Published:Updated:

காணாமல் போன கனவுக் கண்ணன்கள்! #UnSungHeroes

காணாமல் போன கனவுக் கண்ணன்கள்! #UnSungHeroes
காணாமல் போன கனவுக் கண்ணன்கள்! #UnSungHeroes

காலம்தான் எத்தனை வினோதமான கண்ணாடி! திரும்பிப் பார்ப்பதற்குள் அதன் ரசம் தேய்ந்து தோற்றங்களை மாற்றிக் காட்டி விடுகிறது.  தமிழ் சினிமாவின் UnSung Heros இவர்கள்! ஒருகாலத்தில் ஹிட் படங்களில் நடித்ததோடு பலரின் கனவுக் கண்ணன்களாகவும் திகழ்ந்தவர்கள்  இவர்கள்..! இன்றைய ஜென் -Z தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முன்னாள் ஹீரோக்கள் இவர்கள்...

காணாமல் போன கனவுக் கண்ணன்கள்! #UnSungHeroes

மோகன் :

காணாமல் போன கனவுக் கண்ணன்கள்! #UnSungHeroes

'மைக்' மோகன் என்றால்தான் பலருக்கு இவரைத் தெரியும். தென்னிந்திய மொழிகளில் 70, 80-களில் பிஸியாகக் கோலோச்சிய நடிகர். 'ஏழைத் தயாரிப்பாளர்களின் கமல்' என வர்ணிக்கப்பட்டவர். `வெள்ளிவிழா நாயகன்' என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு. இளையராஜா இசையில் இவர் நடித்த படங்கள் எல்லாமே பாடல்களுக்காகவே பல வாரங்கள் ஓடியவை. மோகனும் நான்கு பாட்டும் இருந்தால் அந்தப்படம் பேய்த்தனமான ஹிட்தான்!  பாலுமகேந்திராவால் ஃபீல்டுக்கு வந்த இவர் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் ஹீரோ கேரியரை அழகாக  ஆரம்பித்தார். 

மணிரத்னம் போன்ற ஹிட் இயக்குநர்களின் படங்களில் நடித்தவர். `ரோஜா' படத்தில் மணிரத்னம் ஆரம்பத்தில் இவரை வைத்து இயக்கும் யோசனையில் இருந்தாராம். அந்த அளவுக்கு பெயர்வாங்கிய மோகன், 90களுக்குப் பிறகு காணாமல் போனார். 'உருவம்' என்ற பேய்ப்படத்தில் நடித்தபோது அதில் ஒரிஜினல் வாய்ஸில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 75 படங்களுக்கு எஸ்.என்.சுரேந்தர் என்பவர்தான் மோகனுக்குக் குரல் கொடுத்தார். இப்போது சீரியல் தயாரிப்புகளில் பிஸியாகி விட்டார்.  80களின் ஹீரோ-ஹீரோயின்கள் `கெட் டுகெதர்'-ல் யூத்தாக வலம் வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். 

முரளி : 

காணாமல் போன கனவுக் கண்ணன்கள்! #UnSungHeroes

இந்த லிஸ்ட்டில் முக்கியமானவர். பிறப்பால் கன்னடத்தவராக இருந்தாலும் நிறத்தாலும் நடிப்பாலும் தமிழர்களின் மனசுக்கு மிக நெருக்கமானவர். கன்னட இயக்குநர் சித்தலிங்கய்யாவின் மகனான முரளி முதலில் கன்னட சினிமாவில்தான் நுழைந்தார். `பூவிலங்கு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் அப்படியே `பச்சக்'கென தமிழ் சினிமாவோடு ஒட்டிக் கொண்டார். 'ஆத்தாடி பாவாட காத்தாட' பாடலை மறக்க முடியுமா? மணிரத்னத்தின் முதல் தமிழ்ப் படமான `பகல் நிலவு' படத்தின்  ஹீரோ நம் முரளி தான்! சாஃப்ட் ஹீரோ... கோபம் வந்தால் பொங்கி எதிரிகளைப் பொங்கல் வைக்கும் கோபக்கார யூத் என ஒரே படத்தில் வெரைட்டி நடிப்பில் மனசை அள்ளியவர். 

