Published:Updated:

காதலில் திளைக்க வைப்பது கௌதம் மேனனா... செல்வராகவனா..?

காதலில் திளைக்க வைப்பது கௌதம் மேனனா... செல்வராகவனா..?
காதலில் திளைக்க வைப்பது கௌதம் மேனனா... செல்வராகவனா..?

காதல் படங்களுக்கு என எப்போதுமே தனி மார்க்கெட், அதற்கான ஆடியன்ஸும் உண்டு. சொல்லப்போனால் எல்லா டைப் படங்களுக்கும் மார்க்கெட் உண்டு. ஆனால், காதல் படங்களுக்குச் சில வசதிகள் இருக்கின்றன. ஆக்ஷன்  படத்தைப் பார்க்கும் யாருக்கும் இதுபோல அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேண்டும் என்று தோன்றுவது கிடையாது. நிஜத்தில் ஹீரோயிசம் காட்டினால் முகம்  பேந்துவிடும் எனத் தெரியும். எனவே, தன்னை அந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது இல்லை, பேய்ப் படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணுவார்களே தவிர, நம் வீட்டில் இப்படி ஒரு பேய் இருந்தால் தினமும் த்ரில்லிங்கா இருக்குமே என நினைப்பவர்கள் கிடையாது. இங்குதான் காதல் படங்கள் ஜெயிக்கின்றன. 'இந்த மாதிரி காதல் நமக்கு வந்தா நல்லாயிருக்குமே' என நினைக்காதவர்கள் இருக்க முடியாது. காதல் சினிமாக்கள் என்றால் மணிரத்னம்தான் க்ளாஸ் என பொதுக்கருத்து உண்டு. பாரதிராஜாவோ, மகேந்திரனோ, பாலுமகேந்திராவோகூட, மணிரத்னம் அளவுக்கு காதல் பட இயக்குநர்களாக கவனிக்கப்படவில்லை.

இன்றும், `ஓ காதல் கண்மணி' அதற்குப் பிறகு `காற்று வெளியிடை' என நின்று ஆடிக்கொண்டிருக்கிறார். மணிரத்னம் தாண்டி நாம் கவனிக்கத்தகுந்த இரண்டு இயக்குநர்கள் கெளதம் மேனன் மற்றும் செல்வராகவன். இருவரும் காதலை அணுகும்விதம் வேறுவேறாக இருக்கும். இருவருக்குமான இந்த ஒப்பீடு,  'யார் ஆவ்ஸம்; யார் மோசம்' என்கிற வகையில் கிடையாது. சிம்பிளாக இருவரும் சினிமாவில் காட்டிய காதலை வைத்துச் செய்யப்படும் சின்ன அலசல் மட்டுமே...

கார்த்திக் VS கார்த்திக்:

கௌதமின் ஹீரோ என்றாலே இன்ஜினியரிங் முடித்து இருப்பார்கள் என்பது மிகப் பொதுவாக சொல்லப்படுகிறது. அப்படியே செல்வாவைப் பார்த்தால் அவரின் ஹீரோக்களுக்கு எனக் குறிப்பிடத்தகுந்த படிப்பு எதுவும் கிடையாது. கௌதமின் ஹீரோக்கள் பெண்களுக்கு ஃபேவரிட், செல்வாவின் ஹீரோக்களுக்கு அந்த அளவு அழகாக வசனம் பேசவராது, மிகத் தெளிவாக ஒரு ப்ரபோசலை நிகழ்த்தத் தெரியாது. பளிச்சென அவர்கள், 'ஐ லவ் யூ' எனச் சொல்லி பழகவில்லை என்றாலும் காதலை அவர்களால் உணர்த்த முடியும். `காதல் கொண்டேன்' வினோத்தும், `மின்னலே' ராஜேஷ் சிவகுமாரும் ஒப்பிடவே முடியாதவர்கள். ஆனால் இருவருக்கும் உள்ள ஒற்றுமை, காதல். சில நேரம் கௌதமின் ஹீரோக்கள் காதல் தோல்வியை ஏற்றுக் கொள்ளக் கூட தயாராகவே இருப்பார்கள். ஆனால், செல்வாவின் ஹீரோக்களுக்கு அது சிரமமான விஷயம். சிலநேரம் கௌதமின் ஹீரோக்கள் மனதளவில் கொஞ்சம் ரிலாக்சாகவும், செல்வாவின் ஹீரோக்கள் ஒரு சிக்கலோடும் இருப்பதைப் பார்க்க முடியும். காரணம், `விண்ணைத்தாண்டி வருவாயா' கார்த்திக்கிற்கு ஜெஸ்ஸியின் காதல், சினிமா தவிர வேறு கவலைகள் இருக்கவில்லை. `மயக்கம் என்ன' கார்த்திக்கு அதைத் தாண்டிய சில பிரச்னைகள் இருந்தன.  

