Published:Updated:

'அந்த பல்வாள்தேவனா இது’னு ஆச்சரியப்படுவீங்க!’ - ரணகள ராணா #VikatanExclusive

'அந்த பல்வாள்தேவனா இது’னு ஆச்சரியப்படுவீங்க!’ - ரணகள ராணா #VikatanExclusive
'அந்த பல்வாள்தேவனா இது’னு ஆச்சரியப்படுவீங்க!’ - ரணகள ராணா #VikatanExclusive

“ஹைதராபாத்திலிருந்து எப்போ சென்னைக்கு வந்தாலும் புதுசா ஒரு படத்தோட வருவேன். ‘பாகுபலி’ படத்துக்காக சென்னைக்கு வந்தேன். இப்போ ‘காஸி’ படத்துக்காக வந்திருக்கேன். எந்த மொழிப் படம், யார் நடிக்கிறார் என்பதெல்லாம் முக்கியமில்லை.. மொழியையும் தாண்டி திரைமொழிதான் படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறது” - அழகாகப் பேசத்தொடங்குகிறார் ராணா டகுபதி. 

1971-ல் இந்தியா - பாகிஸ்தான் போர் நேரத்தில் கப்பல் மூலம் நடந்த போரை விவரிக்கிறது காஸி. டாப்சி, அதுல் குல்கர்னி, ஓம்பூரி, நாசர் நடிப்பில் மும்மொழியில் உருவாகியிருக்கிறது. 'காஸி' பற்றி சில சிவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொண்டார் ராணா.

இந்தக் கதையைத் தேர்ந்தெடுக்க காரணம்? 

"1971-ல் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போர் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஆனால், விசாகப்பட்டினக் கடலில் நடந்த போர் பற்றி அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆந்திராவில் இருக்கும்போது பல முறை விசாகப்பட்டினம் போயிட்டு வந்திருக்கேன். ஆனால் வைசாக் கடலில் நடந்த போர் பற்றி அங்கிருப்பவர்களுக்கே முழுமையாகத் தெரியவில்லை. அந்தப் போர் பற்றி நிறைய தெரிஞ்சிக்கணும்ங்குற ஆசைதான் இந்த படத்தில் நடிக்கக் காரணம். 

அந்த நேரத்தில்தான் இயக்குநர் சங்கல்லைச் சந்தித்தேன். அவர் எழுதிய  ‘ப்ளூ ஃபிஷ்’ கதையை மையமா வெச்சு குறும்படம் எடுக்கத் தயாராகிட்டு இருந்தார்.  வீட்டு மொட்டை மாடியிலேயே கப்பலுக்கான செட் போட்டிருந்தார். வித்தியாசமா இருக்கவும், போய் விசாரிச்சோம். இவருடைய புத்தகமும் கதையும் கேட்டு இம்ப்ரெஸ் ஆகிட்டோம். யாருக்குமே தெரியாத போர் நிகழ்வுக் கதையை, இந்தப் படம் மூலம் தெரியப்படுத்த தயாராகிட்டோம்.”

இந்தப் படத்தில் என்ன ஸ்பெஷல்? 

“போர் சம்பந்தமான எத்தனையோ படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. ஆனா தண்ணிக்குக் கீழே நடக்கும் யுத்தம் பற்றித் தெரிஞ்சிருக்கவோ, பார்த்திருக்கவோ முடியாது. நீர்மூழ்கிக் கப்பலில் வேலை செய்யுறவங்க, 'யூஸ் அண்ட் த்ரோ' துணிகள்தான் பயன்படுத்துவாங்க. அதாவது, அதை அடுத்த தடவை யூஸ் பண்ணமாட்டாங்க! ஷேவ் பண்ணமாட்டாங்க; குளிக்கமாட்டாங்க; அதிகபட்சமா கை மட்டும்தான் கழுவுவாங்க... இந்த மாதிரியான எந்த விஷயமும் நமக்குத் தெரிஞ்சிருக்க முடியாது. நமக்கான விடுதலை, நிலத்துக்கு மேல நடந்த போராட்டமும் துப்பாக்கிச் சண்டையும்தான்னு நினைச்சிட்டு இருப்போம். தண்ணிக்குக் கீழே நடந்த யுத்தத்தையும் மக்கள் இந்தப் படம் மூலமா தெரிஞ்சிக்குவாங்க. 

முன்னாடியெல்லாம் கப்பல் படை பற்றி எதுவும் தெரியாமல் இருந்தேன். இந்தப் படத்துக்குப் பிறகு NAVY மீது மரியாதை வந்திருக்கிறது. நிச்சயம் கடற்படை வீரர்கள் பற்றி நீங்க  தெரிஞ்சிக்கவும், பெருமைப்படவும் நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கு. அது மட்டுமில்லாமல், என்னோட முதல் படத்திலிருந்து இப்பொழுது வரைக்கும் ஆக்‌ஷன் ஹீரோவாதான் நடிச்சிருக்கேன். முதன்முறையா வித்தியாசமான ராணாவைப் பார்க்கலாம். பாகுபலி பல்வாள்தேவனா இந்த ராணான்னு ஆச்சர்யப்படுவீங்க. இந்திய சினிமாவுக்கு ரொம்ப முக்கியமான படமாகவும் ‘காஸி’ இருக்கும்!”

மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கா? 

“பொதுவாக தெலுங்கில் எடுக்கும் படங்களின் பட்ஜெட்டைவிட இரண்டு மடங்கு செலவழிச்சு 'பாகுபலி' எடுத்தோம். மக்கள் பார்ப்பாங்களா, இந்தப் படம் பிடிக்குமாங்கிறது எல்லாம் தெரியாது. ஆனா ஒரு நம்பிக்கை இருந்துச்சு. எந்த மொழினாலும் சரியான படம், நிச்சயம் ஹிட்டாகும். அந்த நம்பிக்கையில்தான் 'காஸி'யும் எடுத்திருக்கோம். சின்ன சிட்டியிலிருந்து ஒரு படம் பண்ணணும்னு நினைச்சாகூட, படத்தை வித்தியாசமா, மக்களுக்குப் பிடிக்கிற மாதிரி எடுத்தோம்னா, படம் வெற்றிதான். அதே ஃபார்முலாதான் இதுக்கும். இந்தியாவில் நடக்கும் கதை; இந்தியர்களுக்கான கதை... இந்த மாதிரியான நிறைய சினிமாக்கள் உருவாக இந்தப் படம் முன்னுதாரணமாக இருக்கும்." 

விஷுவல் எஃபெக்ட்ஸில் இருந்த சவால்கள்? 

"நினைத்ததைவிட அதிகமாகவே செலவு செய்திருக்கிறோம். விஷூவல் எஃபெக்ட்ஸ் மட்டும் 11 மாதம் ஆகிடுச்சு. தண்ணிக்கு அடியில் மட்டும் 7000 ஷாட்ஸ் எடுத்திருக்கோம், டிரெய்லர் உங்களை ஈர்த்த மாதிரி படமும் உங்களை தண்ணிக்கு அடியில் கொண்டுவரும்!

இந்தியாவைத் தவிர, மற்ற நாடுகளில் ரிலீஸ் செய்ய எண்ணம் இல்லையா? 

"முதலில் இந்திய மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடணும். இந்தியாவில் வரவேற்பு கிடைச்சதும், வெளிநாட்டு மொழிகளில் ரிலீஸ் செய்வோம்!"

-முத்து பகவத்- 

பின் செல்ல