Published:Updated:

சென்சார் போர்டுக்கும் பாலிவுட்டுக்கும் என்னதான் பிரச்னை? #LipstickUnderMyBurkha

சென்சார் போர்டுக்கும் பாலிவுட்டுக்கும் என்னதான் பிரச்னை? #LipstickUnderMyBurkha
சென்சார் போர்டுக்கும் பாலிவுட்டுக்கும் என்னதான் பிரச்னை? #LipstickUnderMyBurkha

 சென்சார் போர்டுக்கும், இந்தி சினிமாவுக்கும் என்ன தகராறு என்று தெரியவில்லை. அடிக்கடி எதாவது படத்துக்கு சென்சார் சிவப்பு கொடி காட்டுவதும், திரைத்துறை கருப்புக்கொடியைக் கையில் எடுத்துக் கொண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் வழக்கம் ஆகிவிட்டது. கடைசியாகப் பாதிக்கப்பட்டது ‘உட்தா பஞ்சாப்.’ இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கும் படம்  'லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா'. அலங்க்ரிதா ஸ்ரீவஸ்தவா என்பவர் இயக்கிய இந்தப் படம் 4 பெண்களைப் பற்றிய படம்.

இந்தப் படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டு அதிகாரிகள்  "இந்தப் படத்தின் கதை பெண்கள் சார்ந்து உள்ளது, வாழ்க்கையை மீறிய அவர்களது கற்பனையை பற்றி இப்படம் பேசுகிறது. மேலும் தவறான வார்த்தைகளைக் கொண்ட, ‘Audio Pornography'    இருக்கிறது. இவை மட்டுமல்லாமல் சமூகத்தின் ஒரு பகுதியினரை பற்றிய முக்கிய விஷயத்தைப் பற்றி படம் பேசுகிறது" என காரணமும் சொன்னது. இதனால் ஏற்கெனவே சமுகவலைத்தளங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், பாலிவுட் திரையுலகம் சென்சார் போர்டிடம்  பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது;  

1. மற்ற காரணங்களை விடுங்கள், இந்த கதை பெண்கள் சார்ந்தது என்பது ஒரு திரைப்படத்தை மறுக்கும் அளவுக்கு பெரிய காரணமா? அப்படியென்றால் எப்படிபட்ட ஆணாதிக்க சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

2. பெண்கள் தங்கள் வாழ்க்கையை மீறிக் கற்பனைகூட செய்யக்கூடாது என்பதுதான், முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் உங்கள் கருத்தா?

3. அதுவே உங்கள் நிலைபாடென்றால், ஹிந்தி சினிமாவில் செக்ஸ் காமெடி படங்கள் என சொல்லி வெளியாகும் கிராண்ட் மஸ்தி, மஸ்திஜாதே, க்யா கூல் ஹை ஹம் போன்ற படங்களில் பெண்களை பொருட்களாக உருவகப்படுத்தி எல்லைமீறும் ஆணின் கற்பனையை சென்சார் தடைசெய்யாதது ஏன்? ஏன் பாகுபாடு?

4. அரசியல் பேசக்கூடாது என சொல்லிக்கொண்டிருந்த நீங்கள் அடுத்து பெண்ணியமும் பேசக்கூடாது என்று சொன்னால் எந்த மாதிரி படங்கள் வரவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

5. கதையின் கருவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சென்சார்,  இளைஞர்களை தவறான பொறுப்பற்ற வழியில் வழிநடத்தும் படங்களை ஏன் தடைசெய்வதில்லை? பாலியல் சார்ந்த அனைத்தும் தவறு; அதுவும் பெண்கள் சமந்தப்பட்டது மிகவும் தவறு என்ற சின்ன வட்டதுக்குள்ளா சென்சார் இன்னும் இயங்குகிறது.?

படத்தின் இயக்குநர்  கூறுகையில் "ஆணாதிக்க சமுதாயத்தின் முன் கேள்வி கேக்கும் வலிமையான பெண்ணின் குரலை ஏற்கமுடியாததாலேயே சான்றிதழ் தர மறுக்கிறது” என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் பிரவீன் ஜா "ஒரு ஜனநாயக நாடாக, கருத்து சுதந்திரத்தை நாம் ஆதரிக்கவேண்டும், அதை விட்டுவிட்டு சவுகரியமற்ற கதைகளை சென்சார் கேட்க மறுத்தால் இளம் படைப்பாளிகள் புதியகதைகளை சொல்ல நிச்சயம் தயங்கவே செய்வர்" என்று கூறியுள்ளார்.

இப்படம் பாலின சமத்துவத்திற்காக  மும்பை திரைப்படத் திருவிழாவில் விருது வென்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி டோக்கியோ திரைத்திருவிழாவில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டும் சென்சார் சான்றிதழ் மறுக்கப்படுவது சென்சார் போர்டின் குறுகிய குணத்தையே காட்டுகிறது. பெருகி வரும் பெண்கள் பிரச்சனைகளுக்கு நடுவில் இப்படிப் பெண்களுக்கான குரலும் சென்சார் மூலம்கூட முடக்கப்படுவது சற்றும் சரியல்ல என்பதே மக்களின் குரலாக வலைகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இனிமேலாவது மேல் முறையீடு இன்றி நல்ல முடிவுகளை சென்சார் எடுக்கட்டும்.

’லிப்ஸ்டிக் - புர்கா’ என்ற வார்த்தைகள் ஒரே வரியில் வருவதே தவறு என்று கொதிக்கிறார்கள் சிலர். “அப்ப பெண்களுக்கு என்று எந்த உரிமையும் கிடையாதா? புர்கா என்று வருவதுதான் பிரச்னையா? அப்படியென்றால் அந்த இடத்தில் சால்வார் என்று வந்தால் ஓகேவா? அப்படியானால் உங்களுக்கு அந்த மத அடையாளம்தான் பிரச்னை.. பெண்களைப் பற்றி கவலை இல்லையா?” என்று பெண்களின் சார்பாக வழக்கறிஞர் த்ரிஷா ஷெட்டி உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆண் அதிகாரிகளால், ‘இந்தப் படம் பெண்கள் சார்ந்து உள்ளது, வாழ்க்கையை மீறிய அவர்களது கற்பனையை பற்றி இப்படம் பேசுகிறது’ என்று சான்றிதழ் மறுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கிய அலங்க்ரிதா ஸ்ரீவஸ்தவா ஒரு பெண்.

டிரெய்லருக்கு:-     

-ம.காசி விஸ்வநாதன்.

மாணவப் பத்திரிகையாளர்