Published:Updated:

அன்பான நடிகர்களே..இயக்குநர்களே! பிரித்விராஜை பின் தொடர நீங்கள் தயாரா?!

அன்பான நடிகர்களே..இயக்குநர்களே! பிரித்விராஜை பின் தொடர நீங்கள் தயாரா?!
அன்பான நடிகர்களே..இயக்குநர்களே! பிரித்விராஜை பின் தொடர நீங்கள் தயாரா?!


 கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை பாவனா காரில் சென்று கொண்டிருக்கும் போது , ஓடும் காரை வழிமறித்து அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி நிர்கதியாக்கி விட்டுச் சென்றனர் கொடியவர்கள் சிலர். தன் ஒட்டுமொத்த பலத்தையும் இழந்தப் பிறகு தனக்கான நியாயம் தேடி அங்கிருந்து தப்பி வந்திருக்கும் பாவனாவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறதல்லவா?


புகழ்வெளிச்சத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கே இந்த நிலையா என்றெல்லாம் இல்லை. பெண் என்றால் போதும் அது குழந்தையாய் இருந்தால் என்ன? மூதாட்டியாய் இருந்தால் என்ன? நடிகையாய் இருந்தால் என்ன? அரசியல்வாதியாய் என்ன? .பெண் அவ்வளவு தான். நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்துவிட்டுப் போகட்டும். அதைப்பற்றி பேசிப்பேசி சளைப்பதைத் தவிர்த்து வேறென்ன செய்து கொண்டிருக்கிறோம்?
சமூகம் மாறினால் ஒழிய இங்கே எதுவும் மாறிவிடப் போவதில்லை. பாலியல் குறிந்த விழுப்புணர்வு கல்வி, வீட்டில் ஆண்/பெண் பிள்ளைகளின் வளர்ப்பு முறை , குடும்பம், கல்விக்கூடம் இதெல்லாம் இளைஞர்களை வழிநடத்தும் விதம் ..இப்படியான பல முன்னெடுப்புகளின் மூலம் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியும் என்பது போலவே , பாலியல் குற்றங்களுக்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லக் கூடிய தேவையற்ற காட்சிகளை தன்னகத்தே வைத்திருக்கும் சினிமாத்துறை தன் பங்குக்கு என்ன செய்ய போகிறது?.

தன்னுடன் நடுக்கும் பாவனாவுக்கு நடந்த பாலியல் சீண்டலைத் தொடர்ந்து நடிகர் பிரித்விராஜ் தன் முகநூல் பக்கத்தில், அவருக்காக தன் நிலைப்பாட்டைப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. ’நடிப்பு என்பது என் தொழிலாக இருந்தாலும் இதுவரை தான் நடித்தப் படங்களில் பெண்களை இழுவுப்படுத்தும் காட்சிகள் ஏதேனும் வந்திருப்பின் அதற்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும், இனிவரும் படங்களில் தான் அப்படியான காட்சிகளில் நடிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். கூடவே நடிகை பாவனா தனக்கு நேர்ந்த துன்பத்தை மறைக்காமல் அதற்கான நியாயம் கேட்டுப் புகார் கொடுக்க வந்திருக்கும் அவரது தைரியத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார். ‘தைரியம்’ என தலைப்பிடப்பட்ட அவரின் முகநூல் பதிவு பெண்களின் வலியை, சக்தியை அவர் உணர்ந்த விதத்தை மற்றவர்களுக்கும் கடத்துகிறது.

நீங்கள் கேட்கலாம். திரைப்படங்களில் மாற்றம் நிகழ்ந்துவிட்டால் எல்லாம் மாறிவிடுமா என்று?. மொத்தமாய் மாறுகிறதோ இல்லையோ ஒரு சின்ன புள்ளி ஆரம்பமாய் இருக்க முடியாதா என்ன? தான் நடிக்கும் காட்சிகளில் இருந்து பாடல்கள் வரை மது குடிப்பது போலவும், புகைப்பிடிப்பது போலவும் நடிக்காத எம்.ஜி.ஆரை பின் தொடர்ந்த ரசிகர்கள் பலரும் திரையில் தோன்றிய எம்.ஜி,ஆரை போலவே மதுவை தவிர்த்ததாகப் பல நிஜக்கதைகள் உலா வரத்தானே செய்கின்றன. எம்.ஜி.ஆரை போலவே தான் நடிக்கும் காட்சிகளில் மதுவுக்கும், புகைக்கும் தடா போட்ட நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் பெரிய திரையோ சின்னத்திரையோ அதில் புகைப்பிடிக்கும் காட்சி வந்தால் உடனே புகை உடல் நலத்துக்கு கேடு என எச்சரிக்கை வசனம் தவறாமல் இடம்பெறுகிறது. மது அருந்தும் காட்சிகளிலும் மது உடல்நலத்துக்கு கேடு என வருகிறது.  ஆனால் ஒருமுறையாவது பெண்களை கிண்டல் செய்யும் போதோ, அவளை பாலியல் துன்புறுத்தும் காட்சிகளிலோ ‘பெண்களை துன்புறுத்துவது தவறு’ என்பதை யாராவது வலியுறுத்தி இருக்கிறார்களா? இனி வலியுறுத்தத் தான் முன் வரப் போகிறார்களா?


