Published:Updated:

செல்போனை லாக் பண்ணிடுங்க மக்களே - 'அப்பா லாக்' இயக்குநர் அதகளம்!

விகடன் விமர்சனக்குழு
செல்போனை லாக் பண்ணிடுங்க மக்களே - 'அப்பா லாக்' இயக்குநர் அதகளம்!
செல்போனை லாக் பண்ணிடுங்க மக்களே - 'அப்பா லாக்' இயக்குநர் அதகளம்!

"இது எனக்கு மட்டும் இல்ல ,எல்லோருக்குமே நடந்திருக்கும், நடந்துகொண்டிருக்கும் ஒரு அனுபவம் தான். நம்ம மொபைலை லாக் போட்டுட்டு நம்ம க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கிட்டே கூட நம்பிக் கொடுக்க முடியாது. ஃப்ரெண்ட்ஸ் கிட்டேயே கொடுக்க முடியாதப்போ காதலிக்கிட்ட கொடுத்தா எப்படி இருக்கும்னு யோசிச்சப்போ வந்த ஐடியா தான் 'அப்பா லாக்'குக்கான முதல் விதை. இந்த அப்பா லாக்  படம் நடிகர் சூர்யா நடத்துற குறும்படப் போட்டிக்காக எடுத்த மூணு நிமிஷ படம். இப்போ ரிசல்ட் வரட்டும்னு காத்திருக்கேன்" என நெக்ஸ்ட் ஜென்ரேஷன் இளைஞர்களின் மனநிலையை வார்த்தைகளில் பிரதிபலிக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அந்தப் போட்டியில் கலந்துகொண்ட படங்களில் வாட்ஸ் அப். ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் வைரலான படமான 'அப்பா லாக்' குறும்படத்தின் ஹீரோ ப்ளஸ்  இயக்குநர். வாட்ஸ்-அப் காதல், காலேஜ் டைரீஸ், டி.வி கதை,  அப்பா லாக் என டைட்டில்களிலேயே ட்ரெண்டி வார்த்தைகளோடு விளையாடும்  இயக்குநரோடு ஒரு பேட்டி.

உங்களோட இந்தக் குறும்படப் பயணம் பற்றிச் சொல்லுங்க?

"2014-ல் இன்ஜினீயரிங் இரண்டாவது வருஷம் படிச்சுட்டு இருந்தேன். எந்த சினிமா பின்னணியும் இல்லை. சும்மா ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணலாமேன்னு பண்ணின படம்தான் 'வாட்ஸ்-அப் காதல்'. அந்தப் படத்தை பட்ஜெட்டே இல்லாமதான் முடிச்சோம். ஷூட்டிங் முடிச்சிட்டு எடிட்டிங்க்கு மட்டும் மூவாயிரம் செலவாச்சு. அந்தப் படத்துக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ் நானே எதிர்பார்க்காதது. அதுக்குப் பிறகுதான் காலேஜ் வாழ்க்கையைப் பின்னணியா வெச்சு காலேஜ் டைரீஸ்னு திரும்ப ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்தேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அதுக்குப் பிறகுதான் 'நீ சினிமாவுக்கே போயிரு சிவாஜி...'னு மனசு சொல்ல ஆரம்பிச்சது.

காலேஜ் டைரீஸ் பண்ணினப்போ நான் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட். எங்க காலேஜ்ல  ஷூட்டிங் எடுக்காத சினிமாவே கிடையாது. ஆனா நாம படம் பண்றோம். நம்ம காலேஜ்ல படம் எடுக்காம இருக்கலாமான்னு மொத்தப் படத்தையும் எங்க காலேஜ்லேயே எடுத்தேன். முக்கால்வாசிப் படம் முடிஞ்சப்போ எனக்கு கோர்ஸே முடிஞ்சு ஐ.டில வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். திரும்பவும் சனி, ஞாயிறு, லீவு நாள்ல எல்லாம் காலேஜுக்கு போய் முடிச்ச படம் தான் காலேஜ் டைரீஸ்."

அப்பா லாக் பற்றி...?
"ஒரு  பையனோட மொபைலை ஒரு பொண்ணுக்கிட்டே ஒரு அஞ்சு நிமிஷம் லாக் போடாம யாரும் கொடுப்பாங்களான்னா அது ரொம்ப யோசிக்கக் கூடிய விஷயம் தான். அது கல்யாணமே ஆகியிருந்தாலும் ஆண்கள், தன்னோட மனைவிக்கிட்டே கூட அவ்வளவு சீக்கிரம் கொடுத்துடமாட்டாங்க. ஒவ்வொருத்தரும் குறைஞ்சது விதவிதமா பத்து வாட்ஸ்-அப் குரூப்லயாச்சும் இருக்குறோம் இல்லையா?

