Published:Updated:

’பாலா என்ன சொல்வாரோனு பயமா இருக்கு!’ - ஓர் இயக்குநரின் கவலை #VikatanExclusive

’பாலா என்ன சொல்வாரோனு பயமா இருக்கு!’ - ஓர் இயக்குநரின் கவலை #VikatanExclusive
’பாலா என்ன சொல்வாரோனு பயமா இருக்கு!’ - ஓர் இயக்குநரின் கவலை #VikatanExclusive

பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு, இதுவரை போல்டான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. தற்போது ஒரு நல்ல கதாபாத்திரம் அவருக்கு கிடைத்துள்ளது. 'முப்பரிமாணம்' என்ற படத்தில் மிரட்டும் வகையில் சாந்தனு. நடித்துள்ளார். அதிரூபன் என்ற புதுமுக இயக்குநர் படத்தை இயக்கியிருக்கிறார்.

திரைப்படக் கல்லூரியில் படித்தவர்.  இதுதான் முதல் படம். ரொமான்டிக், திரில்லர் என சேர்ந்து தந்திருக்கிறார். சாந்தனு மூன்று கெட்டப்பில் வருகிறார். அதில் ஒரு கெட்டப் மிரட்டலாக இருக்குமாம். சாந்தனுவுக்கு திரைப்பட வாழ்க்கையில் இந்த படம் திருப்புமுனையாக என்று எதிர்பார்க்கப்படுகிறது.. கதாநாயகி சிருஷ்டி டாங்கே. அப்புக்குட்டியும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்.படம் குறித்து இயக்குநர் அதிரூபனிடம் பேசினோம்.

'முப்பரிமாணம்' டைட்டில்லேயே ஏதோ சொல்ல வறீங்க போல...?

’’ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் பல பரிமாணங்கள் இருக்கும். அந்த பரிமாணங்களை கொஞ்சம் டீப்பா அலசுவதுதான் இந்த படம். சாந்தனு மூன்று கெட்டப்ல வராரு. ஒவ்வொண்ணும் அசத்தல்தான். இதுவரைக்கும் சாந்தனுக்கு ஒரு ஹைகிளாஸ் காதலர் வேடத்துலத்தான் வந்துருப்பாரு. இந்த படத்துல நார்மல் லுக்ல ரொம்ப மெச்சூரிட்டியா நடிச்சிருக்காரு. நல்லா நடிச்சிருக்கார்.  டெர்ரர் கேரக்டர்ல பின்னி எடுத்திருக்கிறார். படம் நிச்சயம் அவருக்கு பிரேக்கிங் கொடுக்கும். செல்லும் கையுமா அலையும் இளைய தலைமுறையை ஈசியா இந்த படம் கவரும்.’’ 

கதாநாயகி சிருஷ்டி டாங்கே எப்படி பண்ணியிருக்காங்க? 

’’பொதுவா இப்போலாம் கதாநாயகிகள் பெர்ஃபார்மன்ஸ் காட்டும் அளவுக்கு கதைகள் அமைவதில்லை. ஏதோ ஹீரோயினா வந்தாங்க போனாங்கனு இல்லாம இந்த கதைல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்துருக்கோம். சிருஷ்டி அசத்தியிருக்காங்க. அவங்களுக்கு நல்ல ஸ்ட்ராங்கான கேரக்டர். இந்த மாதிரி கதையம்சம் உள்ள படத்துல நடிச்சதுக்காக டாங்கே ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க.’’ 

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ரொம்ப இன்வால்வ்மென்ட் காட்டினாராமே...?

’’இந்த படத்துக்கு 55 நாட்கள் செலவு பண்ணி மியூசிக் பண்ணிருக்காரு. கதையோட ரொம்பவே இன்வால்வ் ஆயிட்டாரு. படத்துல மொத்தம் 5 பாட்டு . ஜி.வி. பிரகாஷ் இவ்வளவு நாட்கள் எந்த படத்துக்கும் எடுத்துக் கிட்டது இல்லை. பின்னணி இசை அவ்வளவு அழுத்தமாக வந்துருக்குது. அவரோட ஸ்பெஷலான மியூசிக் இந்த படத்துக்கு கிடைச்சிருக்குது. அதில், 'லெட்ஸ் கோ பார்ட்டி' ங்கிற பாட்டுலதான் படத்துல நடிச்சிருக்குற அத்தனை பேருமே சேர்ந்து ஆடியிருக்கிறாங்.’’

அந்தப் பாட்டை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்....? 

’’கதைக்கு தேவையான பாட்டு. நான் பாலாவோட சிஷ்யன். கதைக்குத் தேவையில்லாத எந்த விஷயங்களையும் படத்துல திணிக்க மாட்டேன். அதுல எப்பவுமே நான் உறுதியா இருக்கேன். இது ஒரு புத்தாண்டு பாட்டு. ஜாக்கி ஷெராப், மொட்டை ராஜேந்திரன், விவேக், ஆர்யா, விஜய் ஆன்டனி அத்தனை பேரும் ஆடியிருக்கிறாங்க. 3 மணி நேரம், 4 மணி நேரம் கால்ஷிட் தந்தவங்க எல்லாம் என்ன இவ்வளவு சீக்கிரமா சூட்டிங்கை முடிச்சுட்டீங்கனு கேட்டாங்கன்னா பார்த்துக்கங்களேன். ஜாக்கி ஷராப்லாம் எவ்வளவு பெரிய நடிகர். அவரெல்லாம் கூட அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தாரு. அந்தத் தருணத்தை எல்லாம் மறக்க முடியாது.’’ 

ஜாக்கி ஷராப் எப்படி டான்ஸ் ஆட ஒத்துக்கிட்டாரு...?

’’பாக்யராஜ் சார்தான் பேசுனாரு. பாக்யராஜ் சார் மேல அவருக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. பாக்யராஜ் சாருக்கும் இந்த ஸ்கிரிப்ட் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அந்த சமயத்துல டெல்லில சென்னைலனு சூட்டிங்குக்கு ஜாக்கி அலைஞ்சுட்டு இருந்தாரு. ஆனாலும் எங்களை என்கரேஜ் பண்ணணும்ங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்காரு. பிருந்தா மாஸ்டர்தான் டான்ஸ் மாஸ்டர். அந்த பாட்டு சூப்பரா வந்துருக்குது.’’ 

'லெட்ஸ் கோ பார்ட்டி ' பாட்டை எழுதியது யார்? 

’’கபிலன். யுகபாரதியும் ஒரு பாட்டு எழுதியிருக்காரு.. அசத்தலான பாடல் . அதுமட்டுமல்ல நா. முத்துக்குமாரும் பாடல் எழுதியிருக்கிறார். 'சொக்கி போறேன்டி விக்கி போறேன்டி'.  யாரிவனோ, உன்னை விட்டு போனால் போன்ற பாடல்கள்  நா. முத்துக்குமார் எழுதுனது. ப்ச். அவரை ரொம்ப மிஸ் பண்றோம்.’’  

ஏ.ஆர். ரஹ்மான்  பாடல் ப்ரமோ ரிலீஸ் பண்ணிருக்காரு... பாட்டு கேட்டுட்டு என்ன சொன்னாரு? 

’’ஏ.ஆர். ரஹ்மான்லாம் எவ்வளவு பெரிய மியூசிக் டைரக்டர். அவர்லாம் ஒரு புதுமுக டைரக்டரோட விழால பங்கேற்கணும்னு ஏதுவும் இல்லையே. இப்போதான் நாங்க நடக்கத் தொடங்கியிருக்கிறோம். எங்களுக்கு ஒரு ஆதரவு கொடுத்துருக்காருனுதான் நான் நம்புறேன். பாட்டை கேட்டுட்டு ரொம்ப நல்லாருக்குனு சொன்னாரு. அது மாதிரி வெற்றி மாறனும் ரொம்ப ஹெல்ப் பண்ணிருக்காரு. உண்மையிலேயே நாங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க.’’ 

உங்க குருநாதர் பாலா படத்தை பார்த்துட்டாரா? 

’’இல்ல...இனிதான் போட்டு காட்டணும். என்ன சொல்வாரோன்னு பயமா இருக்கு.. அவர் மட்டும் பாஸ்மார்க் கொடுத்துட்டார்னா  இந்த உலகத்தையே சுற்றி வந்துட்ட மாதிரிதான். மார்ச்ல படம் வெளியிட இருக்கிறோம்.’’ 

-எம். குமரேசன்