Published:Updated:

'ரேடியோ பெட்டி' நிலைமை வேற எந்தப் படத்துக்கும் வரக்கூடாது!'' - கலங்கும் இயக்குநர் ஹரி

'ரேடியோ பெட்டி' நிலைமை வேற எந்தப் படத்துக்கும் வரக்கூடாது!'' - கலங்கும் இயக்குநர் ஹரி
'ரேடியோ பெட்டி' நிலைமை வேற எந்தப் படத்துக்கும் வரக்கூடாது!'' - கலங்கும் இயக்குநர் ஹரி

கொண்டாடப்படுவது, விமர்சிக்கப்படுவதைத் தாண்டி ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி, அந்தப் படைப்பு ரசிகர்களைச் சென்றடைகிறதா என்பதுதான்! தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகாமல் முடங்கிக் கிடப்பதெல்லாம் 'டேக் இட் ஈஸி' விஷயம். வெளியிடப்படாத, வெளியிட முடியாத படங்களின் எண்ணிக்கை பல நூறுகளில் இருக்கின்றன. ஆனால், பல நாடுகளில் விருதுகளை அள்ளிய ஒரு தமிழ்ப்படம், திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது உச்சகட்டக் கொடுமை. பல விருதுகளைப் பெற்ற பெருமையோடு, 'திரையரங்குகளில் வெளியாகவில்லை' என்ற சிறப்பையும் (?!) பெற்றிருக்கிறது 'ரேடியோ பெட்டி' திரைப்படம். 

ஒரு ரேடியோ பெட்டிக்கும், வயதான முதியவர் ஒருவருக்குமான நெருக்கமும் பிணைப்பும்தான் 'ரேடியோ பெட்டி' படத்தின் கதை. 2015-ல் உருவான இப்படம், சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த 'ரேடியோ பெட்டி'யின் கதையை இயக்குநர் ஹரி விஸ்வநாத் சொல்வார். 

''ரெண்டு குறும்படம் இயக்கியிருக்கேன். இது என்னுடைய முதல் படம். எங்க தாத்தா பயன்படுத்திக்கிட்டு இருந்த ஒரு பழைய ரேடியோ பெட்டியைப் பார்க்கும்போதுதான், எனக்கு 'ரேடியோ பெட்டி' படத்தோட கதை கிடைச்சது. என் தாத்தாவோட ஆக்டிவிட்டிக்கு உயிர் கொடுத்து, கொஞ்சம் கற்பனையும் கலந்து அதைப் படமா எடுத்தேன். பாட்டு, ஃபைட்டுனு கமர்ஷியல் படங்களுக்கான பிரதானத்தையெல்லாம் இதுல சேர்க்காம, கதைக்குத் தேவையானதை மட்டுமே எடுத்தோம். தயாரிப்பாளர்கள் கிடைக்கிறதுல சிரமம் இருந்துச்சு. நண்பர்களும் நானும் சேர்ந்து படத்தை முடிச்சிட்டோம். ரிலீஸ் பண்றதுக்குப் பணம் வேணுமே? எங்ககிட்ட இல்லை. சரி, விருதுகளுக்கு அனுப்புனா, படத்துக்கும் பப்ளிசிட்டி கிடைக்கும்; ரிலீஸ் பண்றதுக்கும் யாராவது முன்வருவாங்கனு ஃபிலிம் ஃபெஸ்டிவல்களுக்கு அனுப்பினோம். தென் கொரியாவின் 'புசான் சர்வதேச திரைப்பட விழா 2015'-ல் எங்களோட 'ரேடியோ பெட்டி' சிறந்த படம்னு விருது வாங்குச்சு. இந்த விருதைப் பெறும் முதல் தமிழ் சினிமா எங்க படம்தான். தவிர ஸ்பெயின், கனடானு பல நாடுகளோட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல சர்வதேச விருதுகளை வாங்கினோம்.

படத்தைப் பார்த்த எல்லோருமே பாராட்டினாங்க. ஒரு திரையிடலுக்கு பிளான் பண்ணேன். இயக்குநர்கள் வஸந்த், எம்.ராஜேஷ், பொன்ராம், சக்தி சரவணன்... எல்லோருமே சொன்ன ஒரு விஷயம், 'நாங்க இதுமாதிரி சினிமா எடுக்கத்தான் வர்றோம். ஆனா, சூழல் எங்களை வேற மாதிரி படங்கள் பண்ண வைக்குது. ஆனா, நீங்க முதல் முயற்சியிலேயே தைரியமா இறங்கியிருக்கீங்க'னு மனசாரப் பாராட்டுனாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. தயாரிப்பாளர் சங்கத்துல இருந்து சிலர், விநியோகஸ்தர்கள் சிலரும் படத்தைப் பார்த்தாங்க. 'படம் நல்லா இருக்கு. ஆனா, இதுமாதிரியான படங்கள் குறிப்பிட்ட ஆடியன்ஸுக்கு மட்டும்தான் ரீச் ஆகும்'னு சொல்லிட்டாங்க. எங்களாலேயும் தனிப்பட்ட முறையில ரிலீஸ் பண்ண முடியலை. வேற என்ன வழி இருக்குனு யோசிச்சப்போதான், 'நெட்ஃபிலிக்ஸ்'ல ரிலீஸ் பண்ணலாம்னு ஐடியா கிடைச்சது. கடந்த ஜனவரி 1-ல் படம் இணையத்துல வெளியாச்சு. சந்தோஷமா, வருத்தமானு தெரியலை... தியேட்டர்ல ரிலீஸ் ஆகாம, நேரடியா 'நெட்ஃபிலிக்ஸ்'ல வெளியாகுற முதல் தமிழ்ப் படமும் இதுதான்!

தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள்... யாரையும் நான் குற்றம்  சொல்ல விரும்பலை. ரிலீஸ் பண்ண வழியில்லாம ஒரு படத்தை எடுத்ததுல என்னுடைய தவறும் இருக்கு. ஆனா, இந்த மாதிரி படங்களையும் ஆடியன்ஸுக்கு ரீச் ஆக்குற வழிமுறைகளை எதிர்காலத்துல கொண்டுவந்தா, சந்தோஷமா இருக்கும். கேரளா, கர்நாடகாவுலகூட இதுபோன்ற இண்டிபெண்டன்ட் மூவீஸுக்கு திரையரங்குகளில் ஒரு காட்சியாவது ஓட்டுறாங்க. நம்ம ஊர்லதான் அதுக்கான வழி இல்லை. எதிர்காலத்துல 'ரேடியோ பெட்டி'க்கு ஏற்பட்ட நிலைமை வேற எந்தத் தமிழ்ப்படத்துக்கும் ஏற்படக்கூடாது!'' என்கிறார், படத்தின் இயக்குநர் ஹரி விஸ்வநாத்.

- கே.ஜி.மணிகண்டன்