Published:Updated:

ஆழ்கடல் யுத்தம் ரசிகர்களைக் கவர்ந்ததா? - ‘காஸி’ படம் எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆழ்கடல் யுத்தம் ரசிகர்களைக் கவர்ந்ததா? - ‘காஸி’ படம் எப்படி?
ஆழ்கடல் யுத்தம் ரசிகர்களைக் கவர்ந்ததா? - ‘காஸி’ படம் எப்படி?

ஆழ்கடல் யுத்தம் ரசிகர்களைக் கவர்ந்ததா? - ‘காஸி’ படம் எப்படி?

முதல் முறையாக இந்தியாவின் ஆழ்கடல் யுத்தத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் 'காஸி'  1971ல் இந்தியா பாகிஸ்தான் இடையில் நடந்த ஆழ்கடல் தாக்குதலைப் பற்றி உண்மைச் சம்பவங்களையும், புனைவையும் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சங்கல்ப் ரெட்டி.

எதிரிகள் இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல் வர, அதை வேவு பார்ப்பதற்காக, இந்திய நீர்மூழ்கிக் கப்பல் எஸ்21 கிளம்புகிறது. அதேபோல் பாகிஸ்தான் கடற்படை, கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது பங்களாதேஷ்) இருக்கும் தங்களது படைகளுக்கு கடல் வழியாக ஆயுதங்களை அளிக்க இடையூறாக இருக்கும் இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ராந்தை அழிக்கத் திட்டமிடுகிறது. அதற்காக பாகிஸ்தான் அனுப்பும் நீர்மூழ்கிக் கப்பல்தான் 'காஸி'. முதலில் எதிரிகளின் நடமாட்டம் எதுவும் இல்லை திரும்பிவிடலாம் என்கிற நிலையில் இருக்கும் இந்திய கடற்படையினர் பின்பு எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்கிறார்கள், அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நிறைய கற்பனை கலந்து, கொஞ்சம் நிஜ சம்பவங்களைத் தழுவி சொல்லியிருக்கிறார் இயக்குநர் சங்கல்ப்.

ஒரு நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாடுகள் எப்படி இருக்கும், அதன் வேலைகள் என்னென்ன, என்ன பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும், எதிரிகளின் நடமாட்டத்தை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்று டீட்டெய்லாக விளக்குவது வியப்பு. புதிய களம் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட படம் பார்ப்பது புத்துணர்ச்சியான விஷயம். படத்தின் ஆரம்பத்திலேயே நிஜ சம்பவத்தைத் தழுவிய புனைவுக் கதை என சொல்லிவிட்டதால் உண்மையில் இது தான் நடந்ததா என்ற யோசனைகள் இல்லாமல் படத்தைப் பார்க்க முடிகிறது. தாக்குதலுக்கான திட்டமிடல்கள், அதற்கான பதில் தாக்குதல்கள், இடையில் தேசப்பற்று அம்சங்கள் என சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

கேப்டன் ரன்விஜய் சிங் (கே.கே.மேனன்), எக்ஸிக்யூடிவ் ஆபீசர் தேவராஜ் (அதுல் குல்கர்னி), லெஃப்டினன்ட் கமேண்டர் அர்ஜூன் (ராணா) என ஒவ்வொருவரின் கதாபாத்திரத் தேர்வும் கச்சிதம். மிகவும் கோபக்கார கேப்டன் வேடத்தில் கே.கே.மேனனின் நடிப்பு, கேப்டனின் கட்டளைகளை மதிக்கும் பொறுப்பான எக்ஸிக்யூடிவ்வாக அதுல் குல்கர்னியும் கலக்கலாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் தோற்றத்தில் மட்டும் பக்காவாகப் பொருந்திவிட்டாலும், ராணாவின் பாத்திரத்துக்கு இன்னும் இடம் இருக்கும்வகையில் திரைக்கதையை அமைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால், அது படத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. டாப்ஸி, நாசர், ஓம்பூரி போன்றவர்கள் சின்னச் சின்ன வேடங்களில் வந்துபோகிறார்கள். 

படத்தின் பெரிய ப்ளஸ் சப் மரைன் செட். நிஜமாகவே ஒரு நீர்மூழ்கிக் கப்பலுக்குள் நுழைந்து பார்த்துவிட்டு வந்தது போன்ற உணர்வைத் தருகிறது ஷிவம் ராவின் கலை இயக்கம். கப்பல் தாக்குதலுக்குள்ளாகும் போது அந்தப் பதற்றத்தை அப்படியே நமக்கு கடத்தியிருக்கிறது மதியின் ஒளிப்பதிவு. கூடவே கடலுக்கு அடியில் கேட்கும் சின்னச் சின்ன சப்தங்களை கொஞ்சமும் டெசிபல் குறையாமல் கொடுத்திருக்கிறார் சவுண்ட் டிசைனர் தபஸ் நாயக்.. தேவையான இடங்களைத் தவிர, தன் இசை படத்துக்கு எந்த வித தொந்தரவையும் கொடுக்கக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்திருக்கிறார் இசையமைப்பாளர் கே.

புதிய களம் ஒன்றில் விறுவிறுப்பாக கதை சொல்லிய விதத்தில் கவனம் ஈர்க்கிறது காஸி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு