Published:Updated:

சசிகலா Vs பன்னீர்செல்வம் - சினிமா பிரபலங்கள் யார் பக்கம்?

கே.ஜி.மணிகண்டன்
சசிகலா Vs பன்னீர்செல்வம் - சினிமா பிரபலங்கள் யார் பக்கம்?
சசிகலா Vs பன்னீர்செல்வம் - சினிமா பிரபலங்கள் யார் பக்கம்?

கமலஹாசன் அடிக்கடி ட்விட் தட்டுகிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்த இயக்குநர் பாலா, ஓ.பி.எஸ்ஸைத் தேடிச்சென்று ஆதரவு தருகிறார். நடிகை கவுதமி ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாகக் கருத்து சொல்கிறார். நடிகர் சித்தார்த், அருள்நிதி 'ஐ சப்போர்ட் பன்னீர்' பேனரைத் தூக்குகிறார்கள். இசையமைப்பாளர் இமான்கூட கருத்து சொல்லியிருக்கிறார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சினிமா உலகம் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறது, பேசுகிறது. சரி, பிளவுபட்டுக் கிடக்கும் அ.தி.மு.க கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் லிஸ்டில் இருக்கும் சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?

நடிகர் ராமராஜன், ''மக்கள் விரும்பியதால் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு கொடுத்திருக்கிறேன். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் பன்னீர்செல்வம். அரசியல் வரலாற்றில் முதன்முறையாக மக்கள் புரட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்கள் அனைத்திலும் ஓ.பி.எஸ் மக்களின் நாயகனாகத் திகழ்கிறார்'' என அதிரி புதிரியாகப் புகழ்ந்துவிட்டு, ''ஓ.பி.எஸ் என்றால், ஓயாமல் பணி செய்பவர் என்று பொருள்'' எனப் பன்ச் அடித்திருக்கிறார். ராமராஜனுடன் கை கோத்து வந்த மற்றொரு நடிகர் தியாகுவும், ''ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களின் ஆதரவும், ஏழரை கோடி தமிழக மக்களின் ஆதரவும் பன்னீர்செல்வத்துக்கே இருக்கிறது!'' என்றார்.

'ஒரு தியானம் கலைந்தது. தமிழகம் நிமிர்ந்தது' டேக்லைனுடன் பேசிய இயக்குநர், நடிகர் மனோபாலா, ''என்னைக்கு அண்ணன் வாயைத் திறப்பார் எனக் காத்திருந்தேன். அம்மாவின் ஆத்மாவினால், அண்ணன் தியானம் கலைந்தது. தமிழகம் விழித்தது!'' என்று பாராட்டிப் பேசிவிட்டு, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்.

சி.ஆர்.சரஸ்வதி 'சின்னம்மாவே கதி'யெனக் கிடக்கிறார். 'இத்தாலியில் பிறந்த சோனியாவை ஏத்துப்பீங்க. இங்க பொறந்த சின்னம்மாவை ஏத்துக்கமாட்டீங்களா?'' என நடிகர் செந்தில், 'ஐ சப்போர்ட் சின்னம்மா' என்கிறார்கள். இயக்குநர் நாஞ்சில். பி.சி.அன்பழகன், அனுமோகன், குண்டு கல்யாணம் உள்ளிட்ட சிலரும், 'அம்மாவுக்குப் பிறகு சின்னம்மா'வே என சுதி மாறாமல் சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவுக்கு எதிர்ப்பு காட்டிக்கொண்டிருந்த நடிகர் ஆனந்தராஜ், இருவரையும் ஆதரிக்கவில்லை. 'மறுதேர்தல் நடத்துவதே சரியானது' என்ற நடுநிலைத் தீர்ப்பைச் சொல்லியிருக்கிறார். தவிர, 'அரசியலில் இருந்தே ஒதுங்குகிறார்', 'அம்மாவை அழைத்த வாயால், எப்படி சின்னம்மா என்று அழைப்பேன்? என ஆதங்கப்பட்டார்', 'பன்னீருக்கு ஆதரவு கொடுக்கிறார்' என்றெல்லாம் செய்திகள் பரவிக்கொண்டிருக்க... 'ஆளுநர் சொல்லட்டும்னு காத்திருக்கோம்' மைண்ட் வாய்ஸில் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார், விந்தியா.

