக்குப் பண்ணியிருக்கேனானு தெரியலை. ஆனாலும் வித்தியாசமா இருக்குனு கவனிக்க வச்சிருக்கேன்னு நினைக்கிறேன். ஐம் ஹேப்பி...''  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் உத்தரா மேனன் பேச்சில் உற்சாகம் பொங்கி வழிகிறது. இயக்குநர் கெளதம் மேனனின் அன்புத் தங்கை இவர்.

''கூடப் பிறந்த தங்கை என்பதால் இந்த சான்ஸை கெளதம் எனக்குக் கொடுத்துடலை. முன்னாடியே அவர்கூட சேர்ந்து ஒர்க் பண்ணியிருக்கேன். என் வேலையை, என் திறமையைப் பார்த்து நம்பிக்கை வந்த பிறகுதான் படத்துல ஒர்க் பண்ணக் கூப்பிட்டார்...'' என்கிற உத்தரா, ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்தவர்.

''ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்தே நிறைய மாடலிங் பண்ணியிருக்கேன். எங்கே வெளியில போனாலும் எல்லாரும் என்னைத் திரும்பிப் பார்க்கிற மாதிரி டிரெஸ் பண்ணுவேன். படிப்பை முடிச்சதும் என் ஃப்ரெண்ட்கூட சேர்ந்து 'காஸ்ட்டிங் கோ ஆர்டினேஷன்' கம்பெனி ஆரம்பிச்சேன்.  என் ஹஸ்பெண்ட் ரகு முத்தையா விளம்பர பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். அவரோட விளம்பரங்களுக்கு நான்தான் காஸ்ட்யூம்ஸ் டிசைன் பண்ணுவேன். அடுத்து கெளதம் டைரக்ட் பண்ணின சில விளம்பரங்களுக்கும் நான் காஸ்ட்யூம்ஸ் பண்ணினேன். கெளதம் கூட முதன்முதலில் வொர்க் பண்ணது அப்பதான்.

கெளதம் கூட ரெண்டு விளம்பரங்களுக்கு ஒர்க் பண்ணினதும், 'படத்துக்குப் பண்றியா?'னு கேட்டார். அப்ப என் பையன் ஷ்ரேவுக்கு இரண்டு வயசு. என்னால முடியுமானு யோசிச்சேன்.  என் அண்ணி, ஹஸ்பெண்ட் எல்லாரும் 'நாங்க பார்த்துக்கறோம்... தைரியமா பண்ணு'னு நம்பிக்கை கொடுத்தாங்க. 'ஓ.கே'னு சொன்னேன். 

'அச்சம் என்பது மடமையடா' படத்தில் மஞ்சிமா கேரக்டருக்கு நிறைய ஒர்க் பண்ணினேன். சவுத் இந்தியன் லுக்குல இருக்கிறதால, அவங்களை வேற மாதிரி காட்ட நினைச்சோம். படம் பார்த்தவங்க நீங்க டிரெஸ் பண்ற மாதிரியே மஞ்சிமாவுக்கு பண்ணிட்டீங்கனு பாராட்டினாங்க.

நான் முதல்ல ஆரம்பிச்ச படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஆனா அது கொஞ்சம் தாமதமானதால அதை நிறுத்திட்டு, 'என்னை அறிந்தால்' ஆரம்பிச்சோம். அதுவே என் முதல் படமாயிருச்சு...'' என்கிற உத்தரா தன்னை காஸ்ட்யூம் டிசைனர் என்று சொல்லிக்கொள்வதில்லை. ஸ்டைலிஸ்ட் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

''என்கிட்ட ஒரு கேரக்டரை சொன்னீங்கன்னா, அவங்களுக்கு எப்படி டிரெஸ் பண்ணலாம், என்ன கலர்ஸ் செட் ஆகும்னு எல்லாம் சொல்லிடுவேன். மும்பையில ஸ்டைலிஸ்ட்டுனு தனியா இருப்பாங்க. காஸ்ட்யூம் டிசைனிங்க்கு தனியா இருப்பாங்க. ஆனா நம்ம ஊர்ல எல்லாத்தையும் ஒருத்தரேதான் பண்ணணும். ஸ்டைலிங்னு வரும்போது உடைகள் மட்டுமில்லாம, வீடு, வீட்டுக்குள்ள இன்டீரியர், ஃபர்னிச்சர்னு எல்லாமே அடக்கம்தான்...' என புது தகவல் தருகிறார் உத்தரா மேனன்.  'மனம்' என்கிற தெலுங்குப் படத்துக்கு ராஜீவன் போட்ட வீடு செட்டுக்கு மொத்த இன்டீரியரும் இவர்தானாம்.

“என்னை அறிந்தால் படத்தில் வொர்க் பண்ணினப்ப த்ரிஷாவுக்கு பண்றதுக்கு நிறைய டைம் இருந்தது. ரொம்ப மெனக்கெட்டு நிறைய ஒர்க் பண்ணி புதுசா தைத்தோம். கண்ணெல்லாம் திக்கா வரைஞ்சு, பெரிய பொட்டு வச்சு, ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் கொடுத்து அவங்களை அந்த டான்சர் கேரக்டராவே மாத்திட்டோம்." என்கிறார்.

"பெண் காஸ்ட்யூம் டிஸைனர்கள் பரவலாக வந்த பிறகும் கூட, பாடல் காட்சிகளில் முக்கியமாக அயிட்டம் டான்ஸில் பெண்களின் ஆபாச ஆடையில் மாற்றமில்லையே?" 

“அது காஸ்ட்யூம் டிஸைனர் முடிவு பண்ற விஷயம் மட்டுமில்லை. அல்லு அர்ஜுனோட 'சரைனோடு' தெலுங்குப் படத்துல ரெண்டு பாட்டுக்கு ஒர்க் பண்ணியிருக்கேன். என்னோட முதல் அயிட்டம் நம்பர் அனுபவம் அதுதான். 'என்னை அறிந்தால்' படத்துல 'அதாரு அதாரு' பாட்டுல நிறைய மும்பைப் பொண்ணுங்க டான்ஸ் பண்ணியிருப்பாங்க. எல்லாருக்கும் தொப்புளுக்குக் கீழே புடவை கட்டி விட்டுட்டாங்க. அதைப் பார்த்துட்டு கெளதம் கடுப்பாயிட்டார். கெளதமுக்கு பெண்களை அப்படிக் காட்டறதெல்லாம் பிடிக்காது. முதல்ல எல்லாருக்கும் சேலையை ஏத்திக் கட்டிவிடுங்கனு சொல்லிட்டார். அப்படியொரு அனுபவத்தைப் பார்த்த எனக்கு இந்தப் படத்துல ரெண்டு அயிட்டம் சாங்ஸ் பண்ணினது வேற மாதிரி இருந்தது...''  என்கிற உத்தராவின் அடுத்த எதிர்பார்ப்பு அண்ணனுடைய இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா'.

"டைரக்டர் கெளதம் கண்டிப்பானவர் என்பது கேள்விப்பட்ட தகவல். அண்ணனாக கெளதம் மேனன் எப்படி? யார் பெஸ்ட்?"

''ரெண்டு பேரும் ரொம்ப அமைதியான டைப். இரண்டு பேருமே எனக்கு பெஸ்ட்தான்!   நாங்க ரொம்ப க்ளோஸ். வீட்ல அடிக்கடி ஏதாவது ஃபங்ஷன், கெட் டுகெதர்னு நடந்துக்கிட்டே இருக்கும். எல்லாரும் மீட் பண்ணுவோம். கெளதம் படங்கள்ல காஸ்ட்யூம்ஸ் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். அதைப் பத்தி அவர்கிட்ட யாராவது கேட்டாங்கன்னா, 'என் அம்மாவும் ரெண்டு தங்கச்சிங்களும்தான் இன்ஸ்பிரேஷன்'னு சொல்வார். 

சிலிர்க்கிறர் செலிப்ரிட்டி சிஸ்டர்!

- ஆர்.வைதேகி
படங்கள்: காளிமுத்து