Published:Updated:

குறைந்த பட்ஜெட் படம் என்றாலும் கவர்கிறதா ‘காதல் கண்கட்டுதே’? - படம் எப்படி?

குறைந்த பட்ஜெட் படம் என்றாலும் கவர்கிறதா ‘காதல் கண்கட்டுதே’? - படம் எப்படி?
குறைந்த பட்ஜெட் படம் என்றாலும் கவர்கிறதா ‘காதல் கண்கட்டுதே’? - படம் எப்படி?

குறைந்த பட்ஜெட் படம் என்றாலும் கவர்கிறதா ‘காதல் கண்கட்டுதே’? - படம் எப்படி?

கோயம்புத்தூர் பையனுக்கும், பொள்ளாச்சிப் பொண்ணுக்கும் இடையே இருந்த மூன்று வருட நட்பு காதலாக களை கட்டிய பின்பு ஏற்படும் சில பிரச்னைகளும், அதை அவர்கள் சமாளித்து மறுபடியும் காதல் வளர்த்தார்களா? என்ற, ஆதாம் ஏவாள் காலத்து கதைதான் 'காதல் கண்கட்டுதே'. 

பொள்ளாச்சியில் பத்திரிகை நிருபர் வேலைக்குச் சேரும் அதுல்யா டூவிலர் இல்லாமல் பணியிடத்தில் சிரமப்படுகிறார். ஸ்கூட்டி வாங்க வேண்டுமென்றால் அப்பாவின் பைக்கை விற்றாக வேண்டிய நிலை. ஆனால், அப்பாவின் பைக்கை விற்க மனமில்லாததால் அதிலேயே ஆபிஸ் செல்ல முடிவெடுத்து, பைக் ஓட்டியும் கற்றுக் கொள்கிறார் தைரியமான அதுல்யா.

ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டுமென முடிவு செய்து நண்பனின் உதவியால் சுசுகி பைக் ஷோ ரூமில் வேலைக்குச் சேர்கிறார் கேஜி. கல்லூரியில் படிக்கும்போதே நட்பாக பழகி வரும் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு கட்டத்தில் காதல் வைரஸும் தாக்கிவிடுகிறது. ஊட்டி, மருதமலை என கோவையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் பைக்கிலேயே சுற்றி திரிந்து டூயட் பாடுகிறார்கள். இது மட்டும்தான் மொத்த படத்தின் முதல் பாதியே...

முதல் பாதி மொத்த நேரமும் வெறும் சுவற்றில் வெள்ளை அடிப்பத்தை பார்த்தது போல இம்மி அளவு கூட சுவாரஸ்யமே இல்லாமல் செல்கிறது. நாயகன் கேஜியின் நண்பர்களாக வருபவர்கள் மட்டும் அவ்வப்போது தியேட்டர் சீட்டில் சரிந்து கிடக்கும் நம் நெஞ்சில் டிஃபிப்ரிலேட்டர் வைக்கிறார்கள். படத்தின் இன்டெர்வெல் ட்விஸ்டையும், க்ளைமாக்ஸ் ட்விஸ்டையும் யாருமே யூகித்துவிடாத விதத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர் சிவராஜ். அது ட்விஸ்ட் தான்னு ஒரு யூகமாக கூட சொல்லமுடியாத அளவிற்கு வைத்திருக்கிறார் என்று கூட சொல்லலாம். 

படத்திற்கு ஒளிப்பதிவும் இயக்குநர் சிவராஜ்தான். படம் குறைந்த பட்ஜெட் என்றாலும் ஸ்டெடி ஷாட்கள் தரும் ஓரளவு 'ரிச் ஃபீல்' படத்திற்கு பக்கபலமாக நிற்கிறது. மற்றபடி ஹெலி கேமில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தையும் காட்டுவது, தரையில் விழுந்து கிடக்கும் பூக்களுக்கு க்ளோஸ் அப் வைப்பது என நாம் பல ஆண்டுகளாக பார்த்துப் பழகி போய் பரணில் தூக்கி எறிந்தவைதான். பவன் இசையில் 'காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ' பாடல் மட்டும் 'கேட்கலாம்' ரகம். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். 

குறைந்த பட்ஜெட் படம் தான், டெக்னிக்கலா மிரட்ட முடியாதுதான். ஆனால், ஸ்க்ரிப்ட்டால ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கலாமே பாஸ்! ஹீரோவும், ஹீரோயினும் தோற்றத்தில் நம்ம பக்கத்து வீட்டு பசங்க மாதிரிதான் இருக்காங்க. ஆனாலும், அந்த கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போவது போல, தொடர்புபடுத்திக்கொள்வது போல எந்த அழுத்தமான காட்சிகளுமே இல்லை.

வெறும் கால் மணி நேர குறும்படமாக எடுத்திருக்க வேண்டிய கதையை முழூ நீள திரைப்படமாக எடுத்திருக்கும் இயக்குநரின் மன தைரியத்தை பாராட்டி, அவரை தெம்பூட்டும் விதத்தில் வேணும்னா படம் முடிந்த பின்பு எழுந்து நின்று பத்து முறை கை தட்டலாம். மற்றபடி காதல் கண் கட்டுதே... படம் ஆரம்பிச்சு கால் மணி நேரத்துலேயே கண்ணைக் கட்டுதே! 

அடுத்த கட்டுரைக்கு