Published:Updated:

’2.0 வில்லன்’ அக்‌ஷய் குமாரின் வாதம் எடுபடுகிறதா ஜாலி LLB-2வில்? #JollyLLB2 படம் எப்படி?

பா.ஜான்ஸன்
’2.0 வில்லன்’ அக்‌ஷய் குமாரின் வாதம் எடுபடுகிறதா ஜாலி LLB-2வில்? #JollyLLB2 படம் எப்படி?
’2.0 வில்லன்’ அக்‌ஷய் குமாரின் வாதம் எடுபடுகிறதா ஜாலி LLB-2வில்? #JollyLLB2 படம் எப்படி?

“யாராவது ரெண்டு பேருக்குள்ள சண்டைன்னா, ‘உன்னைக் கோர்ட்ல பார்த்துக்கறேன்’ன்னுதான் சொல்லுவாங்க. அந்த அளவுக்கு கோர்ட்ல நியாயம், நீதி கிடைக்கும்ங்கறது மக்கள் நம்பிக்கை. அவங்க நம்பிக்கை குடுக்கற அளவுக்கு கோர்ட் இருக்கா? இருக்குன்னு சொல்லிக்கற மாதிரி வருஷத்துக்கு ஒரு கேஸாவது வரும். நான் இந்த நாற்காலில உட்கார பெருமைப்படற மாதிரியான அந்தக் கேஸ், இந்த வருஷத்துல இது!” - ஜாலி எல்.எல்.பி. படத்தில் நீதிபதி வேடத்தில் மிரட்டியிருக்கும் சௌரப் சுக்லா சொல்லும் வசனம். அப்படி என்ன வழக்கு அது?   

கான்பூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜக்தீஷ் மிஷ்ரா (எ) ஜாலி (அக்‌ஷய் குமார்). பலவருடங்களாக, சீனியர் லாயர் ஒருவரிடம் சாதாரண எடுபிடி வேலைகளைச் செய்து வருகிறார்.  கணவனை இழந்த ஹினா (சயானி குப்தா), அக்‌ஷையை சந்தித்து தன் கணவன் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கை, அக்‌ஷயின் சீனியர் விசாரித்தால் நீதி கிடைக்கும் என்று சொல்லி, உதவி  கேட்கிறார்.  கோர்ட்டில் தனக்கும் ஒரு அறை வேண்டும் என்று முட்டிமோதிக் கொண்டிருக்கும் அக்‌ஷய், சயானியிடம் நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி, சீனியருக்காக என்று பணம் கேட்கிறார். ஆனால் சீனியருக்கு இந்த விஷயமே தெரியவில்லை என்றறிந்த  சயானி விபரீத முடிவெடுக்க, குற்ற உணர்ச்சியும், பிறர் பேசும் அவமானப் பேச்சுக்களும் உந்தித் தள்ளுகிறது அக்‌ஷய் குமரை. அந்த  என்கௌன்டர் வழக்கை எடுத்துப் போராடி, வாதாடி ஜெயிக்கும் பரபர படம்தான் ஜாலி எல்.எல்.பி.   

'ஜாலி எல்.எல்.பி'யில் சென்ற முறை பார்த்த அதே டெம்ப்ளேடிலில் புதிய கதாபாத்திரங்கள், அதில் நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது கார் ஏற்றிய வழக்கு, இதில் போலி என்கௌன்டரில் கொல்லப்பட்ட வழக்கு, அதே பாணியிலான திருப்பம், திடீரென ஒரு சாட்சி என எதுவும் தவறாமல் இதிலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் இதில் அக்‌ஷய் + சௌரப் ஷுக்லா + அன்னு கபூர் காம்பினேஷனின் ரகளை வேறு லெவல்.

இறந்து விட்டதாக சான்றிதழோடு இருக்கும் ஒருவருக்காக வாதாடுகிறார் அக்‌ஷய். கோர்ட்டில் “இருக்கார் சரிதான். ஆனா கோர்ட்டுக்கு பேப்பர்தான் வேணும். அவர்தான்னு என்ன ஆதாரம்?” என்று நீதிபதி கேட்கிறார். அக்‌ஷயும், அந்த க்ளையன்டும் செய்யும் ரகளையால் க்ளையன்ட் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுகிறது. “என்னய்யா உன்னை நம்பி வந்தவனை ஜெயில்ல தள்ளிட்ட?” என்று நண்பர் கேட்க அக்‌ஷய்குமார் சொல்லும் பதிலில் அவர் கேரக்டர் விஸ்வரூபம் எடுக்கிறது.  மனைவியின் ஃபேவரைட் விஸ்கி வாங்கி வருவது, தனக்கென ஒரு சேம்பர் கிடைப்பதற்காக சில தில்லு முல்லு கேஸ்களில் வாதாடுவது என அண்டர்ப்ளேயில் கலக்கியிருக்கிறார்.  குற்ற உணர்ச்சி மிகுந்துவிட,  நியாயத்துக்காகப் வாதாட ஆரம்பிக்கும் இடத்திலிருந்து சீரியஸ் ஆவது துவங்கி பல இடங்களில் பொறுப்பாகவே நடித்திருக்கிறார் அக்‌ஷய் குமார். 2.0 வில் வில்லனாக பார்க்க வெயிட்டிங் சார் ஜி!

