Published:Updated:

‘ஒருவருக்குள் 23 பேரா...?’ மனோஜ் நைட் சியாமளனின் Split படம் எப்படி? #Split

‘ஒருவருக்குள் 23 பேரா...?’ மனோஜ் நைட் சியாமளனின் Split படம் எப்படி? #Split
‘ஒருவருக்குள் 23 பேரா...?’ மனோஜ் நைட் சியாமளனின் Split படம் எப்படி? #Split

‘ஒருவருக்குள் 23 பேரா...?’ மனோஜ் நைட் சியாமளனின் Split படம் எப்படி? #Split

ஸ்ப்லிட் பர்சனாலிட்டி, மல்டிபிள் பர்சனாலிட்டி டிசார்டர், டிஸ்சகேடிவ் ஐடென்டி டிஸ்சார்டர் கிட்டத்தட்ட வெவ்வேறு பெயர்களில் இது எல்லாமும் சொல்ல வருவது ஒரு பாதிப்பைப் பற்றிதான். ஒரே மனிதருக்குள் இருக்கும் வெவ்வேறு நபர்கள் அல்லது ஆளுமைகள். இந்த பாதிப்பு உள்ளவன்தான் படத்தின் நாயகன் கெவின் வென்டல் க்ரம்ப். பளிச்செனப் புரியும் படி சொன்னால், அந்நியன் விக்ரம் போன்று. அந்நியனில் விக்ரமே மூன்று பேராய் நடந்து கொள்வது போல இதில் கெவின் இருபத்தி மூன்று பேராய் நடந்து கொள்ளும் பாதிப்பு கொண்டவன். இந்த ப்ளாட்டை மையமாக வைத்து நைட் ஷ்யாமளன் இயக்கியிருக்கும் படம் ஸ்ப்லிட். 

க்ளார் (ஹேலி லூ ரிச்சர்ட்சன்), மார்சியா (ஜெசிகா சுலா) மற்றும் கேசி (அன்யா டெய்லர் ஜாய்) மூன்று தோழிகளும் கெவினால் (ஜேம்ஸ் மெகவோய்) கடத்தப்படுகிறார்கள். அதாவது கெவின் 'டென்னிஸ்' ஆக இருக்கும் பொழுது நடக்கிறது இந்த கடத்தல். கெவின் சிறுவயதிலேயே பாலியல் சீண்டலுக்கும், டிஸ்சகேடிவ் ஐடென்டி டிஸ்சார்டர் பாதிப்புக்கும் உள்ளானவன். தன் பாதிப்புக்காக தொடர்ந்து கரீன் ஃப்லெட்சரிடம் ட்ரீட்மெண்டும் எடுத்துவருகிறான். கரீனும், கெவின் இயல்பாக தான் இருக்கிறான் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், திடீரென கரீனுக்கு பேர்ரியிடமிருந்து 'உங்களை சந்திக்க வேண்டும்' என  ஒரு மெயில் வருகிறது. பேர்ரி கெவினுக்குள் இருக்கும் ஒரு பர்சனாலிட்டி. இதற்கு இடையில் கெவினுக்குள் இருக்கும் பெண் பாட்ரிசியா, ஒன்பது வயது சிறுவன் ஹெட்விக் ஆகியோர் மாறி மாறி வந்து போவார்கள். இந்த 23 பேர் போக இன்னொரு பர்சனாலிடி கெவினுக்குள் உண்டு என சொல்கிறான் சிறுவன் ஹெட்விக். அது யார்? எதற்காக இந்த மூவரையும் கடத்துகிறான்? மூவருக்கும் என்ன ஆகிறது? இது மீதிக் கதை. 

வெறுமனே டிஸ்சகேடிவ் ஐடென்டி டிஸ்சார்டர் என்கிற விஷயத்தை மட்டும் வித்தியாசமானதைப் பிடித்துவிட்டு உள்ளே காலிடப்பாகாவக இல்லாமல், உருப்படியான கதையை வைத்த விதத்தில் கவர்கிறார் இயக்குநர் நைட் ஷ்யாமலன். இடையில் கேசி கதாபாத்திரத்திற்கான பின்புலக் கதையை வைத்ததும், அதையும் நிகழ்கால கதையை இணைத்திருக்கும் இடமும் பிரமாதமான ஒன்று. 

நடிப்பு பொருத்தவரை இருவர் மட்டும் கவனிக்கும் படியான முக்கியத்துவத்துடன் இருக்கிறார்கள். ஒன்று கெவினாக, டென்னிஸாக, பாட்ரிசியாவாக, ஹெட்விக்காக நடித்திருக்கும் ஜேம்ஸ் மெகவோய். ஒவ்வொன்றுக்கும் எந்தப் பெரிய அலட்டலும் இல்லாமல் மிக இயல்பாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வித விதமான குணாதீசியங்களை வெளிக்காட்டி நடித்திருக்கிறார். குறிப்பாக ஒன்பது வயதுச் சிறுவன் கதாபாத்திரத்தில் அசத்தல். மருத்துவரிடம் சென்று. தான், இயல்பாகத்தான் இருக்கிறேன் என நிரூபிக்க வாதாடும் ஒரு காட்சியிலும் மிரட்டுகிறார். பேசிக் கொண்டே இருக்கும்போது தனக்குள் இருக்கும் இன்னொரு கதாபாத்திரம் பேச வருவது, அதைத் தடுத்து பேசுவது, வேறு கதாபாத்திரத்துக்கு வழிவிடுவது என அத்தனையையும் எக்ஸ்பிரஷன்களைக் காட்டுவதும், வில்லத்தனத்திலும் பின்னிப் பெடலெடுக்கிறார். கவனிக்க வைத்த இன்னொருவர் கேசியாக நடித்திருக்கும் அன்யா டெய்லர் ஜாய். அங்கிருந்து தப்பிக்க சமயம் பார்த்து காத்திருக்கும் ரோல். பக்காவாக அதற்குப் பொருந்தியிருக்கிறார். சிறு வயது அன்யாவாக நடித்திருக்கும் லிஸ்ஸி காஃபியும் மனதில் நிற்கிறார். 

ஒரு காட்சியில் "உன்னுடைய ரூமில் இருக்கும் ஜன்னலைக் காட்டு, நான் அது வழியாக தப்பிக்கிறேன்" என ஹெட்விக்காக இருக்கும் கெவினிடம் கேட்பாள் கேசி. அவனும் விறுவிறுவென அழைத்துச் சென்று காட்டுவான். அங்கு சுவற்றில் இரண்டு காகிதங்கள் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும். ஒன்றில் ஜன்னல் மூடியபடியும், கீழிருக்கும் காகிதத்தில் ஜன்னல் திறந்தபடியும் வரைந்து வைத்திருப்பான். "போ போ... இது வழியா நீ தப்பிச்சிடுவேல்ல" எனக் குழந்தைத் தனத்துடன் கேட்பான். இப்படி படம் முழுக்க ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தகுந்த படி அடுத்தடுத்த காட்சிகள் அமைத்து அதன் மூலம் படத்தை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள்.

பொதுவாக இது போன்ற சைகலாஜிகல் த்ரில்லர் ஹாரர் வகையராக்களில் கண்டபடி எதாவது சத்தம் கொடுத்து பயமுறுத்தும் ஜித்து வேலைகள் நடக்கும். ஆனால், ஸ்ப்லிட் அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டது. எந்த காட்சியிலும் ஆடியன்ஸை வற்புறுத்தி பயமுறுத்தக்கூடாது, அதே வேளையில் அவர்கள் த்ரில் குறையாமல் என்கேஜிங்காக படத்தைப் பார்க்க வைக்கவேண்டும் என ஷ்யாமலன் பின்னியிருக்கும் திரைக்கதை செம. கொண்டாட்டத்திற்குரிய படமாக இல்லை என்றாலும், வழக்கமான ஹாலிவுட் சினிமாவிலிருந்து மாறுபட்ட புதுவிதமான என்டர்டெய்ன்மென்ட் ஒன்றைத் தரும் இந்த ஹாலிவுட் அந்நியன். 

- பா.ஜான்ஸன்

அடுத்த கட்டுரைக்கு