ஆதரவு/எதிர்ப்பு நிலையைத் தெரிவிக்காத சிலரைத் தொடர்புகொண்டு பேசினேன். ''நான் இன்னும் அம்மா இறந்த துக்கத்தில் இருந்தே மீண்டு வரலை. எனக்கு எல்லாமே அம்மாதான். அவங்க தைரியம், தன்னம்பிக்கையைப் பார்த்துதான் அரசியலுக்கு வந்தேன். அவங்களுக்கு ஆதரவா இருப்போம்னு கட்சியில சேர்ந்தேன். மத்தவங்க மாதிரி, இங்கே அங்கேனு கட்சிக்காக ஓடி ஓடி உழைச்ச ஆள் நான் கிடையாது. ரெண்டு தரப்புல இருந்தும் அழைப்பு வந்துச்சு. ஆனா, இப்போதைக்கு என்ன முடிவு எடுக்குறதுனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன். முடிவெடுக்கக்கூடிய மனநிலை, அனுபவம் எதுவுமே எனக்கு இல்லை. அதனால, மக்களோட மக்களா கட்சியில நடக்குறதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேன்!'' எனக் குழப்பம் மாறாமல் பேசுகிறார், நடிகை ஆர்த்தி.

''நான் எந்தப் பதவிலேயும் கிடையாது. பிரசாரத்துக்கு மட்டும்தான் போவேன். எல்லோருக்கும் உள்ள கன்ஃபியூசன்தான் தம்பி எனக்கும் இருக்கு. கட்சிப் பொறுப்புல, ஆட்சிப் பொறுப்புல இருக்கிறவங்களே திணறிக்கிட்டு இருக்காங்க, நாம எம்மாத்திரம்? அந்த டீம்ல இருந்து இந்த டீமுக்கு வர்றாங்க. இந்த டீம்ல இருந்து அந்த டீமுக்குப் போறாங்க... அதனால, ஆளுநர் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதுபடியே போவோம்னு, நட்சத்திரப் பேச்சாளர்களா இருக்கிற நடிகர்கள் சிலபேர் எங்களுக்குள்ள பேசிக்கிட்டோம். ஏன்னா, ஆணித்தரமா எதையும் சொல்லமுடியலை. 'கார்டனுக்கு வாங்க'னு அழைப்பு வந்துச்சு. கண் ஆபரேஷன் பண்ணியிருக்கிறதால, எங்கேயும் நகரமுடியாது. நிலைமையைச் சொல்லிட்டேன். 'இரட்டை இலை'ங்கிற சின்னம்தான் எனக்கு முக்கியம். அது யாருக்குப் போகுதோ, அவங்க பக்கம் நான் நிற்பேன். அது சசிகலாவா இருந்தாலும் சரி, பன்னீர்செல்வமா இருந்தாலும் சரி, வேற யாராவது ஒருத்தரா இருந்தாலும் சரி... இப்படி ஒரு முடிவுலதான் இருக்கேன். ஆனா, அம்மா கை காட்டுன பன்னீர்செல்வம், தன்னோட பதவியை ராஜினாமா பண்ணாம இருந்தா, நல்லா இருந்திருக்கும்!'' என்கிறார், நடிகர் பொன்னம்பலம்.

''இரட்டை இலை சின்னம் யாருக்கோ, அவங்களுக்குத்தான் என் ஆதரவு. மத்தபடி, எனக்கு எல்லோரையும் பிடிக்கும். இதுவரை இரட்டை இலை சின்னத்துக்காகத்தான் பிரசாரம் பண்ணேன். இனியும் இரட்டை இலை சின்னத்துக்காகப் பிரசாரம் பண்ணுவேன்'' - இது நடிகர் வையாபுரி அடித்த பல்டி.  ''நான் கட்சியில மக்களுக்காக கலை நிகழ்ச்சிகள் பண்றவன். அதனால, மக்கள் யாருக்கு ஆதரவா நிற்கிறாங்களோ, அவங்க பக்கம் நிற்பேன்'' - இது நடிகர் போண்டா மணி சொன்ன பதில்.

பூசி முழுகிப் பேசுகிறார்களே தவிர, அ.தி.மு.க-வில் இருக்கும் பெரும்பாலான சினிமா பிரபலங்கள் ஓ.பி.எஸ் பக்கம்தான் என்பது, அவர்களது பேச்சில் தெரிகிறது.

- கே.ஜி.மணிகண்டன்