Published:Updated:

தமிழ் சினிமாவுல இந்தக் கார்கள் படுறபாடு இருக்கே!

தமிழ் சினிமாவுல இந்தக் கார்கள் படுறபாடு இருக்கே!
தமிழ் சினிமாவுல இந்தக் கார்கள் படுறபாடு இருக்கே!

தமிழ் சினிமாவுல இந்தக் கார்கள் படுறபாடு இருக்கே!

தமிழ் சினிமாவில் அடியாட்களுக்கு அப்புறம் ஹீரோக்களிடம் மாட்டி படாதபாடு படும் வஸ்து அனேகமாய் காராகத்தான் இருக்கும். பறக்கவிட்டு, கவிழ்த்துப்போட்டு, தந்தூரி சிக்கன் போல மரத்தில் தொங்கவிட்டு என மொத்தக் க்ரியேட்டிவிட்டியையும் கொட்டி அதை கதறவிடுவார்கள். அப்படி நம் ஹீரோக்களுக்கும் கார்களுக்குமான கெமிஸ்ட்ரியைப் பற்றிய குறிப்புதான் இது. 

அஜித்:

ரேஸர் என்பதால் கார் ரெஃபரென்ஸ் இல்லாத அஜித் படங்களைப் பார்ப்பதே கஷ்டம்தான். கார்க்குள்ளேயே டூயட் பாடுவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது, காற்றில் பறந்து வித்தை காட்டுவது, கத்திச்சண்டை போடுவது, கார் விட்டு கார் பாய்வது என எக்கச்சக்க வெரைட்டி காட்டுவது அஜித்தான். அதிலும் மங்காத்தா படத்தில் வைபவ்வை அலேக்காக பொட்டலம் கட்டி காருக்குள் அர்ஜுன் தள்ளுவதெல்லாம் அ'சால்ட்' லெவல் ரெஃபரென்ஸ். கண்டிப்பாய் விவேகம் படத்திலும் கார் காட்சி இருக்கக் கடவது!

விஜய்:

பகவதி படம் முழுக்கவே காரில் லெப்ட் ரைட் போய் யாரையோ ஷூட்டிங் செய்துகொண்டே இருப்பார் தளபதி. அதன்பின் கில்லி. ஜாக்கி வைத்துத் தூக்கினாலே வேலை சிம்பிளாக முடிந்திருக்கும். ஆனாலும் வியர்வை வழிய ஆர்ம்ஸ் தெறிக்க ஜீப்பை தூக்கி டயர் மாற்றுவார். இதன் உச்சகட்டம்தான் குருவி. பிய்ந்துபோன ஆக்ஸிலேட்டர் வயரை வாயில் வைத்து இழுத்து ஜெயிப்பதெல்லாம் செவ்வாய் கிரக லெவல் க்ரியேட்டிவிட்டி. காத்திட்டுருக்கோம்!

சூர்யா:

சூர்யாவும் ஹரியும் இணையும் படங்களில் எல்லாம் ஆடியன்ஸுக்கு கார் பானட்டில் உட்கார்ந்து 160 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் பரவச அனுபவம் கிடைக்கும். 'சர்ர்ர்ர்ர்.... க்ரீச்ச்ச்ச்ச்..... உய்ய்ய்ய்ங்...' என இஸ்ரோவின் ராக்கெட்டைவிட வேகமாய் சீறிப் பாயும் கார்களை பார்த்துவிட்டு வெளியே வந்தால் புரியும் உலகம் எவ்வளவு அமைதியானதென்று. மற்றவர்களின் படங்களில் எல்லாம் கார் ஸ்பேர் பார்ட்ஸ் செலவுகள்தான் அதிகமாக இருக்கும். சூர்யா  - ஹரி காம்பினேஷன் படங்களில் தேய்மானச் செலவே சிலப்பல கோடிகளைத் தொடும் போல.

கார்த்தி:

ஒரு படம் முழுக்கவே கார் ஓட்டி ஹிட்டடித்தது கார்த்தி மட்டும்தான். பையா கொடுத்த ஓவர் கான்ஃபிடென்ஸில் அலெக்ஸ்பாண்டியனை இறக்கினார். ஒரு சுமோ எவ்வளவு தூரம் பறக்கும்? ஸ்பீடு பிரேக்கரில் வேகமாக சென்றால் ஒரு ஐந்தடி. இவரின் படத்தில் பனைமர உச்சியில் போய் எல்லாம் ரெஸ்ட் எடுக்கும். வாட்டே ஐடியா சர் ஜி! நடுநடுவே இளநீர் வெட்டுவது போல அருவாளை வைத்து டயரை எல்லாம் வெட்டி படையல் போடுவார். ஈஸ்வரா!

சிம்பு:

கெளதம் மேனன் புன்ணியத்தில் புல்லட் பாண்டி ஆவதற்கு முன்பு காரில்தான் வந்து போவார் சிம்பு. அதுவும் உலக லெவல் ஹிட் படமான காளையில், இவர் பன்ச் பேசிவிட்டு பின்னால் நிற்கும் மெகா சைஸ் போர்ட் காரை மிதிக்க அது டூ ஸ்டெப்ஸ் பின்னால் போகும். போர்ட் காரே என் தலைவனுக்கு புட்பால் மாதிரிய்யா என சிலிர்த்துப் போனார்கள் ரசிகர்கள். லேட்டஸ்ட்டாய் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட டீசரில் அம்பாஸிடர் டாப்பில் கல்யாண பந்தியில் உட்கார்ந்திருப்பவர் போல தோரணையாய் வருகிறார். இதற்கும் சமீபத்தில் அம்பாஸிடர் பிராண்டே பாரீன் நிறுவனத்திற்கு விலை போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

விஷால்:

இந்த லிஸ்ட்டில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சாம்பியன் பட்டம் வெல்பவர் இவர்தான். ஆரம்ப காலத்திலேயே சுமோவுக்கும் தனக்குமான பந்தத்தை வெளிக்காட்டியவர் விஷால் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சண்டக்கோழி படத்தில் இருட்டுத் தோப்பிற்குள் சுமோவை சண்டைக் காட்சியில் பார்ட் பார்ட்டாய் கழற்றி 'உதிரிப்பாகங்கள் விற்பனைக்கு' என போர்டு வைப்பார். அதன்பின் வந்ததுதான் ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இடம்பெற்ற 'ஆம்பள'. அது போன்றதொரு காட்சியை என்னால் அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கூட யோசிக்கமுடியாது என கிறிஸ்டோபர் நோலனே வாயடைத்துப் போனார்.

- நித்திஷ்

அடுத்த கட்டுரைக்கு