இப்போ என்னோட போனை என் ஃப்ரெண்ட் கிட்டே கொடுத்தா யாராச்சும் நாலு பொண்ணுங்களுக்கு மெசேஜ் அனுப்பிட்டு ஒண்ணுமே தெரியாதமாதிரி உட்கார்ந்திடுவானுங்க. இதே மாதிரிதான் பொண்ணுங்க கிட்டே கொடுக்குறோம். திடீரென நமக்கு ஒரு பொண்ணுகிட்ட இருந்து போன் வரும் இல்ல.. பொண்ணோட போனுக்கு பையன்கிட்டே இருந்து போன் வரலாம் .எல்லோருக்குமே ஒரு பொசஸிவ்னஸ் இருக்கும். அது தான் இந்த படம். இதுல என்னோட பெர்சனல் அனுபவமும் கலந்திருக்கு."

படத்துக்கான வரவேற்பு எப்படி இருக்கு..?

"வாட்ஸ்-அப் காதல் பார்த்துட்டு டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் சாரோட 'பென்ச் ஃபிலிக்ஸ்'க்கு கேட்டிருந்தாங்க. முதல் படமான அவியல்ல வெளியிடுறதுக்கான வேலைகள்  நடந்துச்சு. ஆனா தவிர்க்க முடியாத சில காரணத்தால அதுல இடம் பெறலை. இப்போ அப்பா லாக். அதுவரை பண்ணின படங்கள் எல்லாமே என் ஃப்ரெண்ட்ஸ் நடிக்க வெச்சே முடிச்சிருப்பேன். முதல் டைம் ஒரு பெரிய ஆர்டிஸ்ட்டை வெச்சு வொர்க் பண்ணப்போறோம். எப்படி நாம ஹேண்டில் பண்ணப் போறோம்னு ஒரு தயக்கம் இருந்துச்சு. டெல்லி கணேஷ் சார் கிட்டே படத்தைப் பற்றிச் சொன்னப்போ 'நடிக்கிறேன் பா...'னு மட்டும்தான் சொன்னார். ஷூட்டிங் அப்போ அவரோட கேரக்டர் டிசைனிங் பற்றிச் சொல்லுவேன். ஷூட்டிங் முடிஞ்சப்போவும் ஒண்ணும் சொல்லல... டப்பிங் முடிச்சப்போவும் ஒண்ணும் சொல்லலை. இன்னமும் நான் அவர் கிட்டே பேசலை. ஆனா டெல்லிகணேஷ் சாரோட பையன் முழுப் படமும் பார்த்துட்டு சூப்பரா இருக்குனு சொல்லியிருந்தார். அப்பாவுக்கு ரொம்பப் பிடிச்சுருக்குன்னு சொன்னாரு. படம் பார்த்துட்டு ஜேம்ஸ் வசந்தன் சார் ரொம்ப நல்லா இருக்குனு சொல்லியிருந்தாங்க."

App(a) Lock குறும்படம் கீழே...

ஐ.டி இளைஞர் நீங்க... உங்களோட அடுத்த இலக்கு என்ன?

"என்னோட குறும்படத்துல நானே தான் நடிச்சிருப்பேன். 'காலேஜ் டைரீஸ்' குறும்படத்துக்கு எனக்கு வசனத்துக்காகவும் நடிப்புக்காகவும் அவார்டு கிடைச்சது. அப்போ இயக்குநர் கமல் பிரகாஷ் நடிக்க சொல்லி கேட்டாங்க. அவரோட 'ஹைவே காதலி' குறும்படத்துல நான் நடிச்சிருக்கேன். இப்போதைக்கு ஐ.டி வேலை தான். படத்துக்குக் கிடைச்ச வரவேற்பும் அடுத்தடுத்த வாய்ப்புகளும் சீக்கிரமே முழுநேர சினிமாவுக்குள்ள போகலாம்னு நம்பிக்கை கொடுத்திருக்கு. 'காலேஜ் டைரீஸ்' முடிச்ச  பிறகு வேற ஒரு கதைய மனசுல வெச்சு முழு நீளப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையில் இருந்தேன். 'காலேஜ் டைரீஸ்' பார்த்துட்டு,அதே கதையை முழு நீளப்படமா எடுக்கச் சொல்லி தயாரிப்பாளார்கள் பேசிக்கிட்டு இருக்காங்க. இப்போ  அதுக்கான ஸ்கிரிப்ட் வொர்க்ல இருக்கேன். சீக்கிரமே என்னை நீங்க இயக்குநராக பார்க்கலாம்."

வர்லாம் வர்லாம் வா..!

- ந.புஹாரி ராஜா

அடுத்த கட்டுரைக்கு