கல்லூரி மாணவனாக ரொம்ப நாட்கள் காலேஜ் கேம்பஸுக்குள்ளேயே  சுற்றித் திரிந்த ஒரே ஹீரோ இவர் தான்! (காமெடியன்களில்  சார்லி, சின்னி ஜெயந்த்!) பேசாமலேயே காதலித்த `இதயம்', நட்பைப் பற்றி அழுத்தமாகப் பேசிய 'புது வசந்தம்' என மல்ட்டி டைமன்ஷனில் ஸ்கோர் செய்தவர். டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் ஈகோ பார்க்காமல் பலரோடு கரம் கோர்த்து நடித்தவர் நம் கருப்பு வைரம் முரளி.  'கடவுள் முரளி வாழ்க' என்று கரித்துண்டால் தமிழ்நாட்டின் சுவர்களை அலங்கரிக்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டவர். இத்தனை சிறப்புகள் கொண்ட இவரின் குரலை சினிமாவின் மூலம் மட்டும் தான் நாம் கேட்க முடியும். மிமிக்ரி கலைஞர்கள்  பலமுறை முயன்றும் இவர் வாய்ஸை இமிட்டேட் செய்ய முடியவில்லை. 'இயல்பிலேயே எனக்கு சுவாசக்கோளாறு உண்டு. பேசும்போது வாய் மற்றும் நாசி வழியாக மூச்சுவிட்டுக் கொண்டே பேசுவேன். அதனால் என் வாய்ஸை அவ்வளவு சீக்கிரம் பேச முடியாது!' என்று சொன்னவர். 46 வயதிலேயே ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனது சோகம்! 

ராஜீவ் : 

காணாமல் போன கனவுக் கண்ணன்கள்! #UnSungHeroes

நீங்கள் பல படங்களில் இவரை வில்லனாகப் பார்த்திருக்கலாம். பெரும்பாலும் மெயின் வில்லனாக அல்லது இரண்டாவது வில்லனாக நடித்திருப்பார். பெண்களை வலுக்கட்டாயமாக அடைய நினைக்கும் கொடூரமான ரோல்களில் பலமுறை பார்த்து இவரைக் கண்டாலே எரிச்சல் ஆனவர்கள் அதிகம். ஆனால், நிஜத்தில் செம சாஃப்ட்டான ஆள் இவர். மதுரையில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்து சிறு வயதில் பெற்றோர்களை இழந்து, ஹோட்டலில் வெயிட்டராக வேலை பார்த்து... என வாழ்க்கையில் கஷ்டமான சூழல்கள் பலவற்றைக் கடந்து ஹீரோ ஆனவர். மிகவும் போராடி தன் பள்ளிக் கால நண்பரான தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மூலம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாய் நுழைந்தவர். டி.ஆரின் `ஒரு தலை ராகம்' படத்தில் ஹீரோவுக்கு டப்பிங் கொடுத்தது இவர்தான். 'முள் இல்லாத ரோஜா' என்ற படத்தில் ஹீரோவாக, 'ரயில் பயணங்களில்...' படத்தின் மூலம் வில்லனாக என வெரைட்டியாக தன் பயணத்தை ஆரம்பித்து  500க்கும் மேலான தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். 

'சிறைச்சாலை' படத்தில் மோகன்லாலுக்கு குரல் கொடுத்திருப்பதும், `பாரதி' படத்தில் சாயாஜி ஷிண்டேவுக்குக் குரல் கொடுத்திருப்பதும் இதில் மிக முக்கியமானது. இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது அவரது ஹேர்ஸ்டைல். `பாலைவனச் சோலை' படத்துக்குப் பின் முடி கொட்டி விடப் பிறகு விக் வைத்துக் கொண்டார்.  அந்தக் காலத்திலேயே சத்யராஜுக்கு முன்பே செமத்தியாக `விக்' செட் ஆன ஹீரோ இவர்தான். மலையாளப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோது, இவரது ஹேர் ஸ்டைலிஸ்ட்(?) மட்டும்  விக்கோடு விமானத்தில் பறந்து வந்து விக்கை மாட்டிச் சென்ற வினோதமான வரலாறு இவருக்கு  உண்டு! 

 சந்திரசேகர் : 

காணாமல் போன கனவுக் கண்ணன்கள்! #UnSungHeroes

'வாகை' சந்திரசேகர் என இன்று தி.மு.க எம்.எல்.ஏ-வாக அரசியலில் இருக்கும் இவர்  80-களில் மிகை நடிப்பிற்குப் பெயர்போன முக்கியமானவர்.  `நிழல்கள்' படத்தில் இளையராஜாவைப் பிரதிபலித்த அற்புதமான நடிகர். மேடை நாடகங்களில் கலக்கிவிட்டு அப்படியே கால் அலம்பாமல் சினிமாவுக்குள் வந்தவர் என்பதால் நாடகத்தன்மை தூக்கலாக இருக்கும் இவர் நடிப்பில். 'சிவப்பு மல்லி', 'சிவப்பு நிலா', 'சிவப்பு கிளி' என கண்கள் சிவக்க சிவக்க இவர் நடித்த படங்கள் அனைத்தும் அப்போது ஹிட்ஸ். 80-களில் இவருக்கென ரசிகர்கள் எல்லாம் இருந்தார்களாம். ஒல்லியான தேகம், ஒழுங்காக ஷேவ் செய்யாத தாடி எனப் பார்க்கவே பரிதாபமான தோற்றத்தில் அப்போது இவர் இருந்தாலும் அதுதான் அப்போதைய ட்ரெண்ட்.  'சந்திரசேகர் மாதிரி தாடி வெச்சிருந்தா டபுள் ஓ.கே' எனச் சிலபெண்களின் ட்ரீம் பாயாக இருந்ததெல்லாம் தகராறான வரலாறு. 

50க்கும் மேலான லோ-பட்ஜெட் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இன்னமும்கூட இன்றைய விஜய் சேதுபதியின் நடிப்பையும் வளர்ச்சியையும் இவரோடு ஒப்பிடுவார்கள் சிலர். `இதெல்லாம் அன்னிக்கே சந்திரசேகர் செஞ்சுட்டாரு தெரியுமா?' என்று சொல்லி அதிர்ச்சியில் உறைய வைக்கும் உள்ளங்களும் உண்டு!  ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்ததால் அடிக்கடி அர்ஜூனே இவரைக் கூப்பிட்டு, `உடம்பைக் கொஞ்சம் கவனிங்கண்ணே!' என்பாராம். ஒரு கட்டத்தில் ஆளை ஜிம்முக்கு அனுப்பி தட்டி செதுக்கி தான் இயக்கி நடித்த 'ஜெய்ஹிந்த்' படத்தில் ரணகளமான ரோலில் நடிக்க வைத்தார். 'எதிரியின் நிழலை வைத்தே அவங்க குணத்தைச் சொல்வேன்!' என முறைப்பு காட்டி அவர் பேசிய டயலாக்கை இப்போது பார்த்தால் சிரிப்பு வருவது ஏன் என்பது மட்டும்தான் விளங்கவில்லை. 

சுதாகர் :

காணாமல் போன கனவுக் கண்ணன்கள்! #UnSungHeroes

'கிழக்கே போகும் ரயில்' படத்தில் நடித்த சுதாகரே தான்! தெலுங்குப் படத்தில் பிஸியான நடிகராக... ரொமான்டிக் ஹீரோவாக பல படங்களில் நடித்தவரை நம் பாரதி ராஜாவும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அழைத்து வந்து ஹிட் படங்களில் நடிக்க வைத்தார். பாரதிராஜாவின் புண்ணியத்தில் `கிழக்கே போகும் ரயில்' செம ஹிட்டாக, அதன் பிறகு 11 படங்களில் ராதிகாவும் இவரும் ஜோடி போட்டு நடித்தார்கள். மெல்ல மெல்ல உடல்வாகு மாறிவிடவும் தன் வாய்ஸ் மாடுலேஷன் டேலன்ட்டை வைத்து 80-களின் இறுதியில்  காமெடியனாக மாறிப்போனார். 

அப்படியே 'யமுடுக்கி மொகுடு' என்ற தெலுங்குப் படத்தில் தயாரிப்பாளர்  அவதாரம் எடுத்தார். அதே படத்தை தமிழில் ரஜினியை வைத்து ரீமேக் செய்து `அதிசயப்பிறவி'யாகத் தந்தபோது, அந்தப் படத்தில் காமெடி வில்லனாக நடித்திருந்தார். `அப்பா என்னை அடிக்கிறான்பா!' என ஸ்கூல் பையன் போல இவர் அழுது நடித்ததைப் பார்த்தால் பாவமாகவே இருக்கும். நான்கைந்து வருடத்திற்குள் உச்சத்தில் இருந்து தரை லோக்கலில் இறங்கி காமெடி ரோல் செய்து கடைசியில் ஃபீல்டை விட்டே காணாமல் போனார் ஹீரோ சுதாகர். ஆனாலும், இன்றும் கே டி.வி-யில் `கிழக்கே போகும் ரயில்', 'நிறம் மாறாத பூக்கள்', சுவரில்லாத சித்திரங்கள்' போன்ற படங்களைப்  பார்த்தால் ஒரு நிமிடம் வாழ்க்கை குறித்த பயம் கண் முன் வந்து போகும்..!


- ஆர்.சரண்