Published:Updated:

அரசியலில் ரியலாக நடப்பது... சினிமாவில் ஏற்கனவே நடந்ததுதான்!

பா.ஜான்ஸன்
அரசியலில் ரியலாக நடப்பது... சினிமாவில் ஏற்கனவே நடந்ததுதான்!
அரசியலில் ரியலாக நடப்பது... சினிமாவில் ஏற்கனவே நடந்ததுதான்!

கொஞ்சநாளாகவே பரபரப்பான சினிமா போல இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல். அதுவும் கடந்த சில நாட்களாக, குறிப்பாக நேற்று இரவு க்ளைமாக்ஸ் நெருங்கும் போது பல ட்விஸ்ட்கள்... ஒரே கட்சியை சேர்ந்த இருவரின் வெவ்வேறு பேச்சுகளால் மக்களை ஒரு பதட்டமான மனநிலையிலேயே வைத்திருக்கிறார்கள். என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என பன்னீர் செல்வம் சொல்ல, எதிர்கட்சி ஆளோடு சிரித்து பேசுகிறார் பன்னீர் என சசிகலாவின் ஸ்டேட்டஸும் வந்து விழுகிறது. இந்தச் சூழலை சினிமாவுடன் பொருத்தி பல மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அப்படியான சில அரசியல் சினிமாக்களின் திருப்பங்கள் கீழே, இதை எந்த சம்பவத்துடன் பொருத்திப்பார்க்க முடிகிறது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

முதல்வன்:

ஒரு நாள் முதல்வராக இருக்க முடியுமா என சவால் வர, கொஞ்சம் தயக்கத்துடன் முதல்வராக சம்மதிப்பார் அர்ஜுன். முதல்வரானதும் லைவ் அதிரடியில் இறங்கி, பணிநீக்கம், ரவுடிகளுடன் சண்டை என சில சூப்பர் மேன்தனங்கள் நடத்தி இறுதியில் முதல்வரையே சிறையில் வைப்பார். கோவத்தில் ரகுவரன் அர்ஜுனை அடித்து, குடும்பத்தை அழிக்க பயந்து முதல்வர் பதவி வேண்டாம் என்ற முடிவுக்கு வருவார். 

அர்ஜுன் வீட்டு முன் ஒரு கூட்டமே திரண்டு வந்து நிற்க, மீடியா அவரிடம் அடுத்து என்ன செய்யப் போறீங்க என கேட்பார்கள். என்ன விட்டுடுங்க என சொல்லும் அர்ஜுனை மணிவண்ணன் அழைத்துச் சென்று, "ஒவ்வொருத்தர் முகத்திலும் இருக்கற ஏக்கத்தப் பார்.. ஒரு நல்ல தலைவன் வர மாட்டானா? ஒரு நல்ல ஆட்சி அமையாதா? நல்ல எதிர்காலம் அமையாதானு ஏங்குற ஏக்கத்த பாருய்யா. இன்னைக்கு இருக்கற இளைஞர்கள் டாக்டர் ஆகணும்ங்கறான், இன்ஜினியர் ஆகணும்ங்கறான், வக்கீல் ஆகணும்ங்கறான். எவனாவது ஒருத்தன் அரசியல்வாதி ஆகணும்ங்கறானா?  கேட்டா அரசியல் ஒரு சாக்கடைம்பானுங்க, சாக்கடையா இருந்தா இறங்கி சுத்தம் பண்ண வேண்டியதான...?” என்று பேசி நடந்து செல்ல, கால் செயலற்ற ஒருவர் அர்ஜுனுக்கு மாலையிட்டு “என்னை மாதிரியே இந்த நாடும் நொண்டியா இருக்கு... நடக்க வை தலைவா” என்றதும் தடுமாற்றமான மனநிலையில் இருக்கும் அர்ஜுன் தீர்க்கமான முடிவுடன் கையை உயர்த்தி தன் அரசியல் வருகையை அத்தனை பேருக்கும் அறிவிப்பார். 

மக்களாட்சி:

‘மக்களாட்சி’ படத்தில் சேதுபதியாக மம்முட்டி பேசும் ஒரு காட்சி மிகப்பிரபலம். முதலில், ஏனோதானோ முதலமைச்சராக ஆள்பவர், பிறகு மக்களுக்காக ஆட்சி நடத்த தீர்மானித்துப் பேசுவார். வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும் என்று மம்முட்டி சொல்ல ’மதுவிலக்கைக் கொண்டுவந்ததால அரசுக்கு 200 கோடி வருமானம் இழப்பு. இப்ப வரியும் போடலைன்னா எப்படி வருமானம் வரும்?’ என்றொரு அதிகாரி கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் மம்முட்டி. ‘அரசாங்கத்துக்கு வருவாய் வரும். அதுக்கு நாலு வழி இருக்கு. நீங்க உங்க நிலத்தை 10 லட்சத்துக்கு வாங்கி 50000க்கு ஏன் பதிவு பண்ணினீங்க? 13% வரின்னதால ஆறாயிரத்துச் சொச்சம் வரி கட்னீங்க. அதே குறைச்சு 4% தான் வரின்னு சொல்லீருந்தா, ஒழுங்கா 40000 கட்டிருப்பீங்க. வரிய ஏத்தி ஜனங்கள் அரசாங்கத்தை ஏமாத்தறதவிட, வரியை கொறச்சு ஒழுங்கா வசூலிச்சாலே, அரசாங்கத்துக்கு 200 கோடி ரூபா தாராளமா வரும். இப்ப நம்ம நாட்ல பெரிய வியாபாரம் கல்விதான். பணம் ஜாஸ்தி இருக்கறவன் காலேஜ் திறக்கறான், கம்மியா இருக்கறவன் கான்வெண்ட் திறக்கறான். இனி நம்ம நாட்ல மெடிகல், இஞ்சினியரிங் காலேஜ் தனியாருக்கு கிடையாது. வசதி படைச்சவன், தனியாருக்கு பத்து லட்சம் தர்றப்ப கவர்மெண்ட்டுக்கு ரெண்டு லட்சம் தரமாட்டாங்களா? அதுனால வருமானம் வரும். அடுத்து கிரானைட், அதையும் அரசாங்கம் எடுத்துக்கும். நாலாவதா, அரசாங்க வேலையெல்லாம் கட்சிக்காரங்களுக்கோ அவங்க பினாமிக்கோ காண்டிராக்ட் விடக்கூடாது. எல்லாருக்கும் அந்தந்தப் பஞ்சாயத்துல இருக்கற படிச்சு வேலையில்லாம இருக்கற இளைஞர்கள், ஓவர்சியர்லாம் சேர்ந்து கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தணும். அவங்களுக்குத்தான் இந்த மாதிரியான காண்ட்ராக்ட்ஸ் குடுக்கணும். மக்களுக்கு இலவசங்களை குடுக்கறத விட, இப்படி உழைக்க வழி சொன்னா அவங்களும் சந்தோஷமா செய்வாங்க’ என்பார்.  இறுதிக்காட்சியில் அவர் சொல்லும் ’ஊர்பேர் தெரியாத என்னை வாழ்கன்னீங்க. அப்பறம் ஒழிகன்னீங்க. இப்படி உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்தா அவர் ஆட்சி, இவர் ஆட்சியெல்லாம் வருமே தவிர மக்களாட்சி வராது. என்னைக்கு சிந்திச்சு ஓட்டு போடறீங்களோ அப்பதான் மக்களாட்சி மலரும்’ என்ற வசனம் எந்தத் தேர்தலுக்கும் பொருந்தும்!

அமைதிப்படை:

தான் நிற்க முடியாத சூழ்நிலையால், தனக்கு கீழே தான் சொல்வதைக் கேட்கும் படியான ஆளாக இருக்கும் சத்யராஜை தேர்வு செய்து தேர்தலில் போட்டியிடச் செய்வார் மணிவண்ணன். தேங்கா பொறுக்கிக் கொண்டிருந்த அமாவாசை, பக்காவாக மாறி நாகராஜசோழனாக வந்து நிற்பார். மனுதாக்கல் செய்யும் பொழுது பெயர் கொடுக்கும் போது ராஜபரம்பரை என புருடாவிடுவதும், மணிவண்ணனுக்கு முதலில் மரியாதை கொடுத்து பின்பு அவர் முகத்திலேயே சிகரெட் புகை ஊதுவதுமாக அவரது ட்ரான்ஸ்ஃபர்மேஷனும் மாஸாக இருக்கும். ஓட்டு எண்ணிக்கையின்போது, சாதாரணமாக உட்கார்ந்து பிறகு நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொள்வதுமாக அடிமட்டத்திலிருந்து வந்த ஒருவன் தலைவனாக மாறுவதை அட்டகாசமாக நடித்துக் காட்டியிருப்பார் சத்யராஜ். கூடவே மணிவண்ணன், அவருக்குத் தரும் ஆலோசனைகளும், திட்டங்களும் என பக்கா அரசியல் செட்டப் உள்ள படம். இப்போதும் இதன் எந்த இரு கதாபாத்திரத்தையும் உங்களால் நிஜ சூழலில் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.

கொடி:

அரசியலில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைக்கிறார் அண்ணன் தனுஷ். அவர் கூடவே இருந்து அவரைக் காதலிக்கும் கதாபாத்திரம் த்ரிஷாவுக்கு. ஒரு கட்டத்தில் தனக்குப் போட்டியாக தனுஷ் நிற்கிறார் எனத் தெரிகிறது. இவ்வளவு காலம் தான் ஆசைப்பட்ட இடத்தை அடைய ஒரு வாய்ப்பு. அன்று யாரும் இல்லாத ஒரு இடத்தில் தனுஷை சந்திக்கிறார் த்ரிஷா. கொஞ்சமும் யோசிக்காமல் தனுஷைக் கொல்கிறார். தனக்கு இருந்த போட்டியை அழித்த உடன் அவரது ரூட் க்ளியர் ஆகி, பதவியை அடைகிறார். பதவி கிடைத்ததும் அது கிடைக்க காரணமாக இருந்தவரை த்ரிஷா டீல் பண்ணும் விதமும் நிஜத்தில் பல அரசியல்வாதிகளுடன் ஒப்பிட முடியும்.  இதற்கு இணையாக, அண்ணன் இழந்த சோகத்தில் இருக்கும் தம்பி தனுஷ் நேராக கட்சியில் சேர்கிறார். சாதுவாக இருந்த தம்பி, முழு அரசியல்வாதியாக மாறி த்ரிஷா முன் வரும் கொடி படத்தின் அந்த சீனை நீங்கள் சமீபத்தில் எங்கோ பார்த்திருக்கலாம்!

-பா. ஜான்சன்