Published:Updated:

விஜய் ஆன்டனியின் வில்லனிசம் ஈர்க்கிறதா?!- எமன் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
விஜய் ஆன்டனியின் வில்லனிசம் ஈர்க்கிறதா?!- எமன் விமர்சனம்
விஜய் ஆன்டனியின் வில்லனிசம் ஈர்க்கிறதா?!- எமன் விமர்சனம்

நம்பி வாங்க... சந்தோஷமா போங்க’ லிஸ்டில் முன்னேறிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின், எமன் பாசம் காட்டுகிறதா... பாசக்கயிறு நீட்டுகிறதா? 

திருநெல்வேலியில் அரசியல் ஆர்வமுள்ள அறிவுடை நம்பி, கலப்பு மணத்தின் காரணமாக வஞ்சனை செய்து கொல்லப்பட, அவர் மனைவி மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறார். பிறந்த உடனே பெற்றோரை இழந்ததால், எமன் என்ற பெயருடன் அழைக்கப்படும் தமிழரசன் வளர்ந்து பெரியவனாகிப் பழிவாங்கும் அரசியல் கதைதான்.

முதலில் ஜீவாசங்கருக்கு, திரைக்கதைக்காகப் பாராட்டுகள். கிட்டத்தட்ட ஒரு அரசியல்வாதியின் பயோகிராஃபியைச் சுருக்கி எழுதியதாக அமைந்திருக்கிறது. ஏமாற்றம், வஞ்சனை, சூழ்ச்சி, சதி என்று அரசியல்வாதிகள் எல்லா முகங்களையும் பாய்ன்ட் பை பாய்ன்டாக காட்சிப்படுத்தி கண்முன் வைக்கிறார். அதற்கான டீட்டெய்லிங்கும் அற்புதம். உதாரணமாக முன்னாள் எம்.எல்.ஏ கருணாகரனாக வரும் தியாகராஜனின் பாத்திரப்படைப்பு. போலீஸ், எதிர்க்கட்சி, சொந்தக் கட்சி என்று எல்லா இடங்களிலும் விரவிப் பற்றியிருக்கும் அவரது ஆட்கள் மூலம் அவரின் காய்நகர்த்தல்களைக் அழகாக திரைப்படுத்தியிருக்கிறார். அரசியல்வாதிகள், மக்கள் குறித்து சார்லி, சங்கிலி முருகன் பேசும் வசனங்களிலும் ஜீவாசங்கரின் உழைப்பு தெரிகிறது.

படத்தில் வில்லனே இல்லை என்பார்களே.. இதில் ஹீரோவே இல்லை. விஜய் ஆண்டனி உட்பட எல்லாருமே ஒருவரை ஒருவர் சதி செய்து வீழ்த்திப் பழி வாங்கவே திட்டம் தீட்டி அலைகிறார்கள். அப்படியான ஒரு கதையைத் தேர்வுசெய்து நடித்தமைக்கு விஜய் ஆண்டனியைப் பாராட்டலாம். தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்வது என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதால் நிறைந்த நன்மை.. குறைந்த டேமேஜ் என்று போகிறது படம். 

படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள். மாறிக்கொண்டே இருக்கிறார்கள் வில்லன்கள். அதை இணைத்த விதம் ஷார்ப் என்றாலும், ஒட்டுமொத்தமாக டெம்ப்போவை அது காலி செய்கிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாமல் போனதற்கு புதுப்புது வில்லன்கள் வந்ததும் ஒரு காரணம். முடிவில், எல்லா வில்லன்களையும் ஒரு நேர்க்கோட்டில் சேர்த்து சரி செய்திருப்பது நேர்த்தி.  

தங்கபாண்டியனாக வரும் அருள்ஜோதி ஆரம்ப காட்சிமுதலே, ‘யார் சாமி நீ?” என்று கேட்க வைக்கிறார். ‘அறிவுடைநம்பி’யைப் பற்றிச் சொல்லும்போது கண்ணில் தெரிகிற வன்மம், மீண்டும் சந்திக்கும்போது சூழ்ச்சியாக மாறிச் சிரிக்கிறது. மீண்டும் மந்திரியாகி சந்திக்கும்போது சிநேகம் காட்டியபின், துரோகம் காட்டி வீழ்த்த நினைக்கிறது. உடல்மொழியிலும், வசனங்களிலும் அருள்ஜோதி.. சிறப்பூ!   

தியாகராஜனும் நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார். கதாநாயகி மியா ஜார்ஜ், கதைக்குத் தேவையில்லை என்று வரக்கூடாதே என்பதற்காகவே சிலகாட்சிகள். சார்லி இன்னும் நிறைய படங்களில் வலம் வரலாம். மாரிமுத்து, சார்லி, சங்கிலிமுருகன் ஆகியோரது அனுபவ நடிப்பும் படத்துக்கு கைகொடுக்கிறது. 

‘உண்மையவிட பொய்ய நம்பினா, அட்லீஸ்ட் குற்ற உணர்ச்சி இல்லாம வாழமுடியும்’, ‘அறியாமையைப் பயன்படுத்திக்கறதுதான் பெரிய குற்றம்’  போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. வசனங்களில் விஜய் ஆண்டனி உட்பட யாருக்கும் பஞ்ச் டயலாக்குகள் இல்லை. ஆனால் நச்சென்று இருக்கின்றன. உதாரணமாக மாரிமுத்து ‘என்னை உயிரோட விடு’ என்று கேட்கும்போது ‘யோசிச்சு சொல்றேன். அமைதியா இரு’ என்று விஜய் ஆண்டனி சொல்லும் வசனம்.   அதேபோலவே அதிரி புதிரி ஹீரோயிஸம் ஏதும் இல்லாமலும் ‘இந்த துப்பாக்கி ட்ரிக்கரை எப்படி ரிலீஸ் பண்றது’ என்று கேட்கும் காட்சியில் க்ளாப்ஸ் அள்ளுகிறார்.    

முதல்காட்சியிலிருந்தே படம் தொடங்கிவிடுகிறது. அவ்வளவு டைட்டான ஸ்கிரிப்ட்டில், எதற்குப் பாடல்கள்? ‘டச் விட்டுப் போய்டும்’ என்று விஜய் ஆண்டனி போட்ட பாடல்கள் பெரும் உறுத்தலாகப் படத்துக்கு ஸ்பீட்ப்ரேக் போடுகின்றன. அதேபோல, ஒரு சில இடங்களில் ’அவரே கன்ஃப்யூஸ் ஆய்ட்டாரே’ என்று சொல்ல வைக்கிறது. மருத்துவமனை பில்லை, மியா ஜார்ஜ் கட்டியதைச் சொல்லிவிட்டு, பில் கட்டிய அவரிடமே ‘நீங்க நெனைக்கற அளவு ஹாஸ்பிடல் பில் அவ்ளோ ஜாஸ்தியில்லை’ என்கிறார் விஜய் ஆண்டனி. இன்னொரு இடத்திலும் இதேபோன்ற குளறுபடி. என்ன ஆச்சு பாஸ்?

அந்த வேட்பாளர் அறிமுகவிழாக் காட்சி, ஒரு செம ஸ்பீட் ரேஸிங் காட்சிக்கு இணையான பரபரப்பைத் தருகிறது. அதற்கேற்பவே பின்னணி இசையும். அந்தக் காட்சியில் கேமராமேனாகவும் சபாஷ் வாங்குகிறார் ஜீவா சங்கர். 

கதாபாத்திரங்களின் பில்ட் அப்புக்கு இணையாக, தீர்த்துக்கட்டும் காட்சிகள் இல்லை. எல்லாமே போகிற போக்கில் செய்கிறார்கள். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற இரு கட்சிகள் சார்ந்த நபர்களில் யாருக்கு எது நடந்தாலும் நாடு அதுபாட்டுக்கு அமைதியாக இருக்கிறது. ஒரு கவுன்சிலரைப் பார்ப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும் நாட்டில், விஜய் ஆண்டனி அதிகார மையமான தியாகராஜன், மந்திரி என்று எல்லாரையும் ஜஸ்ட் லைக் தட் நெருங்குகுறார். காசு கொடுத்து சிறைக்குச் செல்லும் ஒருவனை அப்படி, உடனேயே நெருங்க விடுவார்களா? எல்லாரையுமே ஸ்லோவாகப் பேசவைத்து, காட்சிகளை இஷ்டத்துக்கு இழுத்திருப்பதும் பெரும் குறை. எடிட்டர், இன்னும் ஷார்பாக பல காட்சிகளை கட் செய்திருக்கலாம். பார்வையாளர்களுக்குப் புரியவேண்டும் என்பதால், கேரக்டர்கள் யாரிடமாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தியாகராஜன், மனைவியிடம் பேசும் காட்சிகள் ஒரு உதாரணம். படத்தில் பேச்சைக் குறைத்து, காட்சிகள் மூலமே பலவற்றை விளக்கியிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.  

குறைகள் இருந்தாலும், ஒரு அரசியல் களத்தில் அண்டர்ப்ளே சுவாரஸ்யம் காட்டிய வகையில் ஈர்க்கிறான் எமன்!

அடுத்த கட்டுரைக்கு