Published:Updated:

ஆஸ்கரை மிஸ் செய்த 'முத்துராமலிங்கம்' - படம் எப்படி?

ஆஸ்கரை மிஸ் செய்த 'முத்துராமலிங்கம்' - படம் எப்படி?
ஆஸ்கரை மிஸ் செய்த 'முத்துராமலிங்கம்' - படம் எப்படி?

சூப்பர் ஹீரோ, ஸ்போர்ட்ஸ், சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஹாரர், ரொமான்டிக், காமெடி, வில்லேஜ், ஆக்‌ஷன் டிராமாவின் கலவையாக இருக்கிறது ‘முத்துராமலிங்கம்’. அத்தனை ஜானர்களிலும் ‘ஆஸ்கர்’ விருதைத் தட்டிச் செல்லும் தகுதி(!) உள்ள படம். அப்படி இருந்தும் ‘ஆஸ்கர்’ பரிந்துரைப் பட்டியலில் சிக்காமல் தப்பியது எப்படி என்ற கேள்வி எழாமல் இல்லை. சரி... படம் எப்படி இருக்கிறது?

20 வருடங்களுக்கு முன்பு நடந்த 'கத்தி சிலம்பம்' போட்டியில் காது அறுபட்ட ஒருவன், அறுத்தவனைப் பழிவாங்க அவன் குடும்பத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறான். அது 20 வருடங்களுக்குப் பிறகு ஆலமரமாய் வளர்ந்து அதன் விழுதால் அறுத்தவன் சங்கை நெறிக்க, அவன் என்ன செய்தான் என்பதே 'முத்துராமலிங்கம்' படத்தின் கதை. 

குங்குமப் பொட்டு, முறுக்கு மீசை, மடித்துகட்டிய வேட்டி எனச் சிலம்பம் மாஸ்டர் லுக்கிற்கு பக்காவாக செட் ஆகியிருக்கிறார் கௌதம் கார்த்திக். ஆனால், பேச்சு வழக்குதான் திருநெல்வேலி, மதுரை வழியாக தாராவி வரை போய்வருகிறது. சில வசனங்களை ‘அரே நிம்பல் இப்ப வசூலுக்குப் போறான்' என்கிற டோனில் பேசித் திகிலூட்டுகிறார். நெப்போலியனுக்கு இது ‘கம்பேக்' படம். இவரும் ஒரு சிலம்பம் மாஸ்டர் என்பதைக் காட்ட எல்லாக் காட்சியிலும் சிலம்பத்துடனே காட்சியளிக்கிறார். அதற்காக, காரில் ஏறினாலும் ‘கிளாடியேட்டர்’ ஹீரோ மாதிரி கையில் சிலம்பத்தைத் தூக்கி பிடிச்சுட்டு டிராவல் பண்றதெல்லாம் ஓவர் பாஸ்.

நிறையக் கிராமத்து கதாபாத்திரங்களிலேயே நடித்துவரும் விஜி சந்திரசேகர், ‘இந்த கேரக்டரில் கொஞ்சமாவது வித்தியாசம் காட்டலாம்' என முடிந்தளவு முயற்சித்திருக்கிறார். வில்லன் ஃபெப்சி விஜயன் இன்னொரு சிலம்பம் மாஸ்டர். அவ்வளவே. அவருக்கும் அந்த கண்டெயினர் லாரிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பது மட்டும் கடைசிவரை புலப்படவேயில்லை. ப்ரியா ஆனந்த் திகட்டத் திகட்ட க்ளாமராக வருகிறார். ஒரு பாடல் காட்சியில் தயாரிப்பு தரப்பிலேயே 'டைல்ஸ் ப்ளர்' போட்டு மறைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன். சிங்கம்புலியின் தூக்குச்சட்டி காமெடி குபீர் சிரிப்பு ரகம். விவேக்கும், செல் முருகனும் செய்தது காமெடி எனக் கீழே ‘ஸ்க்ரோலிங்’ போட்டிருக்கலாம்.

எல்லாம் நல்லபடியாய் போய்க்கொண்டிருக்க, நெப்போலியன் பேச்சை மீறி திருநெல்வேலியில் நடக்கும் ஒரு சிலம்பம் போட்டிக்கு டெம்போ வேன் பிடித்துக் கிளம்புகிறார் கௌதம் கார்த்திக். போகும் வழியிலேயே பெப்ஸி விஜயன் ஆட்கள் வந்து பிரச்னை செய்ய, அவர்களில் ஒரு பத்து - பதினைந்து பேருக்கு உடம்பில் பூரான் விடுகிறார் கௌதம் கார்த்திக். அவரைக் கைது செய்ய கௌதம் வீட்டுக்கு வரும் போலீஸ், அவர் வீட்டில் இல்லாததால் நெப்போலியனின் மீசையைப் பிடித்து ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்கிறார்கள். அந்நேரம் திடீரென புதருக்குள் இருந்து பறந்துவரும் கௌதம் கார்த்திக், மீசையில் கைவைத்த போலீஸின் கையைத் துண்டாக வெட்டிவிடுகிறார். பிறகு, அந்தக் கையை ஒற்றைப் புளியமரத்தில் தொங்கவிடுகிறார்கள். இருந்தாலும் ‘அள்ளு’  எடுத்து ஒட்டுமொத்த ஊருமே போலீஸுக்கு பயந்து இரண்டு குழுவாகப் பிரிந்து காட்டுக்குள் பம்மிவிடுகிறது. பிறகு, காவல்துறை என்ன செய்கிறது? கௌதம் கார்த்திக்குக்கு தண்டனை கிடைத்ததா என்பதே மீதிக்கதை. அந்தக் கதை முடிந்ததும். இன்னொரு கதை தொடங்கும். அதனால் அவசரப்பட்டு முன்னாடியே கிளம்பிவிடாதீர்கள்.

ஹீரோவோட தங்கச்சி மேல் ஒருத்தன் பேப்பர் ராக்கெட் விட்டால் தமிழ் சினிமாவில் வழக்கமா என்ன நடக்கும்? கெளதம் கார்த்திக் தங்கை மேல் ஒருத்தர் பேப்பர் ராக்கெட் விட்டுக் கிண்டல் செய்கிறார். உடனே அருவாளோடு குடும்பமே அவரை விரட்டி ஓடுகிறார்கள். அவர் எஸ்கேப் ஆகிவிட 500 ரூபாய்க்கு அரைக்குயர் நோட்டு வாங்கி வந்து குடும்பத்தோடு அவர் வீட்டின் மீது பேப்பர் ராக்கெட் செய்து கொலை வெறியைத் தீர்த்துக்கொள்கிறார்கள்.

ஹீரோ கெளதம் கார்த்திக் சிறுவயதில் இருந்து நெப்போலியன் தலையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் முட்டி முட்டி தலையை வலுப்படுத்தி வைத்திருக்கிறார். முரட்டுக் கிடாயை ஒரே முட்டில் கொன்று விடுகிறார். இன்னொரு பக்கம், ப்ரியா ஆனந்த் குப்புறப் படுத்துக்கொண்டு திருப்பிப் போட்டால் பத்து ரூபாய் கேம் விளையாடிக்கொண்டிருகிறார். போலீஸுக்குப் பயந்து எஸ்கேப்பான நெப்போலியன், அதற்குப்பின் எப்போதுமே 'நைட் மோடிலேயே' வாழ்கிறார். பெப்ஸி விஜயன் எப்போது பார்த்தாலும் கன்டெய்னர் லாரிகளுக்கு நடுவிலேயே பட்டறையைப் போட்டு உட்கார்ந்திருக்கிறார் எனப் படம் முழுக்க படுபயங்கரமான காட்சிகள் ஏராளம். அதேபோல், படத்தில் நடக்கும் எல்லா ஜலபுலஜங் காட்சிகளும் சிறுவர்கள் முன்னாடியே நடக்கிறது. இரண்டு வக்கீல்களைத் தவிர, யாருமே ரூல்ஸை மதிக்கிறது இல்ல.( போலீஸ் முதற்கொண்டு). 

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு சில இடங்களில் அட போட வைக்கிறது. படத்துக்கு இசை இளையராஜா என்றார்கள், ஆனால் கேட்கும்போதோ 'ஆன்மிக திருவுரு. ஃபார்மட் நியூமராலஜி தந்தை டாக்டர். மஹாதன் ஷேகர் ராஜா'  இசையமைத்தது போல் இருக்கிறது. சிங்கம்புலி ஒரு தூக்கு சட்டியைத் திருடிவிடுவார். திறந்து பார்த்தால் உள்ளே ஒரு தலை இருக்கும். பாதி படம் வரை அதை என்ன செய்வது எனத் தெரியாமல் சுற்றிக்கொண்டிருப்பார். மல்டி ப்ளக்ஸில் காஸ்ட்லி பைக் பார்க்கிங், டிக்கெட், ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி உள்ளே நுழைந்த நாமும் சிங்கம்புலி நிலைமையில்தான் இருப்போம்.