Published:Updated:

“‘தளபதி’ல அந்தக் காட்சி.. மணிரத்னம் சாரோட மேஜிக்!” - அர்விந்த் சுவாமி சுவாரஸ்ய ஷேரிங்! #VikatanExclusive

“‘தளபதி’ல அந்தக் காட்சி.. மணிரத்னம் சாரோட மேஜிக்!” -  அர்விந்த் சுவாமி சுவாரஸ்ய ஷேரிங்! #VikatanExclusive
“‘தளபதி’ல அந்தக் காட்சி.. மணிரத்னம் சாரோட மேஜிக்!” - அர்விந்த் சுவாமி சுவாரஸ்ய ஷேரிங்! #VikatanExclusive

“‘தளபதி’ல அந்தக் காட்சி.. மணிரத்னம் சாரோட மேஜிக்!” - அர்விந்த் சுவாமி சுவாரஸ்ய ஷேரிங்! #VikatanExclusive

முற்றத்தை ஒட்டி இருந்தது அந்த அறை. சுற்றிலும் இருக்கிற செடி, கொடிகள் தரும் ‘தண்மை’ இதமாக இருந்தது. புகைப்படக் கலைஞர், இடம் பார்த்து ’வெளிச்சம் போதுமா’ என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்.  

"கேமரா செட் பண்ண ஒரு பத்து நிமிஷம் ஆகுமா? அதுக்குள்ள காபி, டீ எது வேணும்னு சொன்னீங்கன்னா சொல்லிட்டு வந்துடுவேன்” என்ற குரல் கேட்க, திரும்பிப் பார்த்தேன். உயரம், நிறம், கம்பீரம் என்ற புறக்காரணிகள் தவிர்த்து, கேட்ட விதத்தில் என்னை ஈர்த்தவர் அசல் அர்விந்த் சுவாமிதான். பத்து நிமிடங்களில், தேநீர்க் கோப்பைகளுடன் அமர்ந்திருந்தோம். 

“போகன்ல உங்களுக்கு சவாலா அமைஞ்ச காட்சி எது?” 

“ஜெயம் ரவிக்கும் எனக்கும் நல்ல நட்பு, புரிதல் உண்டு. அதுனால சவாலா இருந்தது என்பதைவிட சுவாரஸ்யமா அமைஞ்சது பல காட்சிகள். முக்கியமா, சிறையில் நடக்கற உரையாடல்களைச் சொல்லலாம். ரெண்டு பேரும் கோவமா பேசிக்கணும். ரவி உடம்புல இருக்கறது நான். என் உடம்புல இருக்கறது ரவி. அதுனால, நான் அந்தக் கதாபாத்திரமா என்ன நினைப்பேன்னு ரவிகிட்ட சொல்லுவேன். அத ரவி பேசுவார். அதே மாதிரி அவர் நினைக்கறத, நான் பேசுவேன்னு சுவாரஸ்யமா இருந்தது”  

“நீங்க ‘டைரக்டர்’ஸ் ஆர்ட்டிஸ்ட்.’ எப்படி இந்தப் பேர் வாங்கினீங்க?”

“அப்படியா? சந்தோஷமாத்தான் இருக்கு. கருத்து சொல்றதால இருக்கலாம். அது மணிரத்னம் சார்கிட்ட கத்துகிட்டது. நல்லதோ, கெட்டதோ நமக்குத் தோண்றதைப் பகிர்ந்துக்கணும்னு நெனைப்பேன். இதுலகூட லக்‌ஷ்மன்கிட்ட, நிறைய ஆலோசனைகள் சொன்னேன். முடிவு எடுக்க வேண்டியது அவர்தான். சிலதை எடுத்துப்பாங்க; சிலதை வேணாம்னு விடுவாங்க. ஆனா, படம் வெளியானா, நாம சொன்ன மாற்றத்துக்கு, ரசிகர்கள் மத்தியில வரவேற்பு எப்படி இருக்குன்னு பார்ப்பேன். அது சவாலா இருக்கும். இந்த மாதிரி, ஈடுபாட்டோட இருக்கறதால இயக்குநர்களுக்குப் பிடிச்சிருக்கலாம்.”

