Published:Updated:

குதிரைப் பந்தயம் என்ற சூது கவ்வியதா? - ‘என்னோடு விளையாடு’ படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
குதிரைப் பந்தயம் என்ற சூது கவ்வியதா? - ‘என்னோடு விளையாடு’ படம் எப்படி?
குதிரைப் பந்தயம் என்ற சூது கவ்வியதா? - ‘என்னோடு விளையாடு’ படம் எப்படி?

குதிரைப் பந்தயம் என்ற சூது கவ்வியதா? - ‘என்னோடு விளையாடு’ படம் எப்படி?

‘சூதாட்டத்தில் ஈடுபடறவங்களுக்கு குடும்பமே, சொந்தமோ இருக்கக்கூடாது, அப்படி இருந்தா அவங்களையும் சூது கவ்வும்’ என்கிற சீரியஸான கதைகளத்தை விளையாட்டாக சொல்லும் படம் ‘என்னோடு விளையாடு’. 

குதிரைப் பந்தயத்தில் கொடிகட்டிப்பறந்த ராதாரவி, ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் பந்தயத்தில் இறங்குகிறார். இவருக்கு போட்டியாக இருப்பது யோக் ஜப்பி மட்டுமே. அதனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் ராதாரவி. குதிரைப்பந்தயத்தில் பணத்தை இழந்த பரத் இந்த மேட்ச் பிக்ஸிங்கை கண்டுப்பிடிக்கிறார். எனவே ஜெயிக்கும் குதிரை மீது பந்தையம் கட்ட தந்திரம் செய்கிறார் பரத். இந்தச் சிக்கலில் ஆன் தி வே-யில் மாட்டிக்கொள்கிறார் ‘கிருமி’ கதிர். மேட்ச் பிக்ஸிங் என்னவானது, அந்தப் பரபரப்பில் இரண்டு ஹீரோக்களுக்குமான காதலும், அதன் சிக்கலும் என ‘உள்ளே வெளியே’ விளையாட்டுதான் கதை.

பரத் - சாந்தினி மற்றும் கதிர் - சஞ்சிதா இவர்களுக்கான நடிப்பும், காதலும் படம் முழுவதும் நிறைகிறது. கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியில் வேலை செய்யும் பரத், இரவில் குடியும் பகலில் சூதாடியாகவும் வலம் வருகிறார். பெண்களைக் கண்டாலே தெறித்து ஓடும் கதிருக்கு, சஞ்சிதாவுடன் அறையைப் பகிர்ந்து கொள்ளும் சூழல் வாய்ப்பது சுவாரஸ்ய கட்டம். இருவருமே நடிப்பில் கச்சிதமாக பொருந்துகிறார்கள். 

சஞ்சிதாவுக்கும், சாந்தினிக்கும் சரிசமமாக காட்சிகளை பகிர்ந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர். இருவருமே நடிப்பிலும், அழகிலும் ஓகே. இருவருக்குமான பிரச்னை, அதற்கான பதற்றம் அதை ஹீரோக்கள் சரிசெய்வது என்று கிளைமேக்ஸ் வரையிலும் நாயகிகள் அவர்களுக்குண்டான வேலையைச் செய்கிறார்கள். 

ராதாரவியின் நடிப்பு வழக்கம் போலவே. ‘இதெல்லாம் எனக்கு அசால்ட்டுடா’ என்கிற ரீதியில் நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக யோக் ஜப்பியும் மிரட்டுகிறார். ஆனால் ராதாரவிக்கு இருக்கும் பில்டப்பை, யோக் ஜப்பியை மிரட்டும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வைத்து ஏமாற்றிவிட்டார்கள். இன்னும் அவருக்கான காட்சிகள் இருந்திருக்கலாம்.  

முழுப்படமுமே இரண்டு ஹீரோக்களுக்குமான காதல் காட்சிகள் மற்றும் குதிரைப் பந்தயக் காட்சிகள் என்று இரண்டாக பிரிகிறது. இதில் குதிரை பந்தயக் காட்சிகள் மட்டுமே படத்தை விறுவிறுப்பாக கொண்டுச்செல்கிறது. காதல் காட்சிகள் படத்தை மட்டுமல்லாமல் நம்மையும் சோர்வாக்கிவிடுகிறது. பரத்-கதிர், சஞ்சிதா-சாந்தினி, நான்குவருக்குமான பாத்திரப்படைப்புகளும் ஆழமாக இல்லை. 

படம் ஆரம்பிக்கும்போது குதிரைப் பந்தயம் பற்றிய அந்த அறிமுகமும், அதற்கான ஷாட்களும் ‘அட’ போட வைத்து நம்மை நிமிர வைக்கின்றன. ஆனால் அதற்குப் பிறகு கதை, பரத்தின் சொந்தப் பிரச்னை, கதிரின் அறைப் பஞ்சாயத்து என்று எங்கெங்கோ தாவி, நம்மைச் சோதிக்கிறது.  அறிமுக இயக்குநர்களின் படங்களை, இன்றைய ரசிகர்கள் அதிகமாகவே வரவேற்கிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் அருண் கிருஷ்ணசாமி  திரைக்கதையில் இன்னும் உழைத்திருந்தால் ரசிகர்களின் சிவப்புக் கம்பள வரவேற்பைப் பெற்றிருக்கலாம். 

பாடல் காட்சிகளும் படத்திற்கு வலு சேர்க்கவில்லை. பல காட்சிகளில் எடிட்டர் கோபி கிருஷ்ணா கத்திரி போட்டிருக்கலாம். மோசஸ் மற்றும் சுதர்சன் எம்.குமார் இருவரின் பாடல்கள் சுமார் தான். பின்னணி இசையில் மட்டும் கவனிக்கவைக்கிறார் சுதர்சன் எம்.குமார். யுவாவின் ஒளிப்பதிவு குதிரைப் பந்தயக் காட்சிகளில் பாய்ந்த அளவு மற்ற காட்சிகளில் பாயவில்லை. பரத் - சாந்தினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவில் ஏதோ புதுமுயற்சி செய்திருப்பார்கள் போல... ஒட்டவே இல்லை. பரத் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு ஹேர்ஸ்டைலில் வந்து போகிறார்.  

ட்விட்டர், ஃபேஸ்புக்கிலெல்லாம் லைவ்லி & லவ்லி வசனங்களால் இளைஞர்கள் கலக்கும் காலம் இது பாஸ். வசனங்களிலாவது கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அடுத்த வசனம் என்ன என்று ரசிகர்கள் தியேட்டரில் இருந்து கொண்டு கத்துகிற ரேஞ்சில் பழைய பாணி வசனங்கள். 

‘குதிரைப் பந்தயம் போட்டி மட்டுமில்லை...அது கௌரவம்!’ என்கிறார்கள். எங்கே தப்பாகப் புரிந்து கொள்ளப்படுமோ என்று விளக்கமாக ‘சிலருக்கு ரேஸ்லாம் ஒத்துவராது’ என்கிற ரேஞ்சில் ஏதேதோ மெசேஜ் வேறு. எடுத்த ஒன்லைனை, ஆழமாக திரைக்கதையாக்கி இன்னும் சுவையாகப் பரிமாறியிருந்தால்... இந்தச் சூதும் வென்றிருக்குமே பாஸ்! 

அடுத்த கட்டுரைக்கு