Published:Updated:

ரத்தம் தெறிக்க..... தோட்டாக்கள் பறக்க... ‘ஜான் விக்-2’ படம் எப்படி? #JohnWick2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரத்தம் தெறிக்க..... தோட்டாக்கள் பறக்க... ‘ஜான் விக்-2’ படம் எப்படி?   #JohnWick2
ரத்தம் தெறிக்க..... தோட்டாக்கள் பறக்க... ‘ஜான் விக்-2’ படம் எப்படி? #JohnWick2

ரத்தம் தெறிக்க..... தோட்டாக்கள் பறக்க... ‘ஜான் விக்-2’ படம் எப்படி? #JohnWick2

நம் ஊரில் மட்டும் அல்ல ஹாலிவுட்டிலும் மாஸ் மசாலா படங்களுக்கு ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். 2014ல் வெளியான `ஜான் விக்’ படத்திற்கும் அதே வரவேற்பு கிடைத்தது. `ஜான் விக்’ படத்தின் கதையை அப்படியே நம்ம ஊரிலும் எடுக்கலாம்; சொல்லப் போனால் அது போல நிறைய படங்கள் வந்து விட்டது. 

முதல் பாகம் பார்க்காதவர்களுக்கு சின்ன இன்ட்ரோ. காதல் மனைவி இறந்துவிட வெறுமையாக வாழ்ந்து வருகிறான் ஜான் விக் (கேனு ரீவ்ஸ்). இவனது காரைப் பார்க்கும் லோசிஃப் அதை விலைக்குக் கேட்கிறான். ஜான் மறுக்க அவன் வீட்டுக்குள் புகுந்து அடித்துப் போட்டு, நாய்க்குட்டியைக் கொன்று காரைக் களவாடுகிறான் லோசிஃப். லோசிஃபின் தந்தை விக்கோ ஊரில் பெரிய கை. மகன் திருடியிருப்பது ஜான் விக்கின் கார் எனத் தெரிந்த உடன், அவனை அடித்து உதைத்து, "நீ யார்கிட்ட போய் மோதியிருக்க தெரியுமா? பென்சில வெச்சே மூணு பேரைக் கொன்னவன்டா அவன்" என ஜான் விக்கின் பாட்ஷா ஃப்ளாஷ்பேக்கைச் சொல்கிறார். வெறிபிடித்து மீண்டும் கையில் துப்பாக்கி எடுக்கும் ஜான்விக் லோசிஃபை எப்படிக் கொல்கிறான் என்பது வரையிலான கதை தான் முதல் பாகத்தின் கதை. கிட்டத்தட்ட தமிழ் ஆக்‌ஷன் படங்களின் கதை போலவே இருக்கிறதா?

முதல் பாகத்தில் விட்ட இடத்திலிருந்து துவங்குகிறது கதை. வீடு திரும்பும் ஜான் விக் பழையபடி தன் துப்பாக்கிகளை பெட்டியிலிட்டு பேஸ்மென்டில் புதைத்து சிமெண்ட் இட்டு பூசுகிறான். ஆனால் அதற்கு மறுபடி ஒரு வேலை வருகிறது சான்டினோ ரூபத்தில். அவனுக்கு ஜான் விக்கால் ஒரு வேலை ஆக வேண்டும். ரிட்டயர்ட் ஆகும் முன்பு ஒரு வேலை ஜானுக்கு கொடுக்கப்பட்டது. அதைச் செய்து முடிக்க சான்டினோவின் உதவியைப் பெறுகிறான் ஜான். பதிலுக்கு ஜானிடம் ரத்தத்தில் கைரேகை வாங்கி, பின்பு தனக்கு தேவைப்படும் உதவியை செய்யும்படியாக ஓர் ஒப்பந்தம் வாங்கியிருக்கிறான் சான்டினோ. முதலில் மறுக்கும் ஜான் பின்பு ரூல்சை மதிக்க வேண்டும் என்பதால் வேறு வழியின்றி ஒத்துக் கொள்கிறான். ரோமில் இருக்கும் சான்டினோவின் தங்கையைக் கொல்ல வேண்டும் இது தான் வேலை. ரோமுக்கு செல்லும் ஜான் சென்ற வேலையை கச்சிதமாக முடிக்கிறான். ஆனாலும் பிறகு சில ஆபத்துகள் வருகின்றன. அது என்ன? அதிலிருந்து ஜான் எப்படித் தப்பிக்கிறான் என்பது மீதிக் கதை. 

முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும், தோட்டாக்கள் பறக்கும் களம் என்பதால் சண்டைக் காட்சிகள் பவர்ஃபுல்லாக இருக்கிறது. குறிப்பாக அந்த பென்சில் சீனை ஒரு சண்டையின் போது ஜான் பயன்படுத்தும் இடம் செம. நியோ நாயர் திரைக்கதை என்பது படத்துக்கு மிக வசதியாக இருக்கிறதோ என்கிற எண்ணமும் வருகிறது. காரணம், நினைத்த விஷயத்தை ஒரு வசனத்திலோ, உரையாடலிலோ, ஃப்ளாஷ் பேக் சீனாகவோ இணைத்துக் கொண்டு அதை கதையின் முக்கியத் திருப்பத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

முந்தைய பாகம் போலவே மிரட்டியிருக்கிறார் கேனு ரீவ்ஸ். வன்முறை இல்லாமல் வாழவேண்டும் என நினைத்தாலும் அதற்கு எதிராக பார்க்கும் எதிரிகளையெல்லாம் சுட்டுத் தள்ளும் கதாபாத்திரத்தை பக்காவாகச் செய்திருக்கிறார்.  சான்டினோவாக நடித்திருக்கும் ரிக்கார்டோவும்,  கேனு ரீவ்ஸை வேவு பார்க்கும் ரோலில் நடித்திருக்கும் ரூபி ரோஸும் சிறப்பு. மற்றபடி வேறு யார் நடிப்பதையும் பார்க்க அவகாசம் இல்லாமல் சில நொடிகளிலேயே கொல்லப்படுவார்கள் என்பதால், நடிப்பு பற்றி குறிப்பிட வேறு யாரும் இல்லை. 

இயக்குநர் சாட் ஸ்டாலெஸ்கி பரபரப்பாக படத்தை கொண்டுவந்திருக்கும் விதம் சூப்பர். ஆனால், படத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படி கதை என எதுவும் கிடையாது. வெறுமனே கொலை செய்ய தோட்டா தெறிக்க தெறிக்க ஓடும் நாயகனைப் பின் தொடர்வது போன்ற உணர்வு தான் மிஞ்சுகிறது. க்ளைமாக்ஸில் அடுத்த பாகத்திற்கான ஆவலைக் கூட்ட முயற்சித்திருக்கிறார்கள். அடுத்த பாகத்திலாவது அழுத்தமான  கதை இருந்தால்தான் வேற லெவலுக்குப் போகமுடியும் மிஸ்டர் ஜான் விக்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு