Published:Updated:

சிரிச்சு விழுந்த செல்வா, ரவிகிருஷ்ணாவுக்கு அட்வைஸ்! கதிர் - அனிதா மீட்டிங் #15YearsOf7GRainbowColony

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால்
ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால் ( Photo: Jeevakaran / Vikatan )

`7ஜி ரெயின்போ காலனி' கதிர் - அனிதாவாகிய ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால் பேட்டி.

தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வந்திருந்தாலும், `7ஜி ரெயின்போ காலனி' படத்துக்கு என்றும் தனி இடமுண்டு. இந்தப் படத்தில் இடம்பெற்ற கதிர் - அனிதா ஜோடிக்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். செல்வராகவன் - யுவன் கூட்டணியில் உருவான இந்த கல்ட் கிளாசிக் திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி, கதிர் - அனிதாவாகவே நம் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால் இருவரையும் சந்திக்க வைத்து, அவர்களோடு சேர்ந்து நாமும் `7ஜி ரெயின்போ காலனி'க்குள் சென்று பழைய நினைவுகளைக் கேட்டறிந்தோம்.

``இத்தனை வருடத்துல நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து பேட்டி கொடுத்ததில்லை. இதுதான் முதல்முறை. அதுவும் `7ஜி ரெயின்போ காலனி'க்காகப் பேசுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு!" என்றவர்கள், அவர்களுக்குள் நலம் விசாரித்துக்கொண்டு பேட்டிக்கு அமர்ந்தனர்.

``கடைசியா 2006-ல் இவங்க கல்யாணத்துல பார்த்தது. அதுக்குப் பிறகு, ரெண்டுபேரும் சந்திச்சுக்கல. சமீபத்துல ஒரு ஹோட்டல்ல எதார்த்தமா மீட் பண்ணிக்கிட்டோம். அப்போ அவங்களைப் பார்த்ததும் `ஹாய்' சொன்னேனா, அவங்க வேற யாரோன்னு நினைச்சு `ஹலோ' சொல்லிட்டுக் கடந்து போயிட்டாங்க. அப்புறம், நான் மறுபடியும் `ஹலோ மேடம்... நீங்க என் முதல் பட ஹீரோயின். என்னை ஞாபகம் இருக்கா, நான் ரவிகிருஷ்ணா'ன்னு சொன்னவுடன், சர்பிரைஸாகி, `ஹையோ ரவி... எப்படியிருக்க'ன்னு கேட்டாங்க."

ரவிகிருஷ்ணா
ரவிகிருஷ்ணா

``ஆமா. கிட்டத்தட்ட 13 வருடம் கழிச்சு ரெண்டுபேரும் மீட் பண்ணோம். எனக்கு அடையாளமே தெரியல. ஆனா, ரவியைப் பார்த்தது எனக்கு இன்ப அதிர்ச்சிதான். அதை என் சோஷியல் மீடியாவுல அப்லோட் பண்ணவுடன் அந்த போட்டோவுக்கு செம ரெஸ்பான்ஸ்!" என்ற சோனியாவை ஆமோதித்த ரவிகிருஷ்ணா, ``மறுநாள் காலையில என் போனுக்கு அத்தனை நோட்டிஃபிகேஷன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் `அப்போ மட்டும் எப்படிடா அப்படி சிரிக்கிற'ன்னு கேட்டாங்க. அது என்னவோ அனிதாவை ரொம்ப வருடம் கழிச்சுப் பார்த்தவுடன் கதிரா மாறிட்டேன்" என்று சொல்லி, கதிரின் டிரேட் மார்க் சிரிப்பைச் சிரிக்கிறார். ஈ..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``முதல்ல இந்தக் கதைக்கு நான் ஹீரோ இல்லை. சூர்யா, மாதவன் இவங்க ரெண்டுபேர்கிட்டேயும் பேசிக்கிட்டிருந்தாங்க. இந்தக் கதை எனக்குத் தெரியும். எங்க அப்பாதான் தயாரிப்பாளர்ங்கிறதால இவங்ககிட்ட பேசுறோம்னு சொன்னதும் எனக்கும் `சூப்பர் சாய்ஸ்'னு தோணுச்சு. ஆனா, அந்த நேரத்துல ரெண்டுபேரும் வெவ்வேற படங்கள்ல பிஸியா இருந்ததால, `யார் அடுத்த சாய்ஸ்'னு பேச்சு வந்தது. புதுமுகத்தை வெச்சுப் போயிடலாம்னு முடிவு பண்ணாங்க. அந்த டைம்லதான் ஃபாரின்ல படிச்சு முடிச்சுட்டு நான் லீவுக்காக இங்கே வந்திருந்தேன். அப்பா செல்வா சாரை மீட் பண்ணச் சொன்னார். நான் அதைத் தவிர்த்துகிட்டே இருந்தேன். அப்புறம் ஒருநாள் மீட் பண்ணி, ரெண்டுபேரும் பேசினோம். அடுத்த மாசத்துக்குள்ள நான் உடம்பைக் குறைச்சுட்டேன். செல்வா சார், `ரவி இதுக்கு செட் ஆகமாட்டான்'னு அப்பாக்கிட்ட சொல்ல வர்ற நேரத்துல நான் ஆபீஸுக்குள்ள போனேன். நான் உடம்பைக் குறைச்சிருந்ததைப் பார்த்துட்டு, `உடனே போட்டோஷூட் பண்ணலாம்'னு சொல்லிட்டார்.

சோனியா அகர்வால்
சோனியா அகர்வால்
Vikatan

அதேமாதிரி, அனிதா கேரக்டருக்காக 300 பேரை ஆடிஷன் பண்ணாங்க. `சுப்ரமணியபுரம்' சுவாதிதான் இந்தப் படத்துல முதல்ல கமிட்டானாங்க. என்னையும் சுவாதியையும் வெச்சு 20 நாள் ஷூட்டிங் நடந்தது. அவங்க எம்.பி.பி.எஸ் படிச்சுக்கிட்டு இருந்ததனால அவங்களால இந்தப் படத்தைத் தொடர முடியல. அப்புறம், இந்தப் படத்துக்கான ஹீரோயினை எப்படித் தேடுறதுனு யோசிச்சப்போ, எங்க தயாரிப்புல `கோவில்' பட ஷூட்டிங்கை முடிச்சிருந்தாங்க சோனியா. சரினு அவங்ககிட்ட கேட்டதும், ஓகே சொல்லிட்டாங்க. இதுதான் கதிர் - அனிதா ஜோடி சேர்ந்த கதை!" என்று விவரித்தார் ரவிகிருஷ்ணா.

``ஆமா. `கோவில்' படத்துல 'மேல மேல மேல பறந்துப்புட்டேன்' பாட்டு எடுத்துக்கிட்டிருந்தோம். அதுதான் கடைசி நாள். அன்னைக்கு ஷூட்டிங் முடிச்சுட்டு ரூமுக்கு வந்துட்டேன். மறுநாள் காலையில எனக்கு சென்னைக்கு ஃப்ளைட். அதுக்கு எல்லாம் பேக் பண்ணி வெச்சுக்கிட்டிருந்தேன். எனக்கு ரத்னம் சார்கிட்ட இருந்து போன் வந்தது. `உங்களுக்கு சென்னைக்குப் பதிலா ஹைதராபாத்துக்கு டிக்கெட் போடச் சொல்றேன். இங்கே வந்திடுங்க'னு சொன்னார். எனக்கு ஒண்ணும் புரியல. அப்புறம்தான், `7ஜி படத்துல நீங்கதான் நடிக்கிறீங்க'னு சொன்னார். எனக்கு அந்தக் கதை ரொம்பப் பிடிக்கும். `காதல் கொண்டேன்' ஷூட்டிங் ஸ்பாட்ல என்கிட்டேயும் தனுஷ்கிட்டேயும் செல்வா இந்தக் கதை பற்றி அடிக்கடி பேசிக்கிட்டிருப்பார். அந்தக் கதையை கேட்கும்போதே அவ்வளவு சுவாரஸ்யமா இருந்தது. ஆனா, அவர் புதுமுகம் நடிச்சாதான் சரியா இருக்கும்னு நினைச்சார். கடைசியா, நான் ரசிச்ச அந்தக் கதையில நானே நடிக்கிறேன்னு செம சந்தோஷம். மறுநாளே ஹைதராபாத் கிளம்பிட்டேன்" என்று அனிதாவாக மாறிய கதையைச் சொன்னார் சோனியா.

ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால்
ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால்

``எடிட்டிங், மல்டிமீடியா, கிராஃபிக்ஸ்னு டெக்னிக்கலா படிச்சிருந்தேன். நடிப்பைப் பொறுத்தவரை ஒரு வொர்க் ஷாப் போயிருந்தேன், அவ்ளோதான். அப்பா, செல்வா சார்கிட்ட 'அவனுக்கு நடிப்பு எந்தளவுக்கு வரும்னு தெரியல'ன்னு சொல்லிட்டே இருந்தார். ஆனா, செல்வராகவன் சார்தான் `எல்லாம் நான் பார்த்துக்கிறேன்'னு சொல்லி, நடிக்க வெச்சார். அந்தப் படத்துடைய எமோஷனல் சீனெல்லாம் பண்ணிடலாம்னு நம்பிக்கை இருந்தது. ஆனா, முதல் பாதியில வர்ற ரஃபான கதிரை கொண்டுவர ரொம்ப சிரமமா இருந்தது. தினமும் செல்வா சார்கிட்ட திட்டு வாங்குவேன். ஒரு பாட்டுல `காலையில எழுந்ததும் காபிக்கு பதிலா சிகரெட்'னு ஒரு வரி வரும். அதுக்காக எடுத்த மான்டேஜ்தான் எனக்கான முதல் ஷாட். அதுவரை லுங்கி கட்டிக்கிட்டு அந்த மாதிரி நான் உட்கார்ந்ததில்லை. அதுவே பெரிய சவாலா இருந்தது. சிகரெட் பிடிக்கச் சொன்னதும், சும்மா பேருக்கு பண்ணேன். நல்லா உள்ளே இழுத்து புகையை விடச்சொன்னார். எனக்கு வாந்தி வந்திடுச்சு. அதுக்கு மட்டும் 16 டேக் ஆகிடுச்சு.

ஃபுட் போர்டு அடிச்சதில்லை, பைக்ல டபுள்ஸ் போனதில்லை... இந்த மாதிரி நான் அதுவரை பண்ணாத விஷயங்கள் படத்துல இருந்தது. அவர் கே.கே.நகர்ல வளர்ந்ததனால, அந்த உடல் மொழி, பேச்சு வழக்குனு எல்லாத்தையும் நடிச்சுக் காட்டுவார். அந்த பெர்ஃபெக்‌ஷன் எனக்கு வர்றவரை விடமாட்டார். ஒரு வசனத்தை 5 வெர்ஷன்ல டெலிவரி பண்ற அளவு தயார் பண்ணிட்டுப் போகணும். நிறைய விஷயங்கள் ஸ்பாட்லதான் எழுதித் தருவார். அவருடைய ரிதத்தைப் புரிஞ்சுக்க எனக்கு ஒரு மாசம் ஆச்சு" என்றவரை, தொடர்ந்தார் சோனியா.

ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால்
ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால்
இடி, மழை, மின்னல்... செல்வா, யுவன், நா.மு! #15YearsOf7GRainbowColony

``ஷூட்டிங் ஸ்பாட் செம ஜாலியா இருக்கும். நான், செல்வா, ரவி, அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ்... எல்லோரும் ஷூட்டிங் முடிச்சுட்டு நைட் ஷோ சினிமாவுக்குப் போவோம். நாங்கெல்லாம் ஒரு குடும்பமாவே மாறிட்டோம். நான் ஏற்கெனவே அவர் இயக்கத்துல நடிச்சுட்டதால, எனக்கு அவர் வொர்க் எப்படினு தெரியும். ஆனா, ரவிக்கு அதைப் புரிஞ்சு, அவர் ஸ்டைலுக்கு வர்றது சிரமமா இருந்தது. படத்துல கதிர் தங்கச்சின்னு நினைச்சு கதிர் தோள்மேல நான் கை போடுவேன். அது கதிர்னு தெரிஞ்ச பிறகு, வீட்டுக்கு வேகமா ஓடிவந்து வாமிட் பண்ற சீன்தான், என்னுடைய முதல் சீன். ரெண்டுபேருக்கும் முதல் சீன் வாமிட் பண்றதுதான்" என்று சோனியா சொன்னதும், ``எங்களுக்கான வேவ்-லென்த் அப்போவே ஆரம்பிச்சிடுச்சு பார்த்தீங்களா" என்று சிரித்த ரவிகிருஷ்ணா, கிரிக்கெட் மேட்ச் காட்சியைப் பற்றிப் பேசினார்.

``அந்த சீன் எடுக்கும்போது ரொம்ப வெயில். `இந்த சீன் வைடுதான் போறோம். அதனால நீ இஷ்டத்துக்குப் பேசுடா'னு சொல்லிட்டார், செல்வா. நானும் என் இஷ்டத்துக்குப் பேசிட்டேன். அது மைக்ல ரெக்கார்டாகி, `சூப்பரா இருக்கு. சின்னச் சின்ன கரெக்‌ஷன் மட்டும் பண்ணிக்கலாம்'னு சொல்லி டப்பிங்ல கொஞ்சம் வொர்க் பண்ணோம். அந்தக் கேரக்டருடைய விஷயங்களுக்கு எங்களை பொருத்தினதைத் தாண்டி, எங்க ரியல் கேரக்டருடைய சின்னச் சின்ன விஷயங்களெல்லாம் கவனிச்சு, அதை ஷாட்ல செய்யச் சொல்வார் செல்வா. `எவ்ளோ ஸ்டைலா ஆம்லேட் சாப்புடுவான் பாரு'ன்னு அப்பா சொல்ற சீனெல்லாம் நான் பிரேக்ல சாப்பிடுற மேனரிஸத்தை கவனிச்சு செல்வா படத்துல வெச்சது" என்று பழைய விஷயங்களைப் பற்றிப் பேசும்போது அவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால்
ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால்

``அதேமாதிரி, நான் என் அம்மாகிட்ட இந்தியில பேசுறதைப் பார்த்துட்டு, அதை அப்படியே `இந்த சீன்ல பேசுங்க'ன்னு சொன்னார். அதெல்லாம் ஒரு கட்டத்துல நான்தான் அனிதாங்கிற மாதிரி ஆகிடுச்சு. இது பைலிங்குவெல் படம். அதனால, தமிழ், தெலுங்கு ரெண்டு மொழியிலும் நடிக்கணும். பல டேக்குகளைத் தாண்டி, ஒரு டேக் ஓகே ஆகும். நாங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனா, `அடுத்து தெலுங்குல எடுக்கணும், கமான்'னு சொல்லிடுவாங்க. `மறுபடியும் முதல்ல இருந்தா'னு தோணும். செல்வா எப்படி எதிர்பார்க்கிறார்னு அந்த சீன் ஓகே ஆனவுடனே தெரிஞ்சுடும். அதனால, சில சீன் தமிழைவிட தெலுங்குல பண்ணும்போது சூப்பரா வந்திடும். அப்போ, `தெலுங்குல சூப்பரா வந்திருக்கு. அதேமாதிரி மறுபடியும் தமிழ்ல எடுத்திடலாம். ரெடி'னு சொல்வார்" என்ற சோனியாவை இடைமறித்த ரவிகிருஷ்ணா,

``படம் முழுக்க என்னை சோனியா அறைஞ்சுக்கிட்டே இருப்பாங்க. பஸ்ல செருப்பால அடிக்கிற சீன்ல, என்னை உண்மையாவே செருப்பால அடிக்கணும். ஒவ்வொரு டேக் போகும்போதும் எப்போடா முடியும்னு இருக்கும். `டேக் ஓகே'னு சொன்னவுடன் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். ஆனா, அது அடுத்த நிமிடத்திலேயே அந்த ரிலாக்ஸேஷன் காணாம போயிடும். ஏன்னா, `தெலுங்குல எடுக்கலாம்'னு சொல்லிடுவாங்க. இவங்ககிட்ட நான் அடி வாங்குனத்துக்குக் கணக்கே இல்லை' என நொந்துகொண்டார் ரவி.

``அதேபோல, என்னை அவர் அறையிற மாதிரி ஒரு சீன் இருக்கும். படம் முழுக்க நான் அடிச்சதுக்கெல்லாம் சேர்த்து அந்த சீன்ல என்னை அறைஞ்சுட்டார்" என்ற சோனியாவிடம், ``நான் சரியான டைமிங்லதான் கையைக் கொண்டுவந்தேன். உன்னை யார் அவசரப்பட்டு தலையைத் திருப்பச் சொன்னது?' என்றார் ரவி. ஒருகட்டத்தில் கதிர் - அனிதாகவாகவே மாறிவிட்டார்கள் இருவரும்!

சோனியா அகர்வால்
சோனியா அகர்வால்
Vikatan

`` `ராஜா... ராஜாதி ராஜன்' பாட்டைப் பாடுற சீன் இன்னைக்கு எவ்ளோ காமெடியா இருக்கோ, அதைவிட செம ரகளையா இருந்தது அதை எடுக்கும்போது! அந்த சீனை ரவியும் அவங்க ஃப்ரெண்ட்ஸும் நடிச்சு முடிச்சவுடன், செல்வா சிரிச்சு கீழேயே விழுந்துட்டார். மண்ல உட்கார்ந்துக்கிட்டுதான்`ஓகே'யே சொன்னார்" என்று சோனியா சொல்ல, ``இந்தப் படம் எவ்ளோ எமோஷனலா இருந்ததோ, அதே அளவுக்கு ஹியூமரும் வொர்க் அவுட் ஆகியிருக்கும். அதெல்லாம் பிரேக்ல நாங்க பண்ற சின்னச் சின்ன விஷயங்களைக் கவனிச்சு செல்வா அதை நடிக்கச் சொன்னதுதான் முக்கியக் காரணம்" என்ற ரவி தொடர்ந்தார்.

``அனிதா இறந்ததுக்குப் பிறகான ஒவ்வொரு சீன் எடுக்கும்போதும், அந்த எமோஷனோடு இருக்கணும்னு `நினைத்து நினைத்துப் பார்த்தேன்' பாட்டைப் போட்டுவிட்டு என்னை மட்டும் ஒரு ரூம்ல தனியா விட்டுடுவார் செல்வா. யார்கிட்டேயும் பேசக்கூடாதுனும் சொல்லிட்டார். அதுதான், அந்த எமோஷனை எல்லோருக்குள்ளும் கடத்த உதவுச்சுனு நினைக்கிறேன். இந்தப் படத்துக்குப் பெரிய ப்ளஸ், யுவனின் இசையும் நா.முத்துக்குமாரின் வரிகளும்தான்!" என்று சிலாகித்துச் சொன்னவுடன், அந்தப் படத்தில் இடம்பெற்ற முத்துக்குமாரின் பாடல் வரிகள் நம் மனதுக்குள்ளும் ஓடத்தொடங்குகிறது.

ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால்
ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால்

``மனோரமா ஆச்சிகூட இருந்தா அவ்ளோ ஜாலியா இருக்கும். கார்ல ரெண்டுபேருக்கும் நடுவுல உட்கார்ந்திருக்கிற காட்சியை சிரிக்காம எடுத்து முடிக்கிறது ரொம்ப சவாலா இருந்தது. அந்த சீன் ஸ்கிரீன்ல வொர்க் அவுட்டானதுக்கு, ஆச்சிதான் காரணம். அவங்க ரியாக்‌ஷன்தான் அல்டிமேட்! அப்புறம், இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ்தான், நான் இந்தப் படத்துல நடிக்கணும்னு நினைச்சதுக்கு முதல் காரணம். நான் ரொம்ப எமோஷனல் டைப். அந்தக் காட்சியை செல்வா `காதல் கொண்டேன்' ஸ்பாட்ல சொன்னவுடன், எனக்கு அனிதா கேரக்டர் மேல காதல் வந்திடுச்சு" என்ற சோனியாவைத் தொடர்ந்த ரவிகிருஷ்ணா, `ஜனவரி மாதம்' பாடல் எடுத்த சுவாரஸ்யம் பற்றி பகிர்ந்துகொள்கிறார்.

``அந்தப் பாட்டை மூணு நாள் எடுத்தோம். அதுல நடிக்கும்போது எப்போவும்போலதான் நடிச்சோம். ஆனா, ஸ்கிரீன்ல பார்க்கும்போது, இவ்ளோ ரொமான்டிக்கா இருக்கும்னு நினைச்சுப் பார்க்கல. அந்தப் பாட்டை முடிச்சுட்டு சட்டையைக் கழட்டும்போது, `என்னடா முதுகுல'னு கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா கேட்டார். பார்த்தா, சோனியா நகத்தால கீறிவிட்ருக்கு. காய்ச்சல் வேற வந்திடுச்சு. அப்புறம் ஊசி போட்டுட்டுதான் ஸ்பாட்டுக்கு வந்தேன். ஒரு ரொமான்ஸ் பாடல்ல நடிக்கும்போது எனக்குக் காய்ச்சல் வந்ததெல்லாம் நினைச்சுப் பார்த்தா, காமெடியா இருக்கு!" என்றதும், சோனியா முகத்தில் அப்படியொரு சிரிப்பு.

ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால்
ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால்

இருவருக்கும் பிடித்த காட்சி என்ன என்ற கேள்விக்கு, `அலாரம் சீன்' என்றார் ரவி. `டாய்லெட்ல புரொபோஸ் பண்ற சீன்' என்று சோனியாவிடமிருந்தும் உடனடி பதில் கிடைத்தது.

செல்வராகவன் ஸ்பாட்ல அடிக்கடி சொல்ற விஷயம் என்ன என்றதற்கு, ``Don't act in my movies. you have to perform" என்ற பதில் கோரஸாக வந்து விழுகிறது.

பிடித்த பாடல் பற்றிய பேச்சு வருகையில், `கண் பேசும் வார்த்தைகள்' என்று ரவியும், `நினைத்து நினைத்துப் பார்த்தால்' பாட்டை இப்போ கேட்டாகூட கண் கலங்கும். இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப ஸ்பெஷல்' என்று சோனியாவும் பதிலளித்தனர்.

சோனியாவிடம், ``கதிர் மாதிரி கேரக்டரை மீட் பண்ணீயிருக்கீங்களா?" என்றோம். ``ம்ம்... பண்ணியிருக்கேனே. செல்வாதான்!" என்றதும், கைதட்டி உற்சாகமானார் ரவி. இருவரிடமும் கதிர் - அனிதா காதல் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றோம்.

ரவி : கிளாஸிக்!

சோனியா : மேஜிக்!

அனிதாவிடம், கதிருக்கு ஒரு அட்வைஸ் கொடுக்கச் சொன்னோம். ``ரவியா இருந்தாலும், கதிரா இருந்தாலும் என்னுடைய அட்வைஸ் ஒண்ணுதான், சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ!" என சோனியா சொல்ல, கதிராகவே மாறி தலையசைக்கிறார் ரவிகிருஷ்ணா.

பேட்டி முடிந்து வானத்தைப் பார்த்தால், ``Its a clear sky ya!"

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு