Published:Updated:

வீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய்! - ரிங்ஸ் படம் எப்படி?

வீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய்! - ரிங்ஸ் படம் எப்படி?
வீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய்! - ரிங்ஸ் படம் எப்படி?

வீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய்! - ரிங்ஸ் படம் எப்படி?

ஜப்பானிய ஹாரர் படங்களுக்குப் பெரிய வரவேற்பு எப்போதுமே இருக்கும். ‘தி க்ரட்ஜ்’, ‘ஒன் மிஸ்டு கால்’, ‘ரிங்’ என வரிசையாகப் பல படங்கள் ஹாலிவுட்டில் ரீமேக்கும் செய்யப்பட்டன. இதில் ’ரிங்’ படமே இரண்டு பாகங்களாக ஹாலிவுட்டில் வெளியானது. அதன் மூன்றாவது பாகம் ‘ரிங்ஸ்’ இப்போது வெளியாகியிருக்கிறது.

அது ஒரு வீடியோ டேப். அதிலிருக்கும் வீடியோ மிக விநோதமான ஒன்று. அந்த சாபம் உள்ள வீடியோவைப் பார்ப்பவர், ஏழு நாட்களில் இறந்துவிடுவார். இதுதான் ’கொஜி சுஷுகி’ 1991-ல் எழுதிய ஜப்பானிய நாவல் 'ரிங்'-கின் பாட்டம் லைன். இதைத் தழுவி 1998-ல் ஹைடியோ நகாடா ஜப்பானிய மொழியில் இயக்கினார். அதைத் தொடர்ந்து, கொரிய மொழியிலும், ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்தார்கள். எல்லாவற்றிலும் அதே வீடியோ டேப்; அதே ஏழு நாள் கெடுதான். இப்போது வெளியாகியிருக்கும் படத்தில், ’ஸ்பெஷல் அடேங்கப்பா ஆஃபர்’ ஒன்றை இணைத்திருக்கிறார்கள். ஏழு நாட்களுக்குள் நீங்கள் பார்த்த வீடியோவை ஒரு காப்பி எடுத்து இன்னொருவரைப் பார்க்க வைத்துவிட்டால், மரணத்திலிருந்து நீங்கள் தப்பிவிடலாம். 

ஆரம்பத்திலேயே அந்த வீடியோவைப் பார்த்த ஒருவர் தப்பிக்க நினைத்து விமானத்தில் செல்ல, மொத்த பேரும் விபத்துக்குள்ளாவதில் இருந்து துவங்கி, வீடியோவின் விபரீதத்தை உணர்த்துகிறார்கள். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பேராசிரியர் கேப்ரியல் கையில் அந்த டேப் கிடைக்க, அவர் அதை வைத்து ஆராய்ச்சிகள் செய்து, பேய் இருக்கிறது என நிரூபிக்க நினைக்கிறார்.

ஜூலியா - ஹால்ட் இருவரும் காதலர்கள். ஹால்ட் சேரும் கல்லூரியில்தான் கேப்ரியலும் இருக்கிறார். ஹால்ட் ஆபத்தில் இருக்கிறான் என ஜூலியாவுக்குத் தகவல் வர, அவனைப் பார்ப்பதற்காகச் செல்கிறாள். அங்குதான் இந்த டேப் பற்றி அவளுக்குத் தெரிய வருகிறது. ஹால்ட், கேப்ரியலின் ஆராய்ச்சிக்காக அந்த வீடியோவைப் பார்த்துவிட்டான், அவனைக் காப்பாற்றுவதற்காக அந்த வீடியோவைப் பார்க்கிறாள் ஜூலியா. வீடியோ முடிந்த அடுத்த நொடி தொலைபேசி ஒலிக்கிறது, ஹஸ்கி வாய்ஸில்..."செவன் டேய்ஸ்' எனக் குரல் கேட்கிறது. பின்பு என்ன ஆகிறது என்பது மீதிக் கதை.

ஹாலிவுட்டில் இதுபோன்ற ஹாரர்களில் மிகப் பிரபலமானது, ‘ஃபைனல் டெஸ்டினேஷன்’. ஆரம்பத்தில் ஒரு விபத்து நடக்கும், அதிலிருந்து தப்பித்தவர்கள் படம் முடிவதற்குள் இறந்துவிடுவார்கள். மரணம் அவர்களை எப்படி வேட்டையாடுகிறது என்பதுதான் கான்செப்ட். அதேபோல்தான் இந்த ‘ரிங்ஸ்’ படத்தில், வீடியோ பார்த்தவர்கள் இறந்துவிடுவார்கள். எப்படி என்பது சஸ்பென்ஸ்...

இந்தப் பாகத்தில் வீடியோவில் வரும் பெண் யார்.. ஏழு நாட்களில் இதைப் பார்ப்பவர்கள் இறக்கும்படி அந்த வீடியோவுக்கு அப்படி என்ன சாபம் என்கிற காரணங்களை எல்லாம் அடுக்கியிருக்கிறார்கள், கதாசிரியர்களான டேவிட் லௌகா மற்றும் ஜேகப் ஆரோன். காரணம் எல்லாம் ஓகேதான் என்றாலும், குடையை விரிக்கும் சவுண்ட், மிக கோரமான முகத்துடன் காட்சியளிக்கும் உருவம் என இயக்குநர் ஜாவியர், பழைய டைப்பிலேயே பயமுறுத்திக் கொண்டிருப்பது த்ரில்லை எதிர்பார்த்து வருபவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. வீடியோவில் பார்த்த இடங்களை ஹீரோயின் நிஜத்தில் பார்த்து, அதைப் பின்தொடர்ந்து செல்வது ஒரு கட்டத்துக்கு மேல் டிடெக்டிவ் ஸ்டோரி போல சென்று, த்ரில்லர் படம் பார்க்கும் உணர்வையே குலைத்து விடுகிறது.

ஜூலியாவாக நடித்திருக்கும் ’மட்டில்டா லட்ஸ்’தான் பிரதான கதாபாத்திரம், மொத்தக் கதையும் அவரைச் சுற்றியே நடந்து, அவருடனேயே முடிகிறது. மிக அழகாக நடித்திருக்கிறார், அழகாகவும் இருக்கிறார். ஹால்ட்டாக நடித்திருக்கும் அலெக்ஸ், பேராசிரியராக நடித்திருக்கும் ஜானி கேலகி இருவரும் நடக்கப் போவதைச் சொல்லி, கொஞ்சம் பயமுறுத்த முயற்சி செய்கிறார்கள். ’அந்தப் பேய் நம்மள நோக்கித்தான் வருது’ என பில்டப் கொடுத்தால், அது தலைமுடியை முன்னால் விரித்துப் போட்டு மிஷ்கின் பட ஹீரோபோல தலையைக் குனிந்தபடி, ஒற்றைக் கண்ணால் பார்த்துவிட்டு ஓடிவிடுகிறது. பயங்கரமான த்ரில்லிங்கை எதிர்பார்ப்பவர்களுக்கு ‘ரிங்ஸ்’ கண்டிப்பாக ஏமாற்றத்தையே கொடுக்கும். 

பேயை வைத்து பயமுறுத்த முடியவில்லை என்று கோலிவுட்டே இப்போது, பேய்களை காமெடி படங்களில் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு ட்ரெண்டே மாறிவிட்டது. சிங்கம் கூட ரன்வே வரை போயிடுச்சு... ஹாலிவுட்டில் இன்னும் அதே வீடு, அதே பேய் என ஜாங்கிரி சுத்திக் கொண்டிருந்தால் எப்படி ஜி...? 

அடுத்த கட்டுரைக்கு