ஜெஸ்ஸி க்ளாஸ்... யாமினி மாஸ்! 

கௌதமின் ஹீரோயின்கள்  மிக அழகானவர்கள், செல்வாவின் ஹீரோயின்களும் அழகானவர்களே. இவர்களுக்கான வித்தியாசங்கள் வேறு. `மின்னலே' ரீனாவுக்குக் கோபம் வந்தால் கன்னாபின்னாவென கத்துவார், இட்ஸ் ஓவர் என மெசேஜ் அனுப்புவார், செல்வாவின் ஹீரோயின்களின் கோபம் அதையும் தாண்டி வேறு லெவலில் இருக்கும். காரணம் இதுவாகக்கூட இருக்கலாம். பொதுவாக, கௌதமின் ஹீரோயின்களுக்குக் காதல் தாண்டி திருமணம் வரைக்கும் போகும் ப்ராசஸ் நடப்பதில்லை. ஒன்று ஜெஸ்ஸி போன்று ப்ரேக்-அப் நிகழ்கிறது. இல்லை ஆராதனா போல் மேரேஜ் ஃபெயிலியரில் முடிந்து இரண்டாவது காதல் துவங்குகிறது. அதுவும் இல்லை என்றால் ஹீரோயின் கடத்தவோ, கொல்லவோ படுவார்கள். ஆனால், செல்வாவின் ஹீரோயின்களுக்கு அடுத்த கட்டத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. காதலின்போது வராத பிரச்னைகளைத் திருமணத்திற்குப் பிறகு சந்திக்க நேரிடுகிறது. இதை எல்லாம் தாண்டி கௌதமின் ஹீரோயின்களுக்கு இருக்கும் ப்ளஸ், மிக அழகான கான்வர்சேஷனை அவர்களுடன் ஹீரோ நிகழ்த்த முடியும். அதுவே செல்வாவின் ஹீரோயின்களால் ஹீரோவை பயங்கரமாக மோட்டிவேட் செய்ய முடியும், மிக ஸ்ட்ராங்கான முடிவுகளை எடுக்க முடியும்.  

இங்க என்ன சொல்லுது: 

அழகான, கலர்ஃபுல்லான காதல் ஒன்றை கௌதமின் படங்களில் பார்க்க முடியும், செல்வாவின் படங்களிலும் பார்க்க முடியும். கௌதமால் ஸ்ட்ரெயிட்டாக ஹீரோ-ஹீரோயின் காதலை ஹேண்டில் பண்ண முடியும். ஆனால், செல்வாவின் ஹீரோ, ஹீரோயினுக்கு இடையில் சில தடைகள் இருக்கும். கௌதமின் ரீனா போன்றோ, மாயா போன்றோ, மேக்னா போன்றோ, நித்யா போன்றோ காதலை அவ்வளவு சீக்கிரத்தில் அவர்களால் ஒத்துக் கொள்ள முடியாது. செல்வாவின் அனிதாவுக்கு கதிரிடம், காதல் என்றால் என்ன எனப் புரியவைக்கவே பாதிப் படம் தேவைப்படுகிறது, தன்னைக் காதலிப்பவனின் நண்பன் மீதுதான் தனக்குக் காதல் என யாமினி தெரிந்து கொள்ளவும், தெரிய வைக்கவுமே நிறைய நேரம் தேவைப்படுகிறது. இதற்கு இடையில் அவர்களுக்கு அழகாக ஒரு காதல் செய்ய எங்கு நேரமிருக்கும்?  

உரையாடல்கள்: 

