Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இப்படியெல்லாம் காஸ்ட்யூம்களை கண்டதுண்டா யுவர் ஹானர்? #FunnyCostumes

வ்வொரு காலகட்டத்திலும் விதவிதமான காஸ்ட்யூம்களில் வலம்வந்து அசத்திய தமிழ் சினிமா நட்சத்திரங்களின் காஸ்ட்யூம் கலாட்டா இது!

ரஜினிகாந்த் : 

ரஜினி காஸ்ட்யூம்

யோசித்துக்கூட பார்த்திடாத தாறுமாறு கெட்டப்களில் நடித்து, இளைஞர்களையும் அதில் அலையவிட்ட பெருமை சூப்பர் ஸ்டாரையே சேரும். ஒருகட்டத்தில் ஷூவுக்கு உள்ளேயே பேண்ட்டை இன் பண்ணிக் கதிகலங்க வைத்தார். அதுவொரு ஃபேஷன் ஆனது காலம் செய்த கறுப்புக் காமெடி. 80-களில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்ததாலோ என்னவோ... மிளிரும் மின்விளக்குகளை சட்டையில் மாட்டிக்கொண்டு டூயட்டும் ஆடியிருப்பார். இது பரவாயில்லை. வெடிகுண்டைக் கட்டிக்கிட்டு டூயட் ஆடிய கொடுமைக்கு, இது எவ்வளவோ பரவாயில்லைனு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான். 

விஜயகாந்த் :

விஜயகாந்த் காஸ்ட்யூம்

தனக்கு மட்டுமில்லாம, தம்பிகளுக்கும் 'தொள தொள' சட்டைகளைத் தைத்துக்கொடுத்து கலக்கல் காஸ்டியூம் ஆக்கிய வித்தைக்காரர். தயாரிப்பாளர்களுக்கு செலவைக் குறைப்பதற்காக, தனது படங்களில் காஷ்மீர் தீவிரவாதிகளையும் சென்னைக்குள் தமிழ்பேசி உலவவிட்ட குழந்தை மனசுக்காரர். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டிருந்ததால், 'வைதேகி காத்திருந்தாள்' படத்தின் ஒரே ஒரு சட்டை பேண்ட்டில்தான் பெரும்பாலான காட்சிகளில் நடித்திருப்பார் நம்ம கேப்டன். 'யார்றா அது யார்றா... மாத்துத்துணி கூட இல்லாமலா ஒரு மனுஷனை நடிக்க வைப்பீங்க?'னு கேப்டனோட மைண்ட் அப்பவே வாய்ஸ் கொடுத்திருக்கும்ல?

கமல்ஹாசன் :

கமல்ஹாசன் காஸ்ட்யூம்

கெட்டப் போடவே பொறந்தவருக்கு, அதுக்குச் செட் ஆகுறமாதிரி காஸ்ட்யூம் புதுமைகளைப் புகுத்தாமலா இருப்பார்? வெளுத்து வாங்கினார். 'சிங்காரவேலன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'புதுச்சேரி கச்சேரி' பாடலில் இவர் அணிந்துவந்த உடைதான் அதில் ஹைலைட். அதுவரை எந்த இசைக் கலைஞனும் அணிந்திராத வகையில், அத்தனை இசைக்கருவிகளையும் பெல்ட் போட்டுக்கட்டி அணிந்தபடி ஆடி, தான் ஒரு சகலகலா வல்லவன் என்பதை அப்போதே நிரூபித்துக் காட்டியிருப்பார். பேண்ட்டை தொப்புளுக்கு ஏற்றி பெல்ட் மாட்டும் பழக்கத்தைப் பரப்பியவர்களில் இவரும் ஒருவர். 

விஜய் :

விஜய் காஸ்ட்யூம்

சட்டையை இப்படியும் போடலாம்ங்கண்ணா... என உலகுக்கு உணர்த்தியவர் விஜய். 'போக்கிரி' படத்தில் வெயில் நேரத்திலும் ஒரே நேரத்தில் இரண்டு சட்டைகளை அணிய எப்படிதான் இவரால் மட்டும் முடிந்ததோ! போதாக்குறைக்கு சில படங்களில் ஜெர்க்கின் போட்டுக்கொண்டு வேறு நடமாடுவார். சமீபத்தில் வெளியான 'பைரவா' படத்தில் உள்ளே கழுத்துவரை அணிந்திருந்த முண்டா பனியன் வெளியே தெரியும்படி ஜிகுஜிகு சட்டையில் ஜொலித்தது இவரது லேட்டஸ்ட் குறும்பு. அதுசரி... காலருக்குள் சிகிரெட்டைச் செருகியவராச்சே! 

அஜித்குமார் :

அஜித்குமார் காஸ்ட்யூம்

'எப்போதும் கோட் சூட் போட்டு நடந்துபோறார்' என்ற தன்மீதான குற்றச்சாட்டை 'வேதாளம்' படத்தில் தகர்த்தெறிந்திருப்பார் அஜித்குமார். 'ஆனா இது அதில்ல!' என பார்ப்போர் யோசிக்கும்படி, விஜயகாந்த் படங்களில் தீவிரவாதிகள் அணியும் முழுநீள காஸ்ட்யூமைக் கடன் வாங்கி போட்டுக்கொண்டு மெர்சல் காட்டினார். அந்த மொட்டைத் தலையோட பார்க்குறப்போ அம்மன் பட வில்லன் மாதிரில்ல இருந்தது என்பதும் இன்னும் சிலரின் மைண்ட் வாய்ஸ். 

தனுஷ் :

தனுஷ் காஸ்ட்யூம்

ஜிகுஜிகு என மின்னும் சட்டையில், நான்கைந்து பட்டன்களைக் கழட்டிவிட்டு நடந்துவந்து கெட்டப் மசாலா காட்டினார் தனுஷ். நீங்க சட்டையைக் கழட்டி விட்டிருக்கிறதைப் பார்த்தாலே பெரிய ரவுடினு தெரியுதுனு நம்மளை எல்லாம் நம்பவைத்து டான்களுக்கான இலக்கணம் வகுத்திருப்பார். 'நானே தைச்சது' என காஜல் அகர்வால் ஆசை ஆசையாகக் கொடுத்த சட்டைக்கும் அதே கதிதான்.

 

- கருப்பு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்