“‘அர்விந்த் சுவாமி மாதிரி மாப்பிள்ளை வேணும்’ - இது தமிழ்நாட்டு மக்களோட ஃபேவரைட் வசனமாவே ஆகிடுச்சு.  நீங்க இதை எப்படிப் பார்க்கறீங்க?”

மெலிதாகச் சிரிக்கிறார். அமைதி. மீண்டும் ஒரு புன்னகை. வெட்கப்படுகிறாரா.. யோசிக்கிறாரா என்று புரியாமல் நான் பார்க்க... தொடர்கிறார்;

“அது ஒரு சாதனையா நான் நெனைக்கவேல்லயே? அதை எடுத்துக்கத் தோணல எனக்கு. அது ஒரு அன்பின் வெளிப்பாடு. அவ்வளவுதான். அதுல உள்ள உள்ளடக்கத்தை நான் எடுத்துக்கல”

| சிவாஜி நடிப்பைப் பார்த்து அழுதிருக்கேன் |

“சரித்திரப் படம் எடுத்தா யாருடைய கதாபாத்திரம் பண்ண ஆசை?”  

“கர்ணன். சிவாஜி சாரோட கர்ணன்லாம் பார்த்து அழுதிருக்கேன். அது மாதிரி பண்ணணும்னு எல்லாம் இல்லை. என்னை ரொம்ப பாதிச்ச கதாபாத்திரம் அது”  

“நீங்க நிறைய புத்தகங்கள் படிப்பீங்கன்னு தெரியும். வேற என்ன பொழுதுபோக்கு?”

“இதைச் சொல்லலாமானு யோசனையா இருக்கு. ஒரு வேண்டுகோளோட சொல்றேன். ‘அர்விந்த் சுவாமியே பண்றாரு’னு அப்படி யாரும் பண்ணக்  கூடாது. வீடியோ கேம்ஸ் அடிக்ட் நான். பல மணிநேரம் உட்கார்ந்து விளையாடிருக்கேன்”

“பிறமொழிகள்ல திரைப்படத்துறை எப்படி இருக்கு?”  

“ரொம்ப முன்னேறி இருக்கு. பாலிவுட்ல சர்வதேச ஸ்டூடியோலாம் வந்திருக்கு. படப்பிடிப்புக்குப் போறதுக்கு முந்தி  ‘பவுண்ட் ஸ்கிரிப்ட்’ ரெடி பண்ணிக்கறாங்க. நேர மேலாண்மை அருமையா இருக்கும். உதாரணமா, ‘6.45-க்கு இறங்கறீங்க. 7 மணிக்கு கேரவன். 7.20-க்கு ஷாட்’ அப்டினு டைமிங் குறிப்பிட்டு நமக்கு அறிவிப்புகள் வரும்.

ஒரு காட்சி எடுத்துட்டிருக்கும்போது, ‘நாம் இப்ப 8-வது காட்சியப் பண்ணிட்டிருக்கணும். ஆனா 6-வதுதான் பண்ணிட்டிருக்கோம். 2 காட்சி பின்னாடி இருக்கோம்’னு ‘ஃபர்ஸ்ட் அசிஸ்டென்ட்’ வந்து சொல்லுவார்.  அப்படியும், அந்த நாளைக்கு ஒரு காட்சியோ, இரண்டு காட்சியோ மிஸ் ஆகறதை, எல்லா காட்சிகளும் எடுக்கப்பட்டு படப்பிடிப்பு மொத்தமா முடிஞ்சபிறகு கடைசிலதான் ஷூட் பண்ணுவாங்க. ஆக, ஃபர்ஸ்ட் அசிஸ்டென்ட், இயக்குநரோட ஆளா இல்லாம, தயாரிப்பாளரோட ஆளா இருப்பார். அப்படி முறையா, முன் திட்டமிடலோட பண்றதால, நிறைய பணம் மிச்சமாகும்.

அதுபோக ஒரு நல்ல விஷயம், திரையரங்குல வர்ற வசூல், வெளிப்படையா கணினில நாம பார்க்க முடியும். அதுனாலாதான் அங்க நடிகர்கள், நேரடியா சம்பளம் வாங்காம ‘பிஸினஸ் பார்ட்னரா’ பங்கு எடுத்துக்கறாங்க.  எல்லாமே வெளிப்படைத்தன்மையோட, முறையான ஆவணங்களோட இருக்கும். அது ரொம்ப நல்ல விஷயமா பார்க்கறேன்”

“கோட்டை அழிச்சுட்டு, புது வாழ்க்கைன்னா என்ன மாதிரி வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பீங்க?”   

