Published:Updated:

பருத்திவீரன் ‘பிடுங்கி எடுத்த கிழங்கு’! #14YearsOfParuthiveeran

பருத்திவீரன்
பருத்திவீரன்

‘பருத்திவீரன்' திரைப்படத்தை இந்த 14 வருடங்களில் தமிழ் சினிமா ரசிகர்களில் பெரும்பான்மையானோர் தவறாமல் பார்த்திருப்பார்கள். படம் குறித்து 2017-ல் வெளியான கட்டுரை இது...

‘பருத்திவீரன்’ படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பாரதிராஜாவை அந்தப் படத்தின் இயக்குநர் அமீர் எதிர்கொள்கிறார். அமீரைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்த பாரதிராஜா ‘‘பிடுங்கி எடுத்தக் கிழங்கு மாதிரி பண்ணியிருக்கடா’’ என்றாராம். அன்று அந்தப் பாராட்டைக் கேட்டு அமீர் நின்ற கணம், அவர் வாழ்வின் அற்புதமான ஒன்று. கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவுக்குக் கிராமத்து கதையுடன் கிளம்பிய அத்தனை இயக்குநர்களும் வாழ விரும்பிய தருணமும் அதுவாகத்தான் இருக்கும். ஆம், சென்னை ஸ்டுடியோக்களில் இருந்த கிராமத்து செட்களில் கெட்டிதட்டிப்போன தமிழ் சினிமா கேமராக்களின் கால்களை, உடைத்து எடுத்துக்கொண்டு உண்மையான கிராமங்களுக்கு நடத்தியே கூட்டிச்சென்ற 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா என்கிற முன்னத்து ஏரின் பாராட்டு அல்லவா அது! 

‘மௌனம் பேசியதே' என்கிற ஆவரேஜ் படம். அதன் பின்னர் ‘அட’ என வியப்பைத் தந்த ‘க்ரைம் த்ரில்லர்’ ‘ராம்' என தனக்கான விசிட்டிங் கார்டை வைத்திருந்த இயக்குநர் அமீரின் மூன்றாவது படம் பருத்திவீரன். இதைத்தாண்டி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மற்றொரு செய்தி என்று பார்த்தால், நடிகர் சிவக்குமாரின் இரண்டாவது மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி அறிமுகமாகிறார் என்பதுதான். ‘‘படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என என்னைத்தவிர யாருமே வெளியாகும் வரை நம்பவில்லை" என்று அமீர் படம் வெளியான பின் தெரிவித்தார். 

பருத்திவீரன்
பருத்திவீரன்

‘பருத்திவீரன்' திரைப்படத்தை இந்த 14 வருடங்களில் தமிழ் சினிமா ரசிகர்களில் பெரும்பான்மையானோர் தவறாமல் பார்த்திருப்பார்கள். பருத்தியூரில் சாராயம் காய்ச்சும் குற சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணிடம் பொன்வண்ணனும், சம்பத்தும் வேலை செய்கிறார்கள். தொழில் போட்டியில் குறத்தி கொல்லப்படுகிறார். ஆதரவற்று நிற்கும் குறத்தியின் மகளை சம்பத் திருமணம் செய்கிறார். இதைப் பிடிக்காத சம்பத்தின் தங்கை கணவர் பொன்வண்ணன் மற்றும் அவர்களின் உறவினர்கள் கண்டிக்கின்றனர். இதனால் ஊரை விட்டு ஒதுங்கி வாழும் சம்பத்தும் அவரது மனைவியும் லாரியில் அடிபட்டுச் சாகின்றனர். அவர்களின் மகன் தான் பருத்தி வீரன் கார்த்தி. இந்த விபத்தினால் அநாதையாகிப்போன கார்த்தியை சம்பத்தின் தம்பி சரவணனும் அவரது அம்மாவும் எடுத்து வளர்க்கின்றனர். பின்னர் வளர்ந்து பெரியாளாகி சண்டியராகத் திரியும் கார்த்தியை முறைப்பெண்ணும்,பொன்வண்ணனின் மகளுமான ப்ரியாமணி விரட்டி விரட்டிக் காதலிக்கிறார். அதன் பின்னர் அவரது அம்மா-அப்பாவின் வாழ்க்கையைப்போல் கார்த்தியின் வாழ்க்கையிலும் சாதி எப்படிப் பழிவாங்குகிறது என்பதுதான் கதை. 

அமெரிக்காவில் எம்.பி.ஏ முடித்து ‘க்ளீன் ஷேவ்’ முகத்துடன் வந்திறங்கிய கார்த்தி, ‘நல்ல நடிகர்தான் ஆனால் அதிர்ஷ்டமில்லாதவர்' எனப் பெயரெடுத்திருந்த சரவணன், அதே போன்ற காரணத்தால் தமிழ்த்திரையில் புறக்கணிக்கப்பட்டிருந்த ப்ரியாமணி என அமீரின் கலைஞர்களின் தேர்வே சினிமா வட்டாரத்தில் முணுமுணுப்பைக் கிளப்பியது. 