ப்ரீக்குவலில் இருந்தது போல முக்கால் வாசிப்படம் நீதிமன்றத்துக்குள் தான். எந்த இடத்திலும் அலுப்பு வராமல் நிகழும் வாதங்களும், பிரதிவாதங்களும் கவனம் கவர்கிறது. அக்‌ஷய், அன்னு கபூர் இவர்களுக்கு இடையில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகளும் அதை சமாதனம் செய்ய சௌரப் ஷுக்லா வந்து அவரும் கோபமாகி போவதும் செம கலாட்டா. முந்தைய பாகத்தை கம்பேர் செய்தால் அர்ஷத் வர்ஷிக்கு பதில் அக்‌ஷய் குமார் பெட்டர் தான், அதே நேரத்தில் பொம்மன் இரானி நடித்த ரோலில் அன்னு கபூரைப் பார்க்கும் போது கொஞ்சம் டெம்போ குறைந்தது போன்ற உணர்வு.

மைண்ட் ப்ளோயிங், கிழி கிழி கிழி, வாவ், அட்டகாசம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம் சௌரப் ஷுக்லாவின் நடிப்பையும், கேரக்டரையும். பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். நீதிமன்றத்தில் டான்ஸ் ஆடிக்கொண்டே என்ட்ரி கொடுப்பது, ஸ்ட்ரெட்ச் வொர்க் அவுட் செய்தபடியே இருக்கைக்கு ஏறுவது, கண் தெரியாமல் வெகு அருகில் வைத்துப் படிக்கும் மேனரிசம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அன்னு கபூர் சண்டை போடும்போதும், ஸ்டைலாக நிதானமாக “அப்படி இல்லை.. ப்ச்.. அப்படி இல்லைங்க” என்று விளக்கம் சொல்லிக் கொண்டே இருந்து  அன்னு கபூர் நீதிமன்றத்துக்குள்ளேயே தர்ணா செய்ய. 'நானும் வர்றேன்' என அவருக்கு எதிரிலேயே அமர்ந்து இருதயத்தை பாதுக்காக்க வழி சொல்லும் புத்தகம் ஒன்றினைப் படிப்பது அதகளம் என்றால், “மணி 3 ஆச்சு. வெளில போனா டாக்ஸி, பஸ் எதுவுமே கிடைக்காது. டெய்லியும் மாலை 6 மணிக்கு கெளம்பறோமே.. ஒருநாளைக்கு நல்லா வேலை செய்வோம்” என்று  அன்னு கபூருக்கு பல்ப் கொடுப்பது அட்டகாசம்! கலக்கிட்டீங்க சாரே! 

ஹூமா குரேஷிக்கு இதில் குறிப்பிட்டு சொல்லும் படி எந்தப் பங்கும் இல்லை. ஆனால் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சி தருகிறார்.  இடைவேளைக்கு முன்பு வரை மிக மெதுவாகவே தான் செல்கிறது படம். பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் இடஞ்சலாக இல்லை என்பது ஆறுதல்.

எமோஷனலாகவும், உண்மையாகவும் வசனங்கள், மிக பலமான காட்சிகள் என சுபாஷ் கபூரின் மேக்கிங் நன்றாக இருந்தாலும், முதல் பாகத்தில் இருந்த  அதே டெம்ப்ளேட்கள் இதிலும் இருப்பது குறை. இத்தனை புத்திசாலி வக்கீல், எதற்கு அத்தனை வருடம் கார் கதவைத் திறந்து விட்டுக் கொண்டிருக்கிற வேண்டும் என்ற கேள்விக்கு பதிலே இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்பதாக ஹீரோயினும் குழந்தையும். வசூல்ராஜா நாகேஷ் - கமல் சீனை நியாபகப் படுத்தும் ஒரு அச்சு அசல் காட்சி. (முன்னாபாய் எம்பிபிஸ்!) என்று சில குறைகள் இருப்பினும், சௌரப் ஷுக்லாவின் ரகளைக்கும், விறுவிறு விவாதங்களுக்குமாகவே ஜாலியை ஜாலியாக வரவேற்கலாம்!