Published:Updated:

மச்சி... இன்னொரு எஸ்எம்எஸ் சொல்லேன்! #8YearsofSMS

மச்சி... இன்னொரு எஸ்எம்எஸ் சொல்லேன்! #8YearsofSMS
மச்சி... இன்னொரு எஸ்எம்எஸ் சொல்லேன்! #8YearsofSMS

அலுவலக கேன்டீன்களில் பெரும்பாலும் தோசைக்குச் சர்க்கரை, காபிக்குச் சுண்டல்னு ஒத்துவராத காம்பினேஷனே மிச்சமிருக்கும். ஓபிஎஸ்-க்கு அடிக்கும் அதிர்ஷ்டம் மாதிரி மிச்சம் மீதி ஏதாவது இருந்து நம்ம பக்கம் வந்தால் மட்டும் பக்கா காம்பினேஷனில் ஒன்று சிக்கும். அந்த மாதிரியான தருணங்களில் எனக்குத் தோன்றுவது ஒன்றுதான். ராஜேஷ் - சந்தானம் கூட்டணிபோல நம்ம வாழ்க்கையிலும் ஒண்ணு சிக்கியிருக்கு!

‘லைட் ரீடிங்’ என்பதுபோல ‛லைட் வியூவிங்’ பதத்துக்கு ஏற்றவை இயக்குநர் ராஜேஷின் படங்கள். அதிலும் ‛சிவா மனசுல சக்தி’ வேற லெவல். ஆண்-பெண் ஈகோவை ‘அன்பே வா’ காலத்தில் இருந்தே பார்த்து வருகிறது தமிழ் சினிமா. ஆனால் அந்தந்தக் காலத்துக்கு ஏற்றதுபோல அப்டேட் ஆகி வரும் படங்கள் ஹிட் ஆகத் தவறுவதே இல்லை. இன்னமும்கூட வாட்ஸ்-அப் ப்ளூ டிக்கால் பிரேக்-அப் ஆகும் காதல்களை தமிழ் இயக்குநர்கள் எடுக்கவில்லை. எடுத்தால் ஹிட்தான். அப்படி 2009 சூழ்நிலையை எஸ்எம்எஸ்-ல் பக்காவாக பேக்கேஜ் ஆக்கித் தந்திருந்தார் ராஜேஷ். தலைப்பு, ‛ஒரு சோறு பதம்’.

ஜீவா, அனுயா எல்லாம் மன்னிக்க வேண்டும். ‛சிவா மனசுல சக்தி’தான் படத்தின் பெயர். ஆனால் எங்களுக்கு ராஜேஷ் படம் என்றாலே சந்தானம்தான். 2004-லேயே சந்தானம் அறிமுகம் ஆகியிருந்தாலும் இவரை டாப் லெவல் காமெடியன் ஆக்கியது இந்தப் படம்தான். "ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்"... "அவ போய் ஆறு மாசமாச்சு" என க்ளாஸிக் ஒன் லைனரே அவ்வளவு இருக்கும். தானத்தில் பெரியது மைதானம் அல்ல; சந்தானம்... சந்தானம்... சந்தானமே..! என உறுதியான தீர்ப்பளித்த படம் சிவா மனசுல சக்தி.

புதுவகையான என்டர்டெய்ன்மென்ட் படங்களை தமிழ் சினிமாவுக்குக் காட்ட வந்தார் ராஜேஷ். கதையைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டு, அன்னார் தந்த நியூ ஃபார்மட் ரசிகர்களுக்கு எனர்ஜி டானிக். எல்லோரும் கதையின் ஒன் லைனரைத்தான் சொல்வார்கள். ராஜேஷ்தான் ஒன்லைனர்களையே கதைக்குப் பதிலாகச் சொல்லி வாய்ப்பு வாங்கியவர். அந்த ஃபார்முலா அவருக்கு ஹாட்ரிக் வெற்றி தந்ததில் ஆச்சர்யமில்லை. ஜீவாவும் அனுயாவும் பக்கா டாம் அண்ட் ஜெர்ரி. பிற்காலத்தில் கிளாமர் கேர்ள் ஆக மாறியதால், இப்போது அனுயா இமேஜ் வேறு. ஆனால் படம் வந்த சமயத்தில் ‛ஆயிரம் டன் ரோஜாப்பூக்களை ஒரே சமயத்தில் நம் மீது கொட்டியது’ போன்ற ஃபீல் தந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

டாஸ்மாக்கில் காதல் சொல்வது, கால் செய்வது, அலப்பறை பண்ணுவது என ஜீவாவும் இறங்கி அடித்த படம். ‛சிவா மனசுல சக்தி’யைப் பார்க்கும்போதெல்லாம் ஜீவாவிடம் ஒன்றே ஒன்றுதான் சொல்ல நினைப்போம்.. "மச்சி... இன்னொரு எஸ்எம்எஸ் கொடேன்!"

யுவனின் ஆல் டைம் ஹிட் ‛ஒரு கல் ஒரு கண்ணாடி’. அம்மா ஊர்வசி, ஒல்லிக்குச்சி தங்கச்சி என படத்தின் ஹைலைட்ஸ் ஏகப்பட்டவை உண்டு.

‛பருத்திவீரன்’ சமயத்தில் வரிசையாக கிராமத்து சப்ஜெக்ட்களாக வந்தன. ‛முனி’ வெளியான சமயத்தில் வரிசையாக பேய்ப் படங்கள் வந்தன. அதேபோல், எஸ்எம்எஸ்-க்குப் பிறகு அதேபோல நூறு படங்களாவது வந்திருக்கும். ஆனால், எல்லா எஸ்எம்எஸ்-ம் எஸ்எம்எஸ் அல்ல!

- கார்க்கி பவா

அடுத்த கட்டுரைக்கு