மிக அழகாக ஒரு காதல் உரையாடல் ஒன்று கௌதமின் படங்களில் எப்போதும் பார்க்கலாம். நிறைய ஆங்கில வசனங்கள் இருக்கும் என கெளதம் மீது படாரென ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுவதுண்டு. அதனாலேயே அவரின் சில அழகான வார்த்தைப் பிரயோகங்களை நாம் தவறவிட்டிருப்போம். "மின்னல் வெளிச்சத்தில் ஒரு பொண்ணைப் பார்த்தேன், அவளும் மின்னல் மாதிரிதான். ஒரு ஃப்ளாஷ்... மனசே போயிடுச்சு", "அழகான என் மாயா, அழகழகான என் மாயா", "நீ காதல்னு சொல்றதுக்கு முன்னாடி வரைக்கும் நமக்குள்ள ஒரு உணர்வு இருந்ததில்ல, அது நல்லா இருந்தது. அது அப்படியே இருக்கட்டும்" - இப்படி அழகான இடங்களில் மிக அழகாக தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் கெளதம் வல்லவர். அதுவே செல்வா படங்களில் வசனங்களுக்கு என ஒரு ஃபார்மேஷன் கிடையாது, அது எப்படி வேண்டுமானாலும் இருக்கும். "நீ இப்படியே சிரிச்சுப் பார்த்தா போதும்டி, உலகத்தையே கொண்டுவந்து உன் கால்ல வைக்கமாட்டேன்" என்பதுபோலவும் இருக்கும், "இதோ பாரு, எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு, உனக்காக என்ன வேணாலும் செய்வேன். உன்னப் பத்தியே தான் எப்பவும் யோசிப்பேன். இத நீ நினைச்சாலும் நிறுத்த முடியாது, நான் நினைச்சாலும் நிறுத்த முடியாது", கொஞ்சம் இறங்கி வந்து "உன்ன முறைச்சுப் பாக்கறது, உம் மேல வந்து உரசுறது, இந்த மாதிரி ப்ளேடால உன் பேர கீறிக்கிறது, இதான் எனக்குத் தெரிஞ்ச லவ்..." -இது போலவும் இருக்கும். இன்னும் கீழிறங்கிக்கூடப் போகும். என்ன, அதுவே காதல் பற்றி அறிமுகமே இல்லை என்றாலும் 'காக்க காக்க' அன்புச்செல்வனால் இன்னும் அழகான வசனத்தால் தன் உணர்வை வெளிப்படுத்த முடியும். எது எப்படியோ இருவராலும் வேறு வேறு விதத்தில் தங்கள் சூழலுக்குத் தகுந்தபடி காதலை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதைப் படரவிட முடியும், பட்டென ஒரு ப்ரேக்-அப்பையும் நிகழ வைக்க முடியும்.  

இசை - வரிகள்: 

இருவரும் மியூசிக்கலாக கதை சொல்வதில் அதீத ஆர்வம் கொண்டவர்கள். கௌதமுக்கு ஹாரீஸ் அல்லது ரஹ்மான் என்றால், செல்வாவுக்கு யுவன். இருவருக்குமே அசத்தலான பாடலாசிரியர் அமைந்தது மிகப் பெரும் பலம். "அலர் நீ, அகிலம் நீ" எனக் கவிதையாய் தாமரை எழுதினால், "நடைபாதைக் கடையில் உன் பெயர் படித்தால்; நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்" என நடைமுறை உதாரணத்துடன் வருவார் நா.முத்துக்குமார்.    

செல்வா, கெளதம் மற்றும் காதல்: 

இருவர் சொல்லும் காதல்களும் மிக எக்செப்ஷனல்தான். எப்போதாவது யாருக்காவது நிகழும் ஒன்று. கெளதம் மேனன் படத்தை காதலர்கள் ஜோடியாகப் பார்த்தால் பிரிந்து விடுவார்கள் என்று சொல்லப்படும் வதந்திபோல்தான். கவிதைபோல பேசிப் பழகி, மிகக் கவனமான வார்த்தைகளால் காதலை வளர்ப்பவர்களும் இங்கு கிடையாது. அதே நேரத்தில், "ஆமா நான் இப்படித்தான்" என உடைத்துப் பேசி ஒருவித வேகத்துடன் இறங்குபவர்களும் கிடையாது. எப்போதும்போல,  "ஏன் இந்தச் சட்டையப் போட்ட?",  "ஏன் இன்னும் ரிப்ளை வரல" என்பதுபோன்ற சண்டைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், இந்த இரண்டு டைப் காதல்களை ஒரு எண்டர்டெயினர் அல்லது ஃபீல் குட் என்கிற ரீதியில்தான் அணுக முடியும். ஆனால், கிட்டாருடன் வந்து பாட்டுப்பாடி நம்மிடம் ப்ரப்போஸ் செய்வதுபோல ஒரு ஆணையோ, மிகவும் போல்டான நம்மை மிக மெச்சூரிட்டியுடன் நடத்தும் பெண்ணையோ நோக்கிய எதிர்பார்ப்பு ஒன்று இருப்பதால் கெளதம் மற்றும் செல்வா இருவரின் காதல் கதைகளும் மிகப் பெரிய தாக்கத்தை உண்டு செய்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. 

- பா.ஜான்ஸன்