Published:Updated:

பஞ்சு மிட்டாய் சென்டிமென்ட், குதிரை பந்தயம் மட்டும் போதுமா? வின்னர் படம் எப்படி?

பஞ்சு மிட்டாய் சென்டிமென்ட், குதிரை பந்தயம் மட்டும் போதுமா? வின்னர் படம் எப்படி?
பஞ்சு மிட்டாய் சென்டிமென்ட், குதிரை பந்தயம் மட்டும் போதுமா? வின்னர் படம் எப்படி?

தாத்தா முகேஷ் ரிஷியின் சதியால் சிறுவயதிலேயே சித்தார்த், தந்தை மகேந்திராவை (ஜெகபதி பாபு) வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறுகிறான். மகன் என்றாவது ஒருநாள் திரும்ப வருவான் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெகபதி பாபு. இருபது வருடங்களுக்குப் பிறகு, சித்தார்த் என்கிற சித்துவுக்கு (சாய் தரம் தேஜ்) சித்தாராவைப் (ரகுல் ப்ரீத் சிங்) பார்த்ததும் காதல் வருகிறது. பின்னால் அலைந்து தொல்லை செய்கிறான். தன்னுடைய வாழ்க்கை லட்சியமே வேற என ரகுல் சொல்லியும் சாய் கேட்பதாய் இல்லை. கடுப்பாகும் ரகுல் சாயை ஒரு சிக்கலில் மாட்டிவிடுகிறார். அது என்ன சிக்கல், பிரிந்து போன மகன் சாயை தந்தை ஜெகபதிபாபு திரும்ப பெற்றாரா, இது ஒரு ஸ்போர்ட்ஸ் மூவி என்பது நிஜமா என்பது மாதிரியான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது 'வின்னர்' படம்.

காதல், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என எல்லாவற்றையும் கலந்துகட்டி அளிக்க பக்காவான ப்ளாட். அதை முடிந்த வரை செய்திருக்கிறார் இயக்குநர் கோபிசந்த் மலினேனி. ஆனால், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷான முயற்சிகளை தெலுங்குத் திரையுலகம் முன்னெடுக்கும் இந்த நேரத்தில் இப்படியான படம் மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். பழைய டைப் படங்கள் நிறைய இருக்கிறது. பிரிந்து போன குடும்பத்தையே சேர்த்து வைக்கும் குடும்பப் பாடல், குடும்ப மச்சம், குடும்பப் படம் வைத்த செயின் லாக்கெட் என நிறைய. "எப்போ இவங்க ஒண்ணு சேருவாங்களோ..." என ஆடியன்ஸ் கண்கலங்கப் படம் பார்க்க வைக்கும் டைப் அவை. அந்த மாதிரி விஷயத்துடன் படம் பண்ணியிருக்கிறார் இயக்குநர் கோபிசந்த். ஆனால், அந்த மாதிரி களத்துக்கும் நிறைய வேலை செய்ய வேண்டும். 

நடிப்பு பற்றி பெரிதாக சொல்லும் படி யாருக்கும் ஸ்கோப் உள்ள படம் இல்லை இது. சண்டைக் காட்சிகளில் ஸ்கோர் செய்ய சாய் தரச், பாடல் காட்சிகளில் ஸ்கோர் செய்ய ரகுல் ப்ரீத் மற்றவர்களுக்கு அதற்கு கூட வாய்ப்பில்லை. சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் கெட்டப் போட்டு, குதிரை ஏற்றப் பயிற்சியாளராக வரும் அலியின் காமெடிகள் மட்டும் ஆறுதல் அளிக்கிறது. ரொம்ப நாள் கழித்து சோனியா அகர்வாலை திரையில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அவருக்கும் பெரிய ரோல் கிடையாது. தந்தை மகன் இருவருக்குமான பாசத்தைப் புரிய வைக்கும்படி அழுத்தமாக எந்தக் காட்சிகளும் இல்லாமல், ஹீரோயிஸம் காட்டுவதற்காகவே சாய் தரம் தேஜுக்கு எத்தனை சண்டைகள் வைக்கலாம் என்று மட்டும் யோசித்து வேலை செய்திருக்கிறார்கள். 

தந்தை தன் மகனை அடையாளம் கண்டுபிடிக்க பஞ்சுமிட்டாய் லாஜிக் வைத்தது, ஒரே வாரத்தில் குதிரை ஏற்றப் பயிற்சி முடித்து ரேசில் கலந்து கொள்வது, ஒரு சின்ன உதவியால் கவரப்பட்டு ஹீரோவின் மேல் ஹீரோயினுக்குக் காதல் வருவது என படம் முழுக்க எக்கச்சக்க பாழடைந்த மேட்டர்கள். சண்டைகள், பாடல்கள் என அத்தனையும் கடந்து படத்தை பார்த்து முடிப்பதற்குள் பெரிய அலுப்பு வந்துவிடுகிறது.

இது ஒரு ஸ்போர்ட்ஸ் படமா? ஆமா ஜி! படத்தில் ஹீரோயினின் லட்சியம் தடகள போட்டியில் ஜெயிப்பது. ஹீரோவுக்கான சவால் குதிரைப்பந்தயத்தில் ஜெயிக்க வேண்டும் என்பது. இதை மட்டும் வைத்து இதை ஒரு ஸ்போர்ட்ஸ் மூவி என்று சொன்னால் எவ்வளவு கடுப்பாக இருக்கும். அதுபோல ஒன்றுமே இல்லாத விஷயங்களை அடுக்கி வைத்துவிட்டு இதை ஒரு என்டர்டெயின்மென்ட் படம் என்று சொல்கிறார் இயக்குநர். மிகப் புராதான காலத்துக் கதை எடுத்து வந்து அதில் குதிரைப் பந்தயத்தை இணைத்துவிட்டால் புதிதாக இருக்கும் என நினைத்திருக்காலம், உண்மையிலேயே கதையிலும் எதாவது புதுசு பண்ணியிருந்தால் வின்னர் வின்னாக வாய்ப்புகள் இருந்திருக்கும். 

அடுத்த கட்டுரைக்கு