படத்துக்கு புக் செய்வதற்காக ப்ரியாமணியை இயக்குநர் அமீர் சந்தித்து கதையைச் சொல்லியிருக்கிறார். கதையைக்கேட்ட ப்ரியாமணி ‘‘சார், எனக்கு டப்பிங் பேசத் தெரியலைன்னு திட்டுறாங்க சார். இவ்வளவு ஸ்டாராங்கான கேரக்டரை எனக்கு கொடுத்திருக்கிங்க" என்று தயங்கினாராம். ‘‘உன் பேச்சுக்கும் நடிப்புக்கும் அவார்டே வாங்கித்தர்றேன்" என மிகுந்த நம்பிக்கையோடு சொன்னாராம் அமீர். அந்த ‘கருவாச்சி’ முத்தழகின் ‘‘போதையில கீதயில ஒண்ணும் உளறலையே" என்கிற தெனாவெட்டான குரலும், ‘‘எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்டா..உன்னை மட்டும்தாண்டா பிடிக்கும்" என ஏங்கும் குரலும் இன்றும் நமக்கு ஒலிக்கிறது. ப்ரியாமணியிடம் சொன்னதைப் போலவே விருதையும் வாங்கியும் கொடுத்தார் அமீர்.

பருத்திவீரன்
பருத்திவீரன்

‘‘இந்தப் படத்தில் 'பொணந்தின்னி' கேரக்டரில் நடித்த செவ்வாழை ஒவ்வொருமுறையும் ‘டப்பிங்’ பேசி வெளிவந்தபோதும், அவருடைய தடித்த குரல் யாருக்குமே புரியவில்லை எனச் சொன்னார்கள். இருந்தும் அவரைப் பிடிவாதமாகப் பேசவைத்தேன். படத்தின் நேட்டிவிட்டியை தூக்கிப்பிடித்த அவரின் குரல் என் முடிவைச் சரிதான் என உறுதிப்படுத்தியது" என்று சொன்ன அமீர் ‘‘இந்தப்படத்தின் எந்தக்காட்சியையும் இனி நான் பார்க்கவே விரும்பவில்லை. ஒவ்வொரு காட்சியும் அதைப் படமாக்கும் போது நிகழ்ந்த கசப்பான சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வருகின்றன’’ என்று தெரிவிக்குமளவுக்கு படப்பிடிப்பின் போது மனரீதியாக பெரும் நெருக்கடியைச் சந்தித்தார். 

இந்தப் பாடல்கள் மற்றும் இசை குறித்தும் சொல்லியே ஆகவேண்டும். யுவன் சங்கர் ராஜா பருத்திவீரனுக்கு இசையமைக்கும் முன்னரே 40-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைப்பாளராக இருந்துள்ளார். இருந்தாலும் முதன்முதலில் அவர் இசை அமைத்த கிராமத்து கதை பருத்திவீரன். இது அவருக்கு மிகப்பெரிய சவால். மிகச்சிறந்த கதைக்களம் உள்ள கிராமத்து படங்களுக்கு இளையராஜாவிடம்தான் பெரும்பாலும் ‘புக்’ செய்வார்கள். யுவனிடம் நம்பிக்கையோடு வந்த அமீருக்கும், படத்தின் கதைக்கும் எந்த வஞ்சகமும் செய்யாமல் மண் மணம் 'மணக்க மணக்க' இசை அமைத்திருந்தார். குத்துப்பாட்டு முதல் ‘சண்டாளி உன் பாசத்தாலே..’ என ஊர்ச்சண்டியர் உருகும் பாடல் வரை என ‘பெஸ்ட் ஆஃப் யுவன்’ பட்டியலில் இந்தப்படம் கண்டிப்பாக உண்டு. ஒரு பாடலின் ஆரம்ப வரிகளை அமீரே பாடவும் செய்து இருந்தார்.

பருத்திவீரன்
பருத்திவீரன்

யாருக்குமே அஞ்சாத பருத்திவீரன், முத்தழகு என்கிற பெண் அவனுடன் வாழ வேண்டும் என்கிற ஒரே ஆசைக்காக அவளைக்கூட்டிக்கொண்டு ஓடுகிறான். போகிற வழியில் அவன் குடும்பத்தையும் கூட்டி வரச்செல்கிறான். அதற்குள் குடும்பம் திசை மாறிப் போய்விட, வீரன் வருவதற்குள் முத்தழகை, வீரனைப் பிடிக்காத சிலர் சிதைத்து விடுகின்றனர். வீரன் வந்து பார்க்கும் போது கிட்டதட்ட சாகும் தருவாயில் இருக்கும் முத்தழகு நடந்ததைச் சொல்லி செத்து விடுகிறாள். அப்போது முத்தழகின் தந்தை ஆட்களுடன் வந்துவிட,  தனக்கு நேர்ந்ததைச் சொல்லிவிடக்கூடாது என்கிற அவளின் வேண்டுகோளைக் காப்பாற்ற முடிவெடுக்கிறான். அதற்காக அறத்துடன் அவன் செய்யும் செயல்தான் படத்தின் பார்வையாளர்களை உறைய வைத்தது.

அத்தனை காதல் மிகுந்த முத்தழகை தான் கொன்று முத்தழகின் தந்தை கழுவத்தேவனின் மீதான பழியை தீர்த்ததாகச் சொல்கிறான். கழுவத்தேவனின் ஆட்கள் தடியால் வீரனை அடித்துக்கொல்கிறார்கள்.

பருத்திவீரனின் அறம் தமிழ்ப்பார்வையாளர்ளை உறைய வைத்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகின்றன! 

வாழ்த்துகள் அமீர், வாழ்த்துகள் கார்த்தி, ப்ரியாமணி!

- வரவனை செந்தில்
 

அடுத்த கட்டுரைக்கு