“இப்ப இருக்கற இதே வாழ்க்கைதான். ஏற்றத்தாழ்வு எல்லாத்தோடவும் இந்த வாழ்க்கையை நான் ரொம்ப நேசிக்கறேன். அடிபட்டு சில வருஷம் படுத்த படுக்கையா இருந்தப்பவும், நிறைய கத்துக்க முடிஞ்சது. கத்துக்கற ஆர்வம் குறையறதே இல்லை எனக்கு!”

“ரசிகர் மன்றம் தேவையில்லைனு அப்பவே சொன்னீங்க. அந்த முடிவை இப்ப எப்படிப் பார்க்கறீங்க?”

“ரோஜா வந்தப்ப, என்கிட்ட சிலர் கேட்டாங்க. ‘எனக்கு வேண்டாம்’னேன். ஏன்னா, எனக்கு ரசிகர்னு ஒருத்தர் தன்னை ஃபிக்ஸ் பண்ணிட்டார்னா நான் என்ன பண்ணினாலும் நல்லா இருக்குனு சொல்லுவார். நல்லா இல்லைனாலும் சொல்ற சுதந்திரம் அவருக்குப் பறிபோகுதோனு ஃபீல் பண்ணினேன். அதான் வேண்டாம்னேன். ரிலாக்ஸ் பண்ண வர்றீங்க. பாருங்க. நல்லா இருக்கு.. இல்லைனு சொல்லுங்க. அப்பறம் உங்க லைஃப் முக்கியம். அதைப் பாருங்கனு சொன்னேன். அவ்வளவுதான். இப்ப பல ரசிகர் மன்றங்கள் நற்பணியா பண்றாங்க. அதெல்லாம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவைதான்.”

| மணிரத்னம் மேஜிக் |

“தளபதியோட மாஸ் சீன். நீங்க ஒரு புதுமுகம். தொழில்நுட்பரீதியா சந்தோஷ்சிவன், மணிரத்னம்னு ஜாம்பவான்கள். நடிகர்கள் நாகேஷ், மம்முட்டி, ரஜினி-னு ஜாம்பவான்கள். இந்தப் பக்கம் சாருஹாசன், அந்தப் பக்கம் கிட்டி. காட்சில எல்லாரும் பின்னி எடுத்துட்டிருக்கறப்ப ‘உங்க கத்தலுக்கு இந்த ஊர் ஜனங்க பயப்படுவாங்க. நான் பயப்பட மாட்டேன்’ங்கறப்ப மொத்த கவனமும் உங்கமேல விழற நடிப்பைக் குடுத்திருத்தீங்க? எப்படி அப்படி?”

“தெரியாது. (சிரிக்கிறார்) நிறைய விஷயம் தெரியாமப் பண்றோம். அது எடுபட்டுடுது. 90-கள்லயே அவர் டிராலி மூவ்மென்ட் வெச்சு, கட் பண்ணிருப்பார். அது மணிரத்னம் சாரோட மேஜிக். அந்தக் காட்சியோட இலக்கணமே வேற. அப்பறம் அது திரைல வந்தப்ப ராஜா சாரோட ரீ ரெக்கார்டிங். எல்லாம் சேர்ந்து அமைஞ்சதுதான் நீங்க இவ்ளோ ஞாபகம் வெச்சுட்டு ரசிச்சதுக்குக் காரணம்”

சிம்பிளாகச் சொல்லிவிட்டு அதே வசீகரப் புன்னகையைப் பகிர்ந்தார். ’சதுரங்க வேட்டை - 2’, ‘வணங்கா முடி’, ‘பாஸ்கர் த ராஸ்கல்’ ரீமேக் என்று அடுத்தடுத்த படங்களுக்கு வாழ்த்துச் சொல்லி விடை பெற்றேன். 

- பரிசல் கிருஷ்ணா,

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

அடுத்த கட்டுரைக்கு