து நாடா இல்லை வெறும் காடா?
இதை கேட்ட யாரும் இல்லை தோழா’

நாட்டில் நடக்கும் சூழல்களை எல்லாம் மனத்திரைக்குள் கொண்டு வந்தால் 'உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தின்  இந்த பாடல் வரிகள்  திரும்பத் திரும்ப ஒலிக்கத்தானே செய்யும்? பச்சிளம் குழந்தைமுதல் மூதாட்டி வரை வயது வித்தியாசமின்றி யாரையும் விட்டு வைக்காமல் பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பதை கேள்வியுறும் போது மேற்கண்ட பாடல் வரிகளை சற்று மாற்றியும் பாட வேண்டியிருக்கிறது. மனிதன் விலங்கின் தன்மையில் இருந்து மாறுபட்டவன், அவனுக்கு கொடூர குணம் இருக்காது. அவன் தன் சக உயிர்களுக்கு துன்பம் இழைக்க மாட்டான் என்கிற அடிப்படையில் தான் காடுகளை நாட்டைவிட சற்று குறைவான மதிப்பீட்டில் உதாரணங்களுக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால் இப்போது இந்த உண்மை மாறிக் கொண்டு வருகிறது. காடுகளில் வாழும் மிருகங்கள் எப்போதும் அதன் இயல்பை விட்டு மாறுவதில்லை. அவை தன் இயற்கை விதிமுறைகளுக்கு ஏற்ப கண்ணியமாகவே நடந்து கொள்கின்றன. மனிதர்கள் தான் அவர்கள் மாண்பில் இருந்து மாறுபட்டு சிதைந்த சிந்தனைகளை தங்கள் செயல்களில் வெளிக்காட்டிக்  கொண்டிருக்கிறார்கள். மிருகங்களுக்கு மட்டும் வாய் பேச தெரிந்தால் ’இதென்ன நாடா?’ என்று காட்டை குறிப்பிட்டு அவை ஏளனமாய்க் கேள்விக் கேட்டால் கூட அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையை சேர்ந்த  ஹாசினி என்கிற 7 வயது குழந்தை பக்கத்துவீட்டில் இருந்த கொடூரனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்து எரிக்கப்பட்டாள். அதைத் தொடர்ந்து எர்ணாவூரைச் சேர்ந்த 3 வயது குழந்தை ரித்திகா அதே பாணியில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு குப்பையில் வீசப்பட்டாள். அரியலூரைச் சேர்ந்த 16 வயது நந்தினி காதலித்தவனாலேயே மிகக்கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இப்படி தமிழகம் மட்டுமின்றி நாடெங்கிலும் ஒரே பாணியிலான சம்பவங்கள் தொடர் சங்கிலியைப் போல் அரங்கேறி வருகின்றன. பாலியல் தொடர்பான சம்பவங்கள் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாதரப்பிலும் நீக்கமற நடந்து கொண்டு வருகின்றன்.

சில வருடங்களுக்கு முன் நிர்பயாவுக்கு பாலியல் கொடுமை நடந்த போது ஒட்டுமொத்த நாடே தன் குரலை உயர்த்தியது. நிர்பயாவை தொடர்ந்து அடுக்கடுக்காய் நடந்த அதே போன்ற பல சம்பவங்களுக்கும் ஆங்காங்கே குரல் கொடுத்தோம். குரல்கள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கிறதே தவிர இங்கே குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. சரி சினிமா என்ன செய்துவிடும் என்கிறீர்களா?!
பெண்ணின் உடலை ஆண்களுக்கான போதைப் பொருளாகவே காட்டி வருவதையும், சர்வ சாதாரணமாக பெண்களை கேலிப் பொருளாக்கி கிண்டல் செய்வதையும் திரைத்துறையினர் எப்போது நிறுத்திக் கொள்ளப் போகிறார்கள்?


’வாடி என் கப்பக்கிழங்கே’ , ’அடிடா அவளை வெட்றா அவளை’ என பெண்களை கேலிக்கும் வன்முறைக்கும் ஆளாக்கும் பாடல் வரிகளை கையாள்வது முதற்கொண்டு , பெண்ணை திரையில் கேலி செய்யும் காட்சிகள் , துரத்திச் சென்று வன்புணர்பு செய்யும் காட்சிகளை விளாவாரியாக பூதாகரப்படுத்தும் காட்சிகளும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குற்றங்களுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
ஆணுக்குப் பெண் சமம் என்று சொல்கிறோம். ஆனால் திரையில் ஹீரோக்களுக்கு நிகராக தான் ஹீரோயின்களும் நடத்தப்படுகிறார்களா? ஒரு சில படங்கள் விதிவிலக்காக ஹீரோயினிசம் பேசினாலும், காட்சிகள், வரிகள் , கதை அம்சம் என பலவும் ஆண்களின் பலத்தையும், பெண்களின் பலவீனங்களையுமே பட்டியல் போடுவதாய் அமைந்து வருகின்றன.

ஒரு அடியை யாரோ ஒருவர் எடுத்து வைத்ததால் தான் ‘ஜல்லிக்கட்டுப் புரட்சி; விஸ்பரூபம் எடுத்தது. பிரித்விராஜின் இந்த நல்ல துவக்கத்தை மற்ற திரைப்படைப்பாளிகளுக்கும் தொடங்க முயன்றால் மாற்றம் என்பது உடனே நடக்காவிட்டாலும் அதன் பலனை கொஞ்சமாவது நாம் அறுவடை செய்ய முடியும்.
அன்பான நடிகர்களே..இயக்குநர்களே! கொஞ்சம் பெண்களின் பக்கம் இருந்து யோசிப்போமா?!

-பொன்.விமலா