Published:Updated:

பாகுபலி பார்ட் 2 - இது எம்.ஜி.ஆர் வெர்ஷன்!

VIGNESH S
பாகுபலி பார்ட் 2 - இது எம்.ஜி.ஆர் வெர்ஷன்!
பாகுபலி பார்ட் 2 - இது எம்.ஜி.ஆர் வெர்ஷன்!

பாகுபலி படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்னு தெரியாம ரெண்டு வருசமா மூச்சைப் பிடிச்சுகிட்டுக் காத்திருக்கிறதை விடவும் ரொம்பக் கொடுமையானது பாகுபலி -2 வில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சிப் பார்க்கிறது. (பயம் உடல்நலத்திற்குக் கேடு)

கிராஃபிக்ஸ் : எம்.செய்யது முகம்மது ஆஸாத்

முந்தின பாகக் கதையில் சிவகாமிதேவி கையில் குழந்தையோடும், முதுகில் அம்போடும் ஆற்றுக்குள் இறங்க, வேறு வழியின்றி குழந்தையை மேலே தூக்கிப் பிடித்தபடி உள்ளே முக்குளித்து மூச்சை நிறுத்துகிறார். அந்தப் பக்கம் திரிந்தவர்கள் அந்தக் குழந்தையைக் கண்டெடுத்து வெளியில் யாருக்கும் தெரியாமல் வளர்க்கிறார்கள். இதுக்கு மேலேயும் சொல்லணுமா..? அந்தக் குழந்தையே எம்.ஜி.ஆர் தான்.  சின்னவயதிலேயே சேட்டை பிடித்த குழந்தையான தங்கத் தலைவன் கிட்டிப்புள் விளையாடுகிறார். அந்தக் கிட்டிப்புள் கரடுமுரடான மலைப்பாதையில் பறந்து அருவியின் உச்சிக்குப் போய் விழுகிறது. அங்கே ஒரு முகமூடி கிடக்கிறது. 

அந்தப் பகுதியில்தான் தோழி பானுமதியைப் பார்க்கிறார் எம்.ஜி.ஆர். பார்த்ததுமே மண்டைக்குள் பல்பு எரிய அதற்குப் பிறகு தோழியை எப்போ பார்க்கிறது என உருகி உருகி உடம்பு இளைக்கிறார் தலைவர். அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் பானுமதி ஒரு கையை மட்டும் கரையில் வைத்தபடி படுத்திருக்க, பாறைகளுக்குள் ஒளிந்தபடி பக்கத்தில் வந்து அவரது விரலில் மருதாணி வைத்து விடுகிறார். 'என்னம்மா உன்னைப் பார்க்காம... சாப்பிட முடியலையே உன்னைப் பார்க்காம...' என டபுள் ரொமான்ஸ் காட்டும் எம்.ஜி.ஆரைப் பார்த்தாலே பதறிப் பத்தடி தூரம் தெறிக்கிறார் பானுமதி. அதற்கு அப்புறம், அவரைத் தேடி நம்ம எம்.ஜி.ஆர் மீண்டும் அருவியின் உச்சிக்குப் போய், 'நாம இங்க இருக்கவேண்டிய ஆளே இல்ல... நம்ம ரேஞ்சே வேற...' என்பதை உணர்ந்து கொள்கிறார். பாகுபலியாக பல்வாள்தேவனின் ஆட்சியில் இருக்கும் அரண்மணைக்குள் நுழைகிறார். அங்கே பல்வாள்தேவன் தனக்குத்தானே சிலை நிறுவிக்கொள்ளக் குடிமக்களைப் போட்டு வறுத்தெடுப்பதைப் பொறுக்கமாட்டாமல் கொதித்தெழுகிறார். இப்படி முடிந்த முதலாம் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்விக்கு விடையாக வருகிறது பாகுபலி -2. தி எம்.ஜி.ஆர் வெர்ஷன்.

சுள்ளி பொருக்கும் பெண்ணாக லதா நடிக்கிறார். லதாவுக்கு கேமரா ஜூம் வைக்க, அவரது கண் பக்கத்தில் வருகிறது. கண்ணுக்குள் வெளிச்சம் உருவாகி ஃப்ளாஸ்பேக் தொடங்குகிறது. பாகுபலியாகிய எம்.ஜி.ஆர் மகிழ்மதி ராஜ்ஜியத்தைக் கட்டிக்காத்து பெருமையாக வாழும்போது குடிமக்களுள் ஒருவரான லதா மீது காதல் கொள்கிறார். அப்போது யாருக்கும் தெரியாமல் அவர்கள் இருவரும் காதலிக்கும்போதுதான் இந்தப் பாடல் வருகிறது. 'பொண்ணாப் பொறந்தா ஆம்பளகிட்டே கழுத்தை நீட்டிக்கணும்... அவன் ஒண்ணு ரெண்டு மூணு முடிச்சுப் போட்டா மாட்டிக்கணும்...' எனத் தத்துவார்த்தமான பாடலில் எம்.ஜி.ஆர் நவரசங்களையும் காட்டுகிறார். அந்தப் பாடல் காட்சிக்காக பல கோடிரூபாய் செலவில் ஹைப்ரிட் மிளகாய்க் காட்டுக்குள் குறுக்குமறுக்குமாக ஓடி நாசம் செய்கிறார்கள்.  லதா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அரசகுடியைச் சேர்ந்த எம்.ஜி.ஆரை மணக்க பலத்த எதிர்ப்பு உண்டாகிறது.

எம்.ஜி.ஆர் யார் சொல்லியும் கேட்காததால் அவரை சென்டிமென்ட்டால் அடித்து வீழ்த்த நினைக்கிறார்கள். அவர் அரண்மனைக்குள் நுழையும் நேரம் பார்த்து அண்ணனான நம்பியார் தனது மனைவியிடம், 'இவன் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணினா நாம ஊரைவிட்டுப் போறதைத் தவிர வேறு வழியில்லை' எனப் பேசுவது காதில் விழுகிறது. முகத்தை அஷ்டகோணலாக்கி பயங்கரமான ரியாக்‌ஷன் கொடுத்துத் தேம்பியபடி உள்ளே நுழைகிறார் எம்.ஜி.ஆர். தன் அண்ணனைக் கட்டிப் பிடித்தவாறு, 'நீங்க இந்த நாட்டை விட்டுப் போகலாம். ஆனா என்னை விட்டுப் போகமுடியாதுண்ணே...  என்னை விட்டுப் போகமுடியாது..' என ஃபீலிங்க்ஸ் காட்டி கர்ச்சீப்பை நனைக்கிறார். 'இப்போ என்னதான்ய்யா சொல்ல வர்றே...' என ஒரு நடிகர் திலகம் ரசிகர் கேட்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் டயலாக்கைப் போட்டுப் புரட்டி எடுக்கிறார். 

என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பிய தலைவர், தனது அண்ணனின் பெருமை குலையக் கூடாது என்பதற்காக நாட்டிலிருந்து வெளியேறறுகிறார். ஒரு குதிரையை வாங்கி அதில் காதல்நாயகி லதாவை உட்காரவைத்து காடு மேடெல்லாம் சுற்றிக் காட்டுகிறார். அறியாமை சூழ்ந்துகிடக்கும் அந்த நாட்டில் பாட்டுப் பாடி அறிவு விளக்குக்குத் திரி கிள்ளுகிறார். அந்த நாட்டு அரசனை எதிர்த்து, 'இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய்... இந்த நாட்டிலே... இந்த நாட்டிலே..' என மக்களை உசுப்பேத்தி போராட்டத்திற்கு அழைக்கிறார். ('என்னய்யா டயலாக்கைத் தான் ரெண்டுவாட்டிச் சொல்றாருனு பார்த்தா பாட்டையும் அப்படியே பாடுறாப்ள...' என பாடலாசிரியர் ஒருபக்கம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.)

பொறுக்க முடியாத அந்த நாட்டு அரசன் 'யார்யா அவரு..? எனக்கே பார்க்கணும் போல இருக்கே...' எனத் தேடி விசாரிக்க அவரது நண்பரான நம்பியாரின் தம்பியார்தான் எம்.ஜி.ஆர் எனத் தெரிகிறது. கடுமையாகத் தண்டிக்காமல் நம்பியாருக்குத் தூது அனுப்பி எம்.ஜி.ஆரை வந்து அழைத்துப் போகச் சொல்கிறார். செய்தியைக் கேள்விப்பட்ட நம்பியார் ஆட்களை அனுப்பி, ராஜமரியாதையோடு தமது நாட்டுக்கு இருவரையும் அழைத்துச் செல்கிறார்கள். அங்கே போனதும் இருவருக்கும் கோலாகலமாகத் திருமணம் செய்துவைத்து 'எங்கள் வீட்டில் எல்லாநாளும் கார்த்திகை....' பாடல் பாடுகிறார்கள். 

நாலு நாள் நல்லா போய்க்கிட்டு இருக்கும்போது 'டாம்பாடம்பா  ஜிவியா பாஹா-னா' எனப் பேசியே வெறுப்பேற்றும் கோவக்கார காளகேயர்கள் மகிழ்மதி மீது போர் தொடுக்க வருகிறார்கள். போருக்குத் தலைமை தாங்கிப் புறப்படும் போதே... ' செவ்வாழைக் குலை நிழல் நடுவீட்டுக்குள்ள விழுது. நல்ல சகுணம் இல்லை. நீங்க போருக்குப் போகவேண்டாம் மாமா...' எனக் காலைப் பிடித்துக் கதறுகிறார் லதா. 'நாட்டுக்கு ஒரு தீமை வந்தா நான் பொறுக்க மாட்டேன்... நாட்டுக்கு ஒரு தீமை வந்தா... நான் பொறுக்கமாட்டேன்' எனப் பேசிவிட்டுப் புறப்படுகிறார் எம்.ஜி.ஆர். 

ஏதோ கெட்டது நடக்கப்போகுது என்பதை அடுத்தடுத்த காட்சிகளிலேயே காட்டுகிறார் ராஜமௌலி. போரில் காளகேயர்களை வெல்லும் நேரம் பார்த்துப் பின்னால் வந்து போட்டுத் தள்ளுகிறார் கட்டப்பா. விசுவாசத்திற்கு லிஃப்கோ டிக்ஸ்னரியில் பொருள் தேடினால் கட்டப்பா என வரும் என அவருக்கு ஒரு இன்ட்ரோவும் கொடுக்கிறார்கள். (அந்த கேரக்டருக்கு சத்யராஜைத் தவிர வேறு யாரையும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் என்பதால் அவரே இருந்துட்டுப் போகட்டும்.) எல்லாமே நம்பியாரின் திட்டப்படி நடக்க, லதா விதவையாகிறார். செய்தியைக் கேள்விப்பட்டு லதா 'ஐய்யோ...' எனக் கத்துவதிலேயே முதல் வரிசை ஆடியன்ஸ்களின் காதுசவ்வு கிழிகிறது. (பிரமாண்டம்..!) 

நிறைமாதக் கர்ப்பினியான லதாவின் முகத்தில் அரை லிட்டர் கிரீஸைத் தடவி அடிமையாக மகிழ்மதியிலெயே சிறை வைக்கப்படுகிறார். சில நாட்களில் குழந்தையைப் பிரசவித்து மயக்கமாக இருக்கும்போது அந்தக் குழந்தையைத் தூக்கி கொல்ல நினைக்கிறது பல்வாள்தேவன் அன்கோ. அதைத் தெரிந்துகொண்டு பாகுபலி மற்றும் பல்வாள்தேவனின் அம்மா சிவகாமிதேவி குழந்தையைக் காப்பாற்றத் தூக்கிக் கொண்டு வெகுதூரம் ஓடுகிறார். அவரையும் முதுகில் அம்புவிட்டு வீழ்த்துகிறார்கள். அந்தக் குழந்தை வளர்ந்த கதை ஏற்கெனவே உங்களுக்குத் தெரியும்.  பல வருடங்கள் கழித்து கட்டப்பாவின் கல்நெஞ்சில் இந்த விஷயம் முள்ளாய்க் குத்த, லதாவிடம் கதறியழுது மன்னிப்புக் கேட்டுக்கொண்டே உண்மையைச் சொல்லிவிடுகிறார். உண்மை தெரிந்த லதா, பல்வாள்தேவனின் சூழ்ச்சியை எரிக்கச் சுள்ளிகளைப் பொறுக்கிச் சேர்த்து வைக்கிறார். 

தனது வரலாற்றைத் தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், பானுமதி மீதான மய்யலைத் தள்ளிவைத்துவிட்டு தனது தந்தையைக் கொன்று தாயை அடிமையாக வைத்திருக்கும் நாட்டுக்கு வருகிறார்... மன்னிக்க... நான் பார்த்த டாரன்ட் பிரின்ட்டில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கையை அசைப்பதும், விசில் அடிப்பதுமாக இருக்க, அடுத்த இரண்டு மணிநேரம் இருட்டாகவே தெரிகிறது. அதோடு தொடரும் போட்டு பாகுபலி -3 ஏப்ரல்-2018 என ஸ்லைடு போடுகிறார்கள். நல்ல பிரின்ட் வந்ததும் மீதிக் கதை சொல்லப்படும்.

ஜெய் மகிழ்மதி..!

- விக்கி