Published:Updated:

‘அனுஷ்காவால வெயிட் குறைக்க முடியலை. ஸோ...!?’ - ‘பாகுபலி- 2’ ரகசியம் பகிரும் ராஜமெளலி

‘அனுஷ்காவால வெயிட் குறைக்க முடியலை. ஸோ...!?’ -  ‘பாகுபலி- 2’ ரகசியம் பகிரும் ராஜமெளலி
‘அனுஷ்காவால வெயிட் குறைக்க முடியலை. ஸோ...!?’ - ‘பாகுபலி- 2’ ரகசியம் பகிரும் ராஜமெளலி

பாகுபலி, பிரபாஸ், அனுஷ்கா, ஃபைட் சீன்கள், மகிழ்மதி என பாகுபலியும் பாகுபலி சார்ந்தும் பல விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின் தமிழாக்கம் இதோ...

‘‘நாலு வருஷத்துக்கு முன்னால கருப்பா இருந்த முடி எல்லாம் இப்போ வெள்ளையாகிடுச்சு. எல்லா உழைப்பும் இந்த ஒரு படத்துக்காகத்தான்" என சிரித்தபடி பேசத் துவங்குகிறார் ராஜமௌலி. ‘‘ஃபர்ஸ்ட் பார்ட்ட ஸ்டாட்டர்ஸ்னு நினைச்சுக்கோங்க. செகண்ட் பார்ட் மீல்ஸ் மாதிரி இருக்கும். முதல் பார்ட்ல கேரக்டர்களை அறிமுகப்படுத்தினோம். அவங்க எப்பிடிப்பட்டவங்கனு சொன்னோம். ஆனா, கதைக்குள்ள முழுசா போகல. இவ்வளவு பலமான கதாபாத்திரங்களுடைய எமோஷன்ஸ் எப்பிடி இருக்கும்னு ரெண்டாவது பார்ட்ல பார்ப்பீங்க." 

"பாகுபலி 2-வுக்கும் வெறும் போஸ்டரா விடுறீங்க, படம் வர லேட்டாகும் ஓகே. டிரெய்லரயாவது கண்ல காமிக்கலாம்ல?"

"டிரெய்லர் வெளிய விடுறதில் சின்னப் பிரச்னை இருக்கு. டிரெய்லர் கட் பண்ணி ரெடியா இருக்கு. சி.ஜி ஷார்ட்ஸ் இன்னும் வரல. அது வந்ததும் தான் டி.ஐ பண்ணணும், அதுக்கு கொஞ்சம் நாள் தேவைப்படும். இப்போ நான் இந்த தேதில டிரெய்லர்னு சொன்னா ஸ்டுடியோகாரங்க அன்னிக்கிதான் சி.ஜி ஷார்ட்ஸ்சையே தருவாங்க. ஆனா உறுதியா மார்ச் 15-ம் தேதிக்குப் பிறகு டிரெய்லர் வரும்."

"பாகுபலி 2-வோட எண்ட் கார்ட் போட்ருவீங்களா? இல்லை பார்ட் 3 இருக்கா?"

"எந்தக் கதையை நான் சொல்ல ஆரம்பிச்சேனோ, அந்தக் கதை பாகுபலி 2-ல முடியுது. அதை மறுபடியும் ‘எக்ஸ்டர்ன்’ பண்ண முடியாது. ஆனா, கதாபாத்திரங்களுக்கு அந்த முடிவு இருக்காது. ஏன்னா... படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முன் பின் கதை இருக்கு. அதெல்லாம் நடிகர்கள்கிட்ட சொல்லித்தான் அவங்களுக்கு ஒரு ஃபீல் குடுத்தோம். இப்போ சிவகாமி கேரக்டர்னா, அவங்க அந்த இடத்துக்கு எப்படி வந்தாங்க, எப்படி ராஜ மாதா ஆனாங்கனு பின்னணி இருக்கு. சினிமாவுக்கு எழுதின கதையை விட இந்தக் கதாப்பாத்திரங்களுக்காக எங்கள நாங்களே கேள்வி கேட்டுகிட்டு எழுதின கதை ஏராளம். ஆனா, அதை சினிமாவா மாற்றி சொல்ல முடியாது. டிவி சீரிஸ், அனிமேஷன், கேம்ஸ், நாவல், கிராஃபிக் நாவல்னு வேறு வேறு வடிவங்கள்ல அதை சொல்லும் திட்டம் இருக்கு."

"சிவகாமி, கட்டப்பா, சிவுடு, பல்வாள் தேவன், பாகுபலி இந்த கதாபாத்திரங்கள்தானா, இன்னும் இருக்காங்களா?"

"மெயின் கேரக்டர்ஸ் இவங்கதான். இவங்கள வெச்சே இன்னும் பல கதைகள் சொல்லலாம். ஆனா, அதுக்கு எனக்கு ரெண்டரை மணி நேரம் போதாது."

"முதல் பாகத்தை விட அதிகம் கொடுக்கணும்னு இப்போ ஒரு ப்ரஷரை உணர்றீங்களா?"

"கண்டிப்பா இல்லை. ஏன்னா, முதல் பாகத்துல முழுசா கதையைச் சொல்லல. அப்போ கண்டிப்பா ரெண்டாவது பாகத்தில் முழுக்கதையையும் பார்க்க, ஆடியன்ஸ் தானா வந்திடுவாங்க. அதனால படத்துக்கான ஓப்பனிங் ஏற்கெனவே உருவாக்கியாச்சு."

"காலகேயர்கள் மாதிரி கதாபாத்திரங்கள் இதிலும் இருப்பாங்களா?"

"புதுசா எதுவும் இருக்காது. ஆனா, காலகேயர்களுக்கு ரெண்டாவது பாகத்திலும் சின்ன ரோல் இருக்கு."

"அந்த பாஷைய எப்படிப் பிடிச்சீங்க?"

"மதன் கார்க்கிதான் அதுக்குக் காரணம். சும்மா நாலு வார்த்தையை மட்டும் எழுதல. மொத்த காலகேய மொழியையே எழுதிக் கொடுத்தாரு."

"ஒவ்வொருத்தரும் எப்படி நடிக்கணும்னு நீங்களே நடிச்சு காமிப்பீங்களா?"

"அது ஆர்டிஸ்ட்டைப் பொறுத்து. பிரபாஸுக்கு அப்போ என்ன செய்யப் போறோம், முன்னாடி என்ன நடந்திருக்கு, இனி என்ன நடக்கப் போகுதுன்னு ‘பேஸ்மென்ட்’ மட்டும் சொல்லணும். அதை உள்வாங்கிட்டு அவரே நடிப்பார். இப்படி நடி, அப்படி நடின்னு சொல்றது சரி இல்லை. இதுவே ரம்யாகிருஷ்ணன் மேடமுக்கு எதுவுமே சொல்லத் தேவையில்லை. சும்மா வசனங்களை மட்டும் கொடுத்துட்டாப் போதும் பின்னிடுவாங்க. நாசர் சாருக்கு முன்னாடி சீனை மட்டும் சொன்னா போதும், அவரே கால்குலேட் செஞ்சு செமயா பண்ணிடுவார். ஸ்வீட்டிக்கு (அனுஷ்கா) ஒரு முறை நடிச்சு காமிச்சா, ‘நான் ட்ரை பண்றேன்’னு வருவாங்க. சின்னச் சின்ன ‘கரெக்‌ஷன்’ சொன்னா சரியா பண்ணிடுவாங்க. இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி."

"ஃபைட் சீக்வன்ஸ் பொறுத்தவரை, பாகுபலில ஒரு பென்ச் மார்க்’ செட் பண்ணிட்டீங்க. இப்போ அதை ரெண்டாவது பாகத்தில் எப்படி உடைக்கப் போறீங்க?"

"சிவடு எவ்வளவு பலமானவன்னு காட்டியாச்சு. பல்வாள் தேவன் எவ்வளோ பலமானவன்னு காட்டியாச்சு. ஆனா, இவங்க ரெண்டுபேரும் சண்டை போட்டா எப்படி இருக்கும்னு இன்னும் காட்டல. அதுதான் அந்த பென்ச்மார்க்கை உடைக்கும்னு நினைக்கிறேன்."

"தேவசேனா @ அனுஷ்கா, கேப்ல சில படங்கள் நடிச்சாங்க, அதுக்காக வெயிட்டெல்லாம் கூட்டினாங்க. அதனால இந்தப் படத்தில் அனுஷ்காவுடைய தோற்றத்தை மாத்துறதுக்காக சில டிஜிட்டல் வேலைகள்லாம் பண்றதா சொல்றாங்களே?"

"அனுஷ்காவுடைய நிறைய காட்சிகளை நாங்க முன்னாலயே ஷூட் பண்ணிட்டோம். இன்னும் கொஞ்ச காட்சிகள் தான் எடுக்க வேண்டி இருந்தது. ஆனா ஷூட் டைம் வர்றப்போ அவங்களால சட்டுனு வெயிட் குறைக்க முடியல. முடிஞ்ச அளவு குறைச்சிட்டாங்க. ஆனா, முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு இல்ல. அதனால சில காட்சிகள்ல ‘டிஜிட்டல் டச்’ பண்ணோம். ஆனா, அதனால படம் லேட்டாகிடுச்சுனு வர்ற செய்திகள் எல்லாம் புரளி."

"பாகுபலில ஒரு பாட்டுல நந்தி நந்தினு (தெலுங்குப் பதிப்பில்) வருமே... அது சிவன் முன்னால இருக்கும் நந்தியா? இல்ல, இந்த நந்தியா (ராஜமௌலியின் செல்லப் பெயர்)?"

"மகன் பிரபாஸுக்கு முதல்ல என்ன பெயர் வைக்கலாம்னு ஒரு டிஸ்கஷன் நடந்தது. சிவ லிங்கத்தை தூக்கிட்டுப் போறான்; இவனுக்கு நந்தினு பேர் வைக்கலாம்னு ஒரு பக்கம்; இல்ல, சிவடுவே நல்லா தான் இருக்கு; அதையே வைக்கலாம்னு ஒரு பக்கம் பேசிட்டிருந்தாங்க. என்னோட செல்லப்பெயர் நந்தியை பிரபாஸுக்கு வைக்க கூச்சமா இருந்ததால, சிவடுனு வெச்சிட்டோம். ஆனா, இந்த ‘டிஷ்கஷன்’ நடந்திட்டிருக்கும் போதே அந்த பாட்டை ‘கம்போஸ்’ பண்ணிட்டதால நந்தி இடம்பிடிச்சிடுச்சு.''

"உங்க இயக்கம் + உங்க அப்பா கதை காமினேஷன் இப்ப வரை வெற்றிக் கூட்டணி தொடருது, பாகுபலி 2-வில் என்ன மாதிரியான விஷயங்களை அப்பா சேர்த்திருக்கார்?"

"அப்பா எப்பவும் முழுக்கதை சொல்லமாட்டார். சில சம்பவங்களைத்தான் சொல்லுவார். சில கதாபாத்திரங்கள் சொல்வார். எவ்வளவு டீப்பா அது இருக்கும்னா... அந்த கதாபாத்திரங்கள் எல்லாம் மனசுல அலைஞ்சுட்டே இருக்கும். சினிமா பண்றதுக்கான மொத்த பலமும் அங்க இருந்துதான் எனக்கு கிடைக்கும்."

"கிட்டத்தட்ட உங்க ஃபேமிலி மொத்தமும் இந்தப் படத்தில்தான் வேலை செய்றீங்க. இந்த வேலைகள் வீட்லயும் தொடருமா?"

"வீட்டுக்கும் வேலைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காதுங்க. ரெண்டும் சேர்ந்தேதான் இருக்கும். செட்ல வீட்டைப் பத்தி பேசுவோம், வீட்ல செட் பத்தி பேசிட்டிருப்போம்."

"ஹீரோ பிரபாஸ் கூட பெரிய ட்ராவல் பண்ணிட்டீங்க, அவர் பற்றி?"

"நான்கு வருஷமா பிரபாஸ் இந்தப் படத்துக்காக உழைச்சிருக்கார். மற்ற நடிகர்கள் வேற படங்கள் பண்ணிட்டு வந்தாங்க. ஆனா, பிரபாஸ் மட்டும் முழுக்க இந்தப் படத்துக்காக தன்னை அர்ப்பணிச்சுட்டார். நிறைய முறை சொல்லிட்டே இருப்பேன். பிரபாஸ் மட்டும் இல்லனா, பாகுபலி நடந்திருக்காதுன்னு."

"ஆமா, அமராவதி டேம் கட்றதுக்கு நீங்க சிவில் இன்ஜினியரா வேலை செய்யறீங்கனு சொன்னாங்களே. அது என்ன விஷயம்?"

"நான் படிச்சது இன்டர்மீடியேட். நான் எப்படி சிவில் இன்ஜினியரா வேலை செய்வேன்? உண்மையிலயே அந்த அமராவதி மேட்டர் என்னென்னா, சந்திரபாபு சார் ஒரு முறை என்கிட்ட பேசினார். அணையை எப்படி கட்டிட்டிருக்காங்கன்னு விளக்கினார். ‘அணையோட முகப்பை அழகாக் கொண்டுவர்றதுக்கு ஏதாவது இன்புட்ஸ் கொடுங்க, இதுக்கு சம்பந்தப்பட்டவங்கள உங்கள வந்து பார்க்க சொல்றேன்’னு சொன்னார். அவங்களும் வந்தாங்க. ஒரு மணிநேரம் பேசியிருப்போம். அதில் நாப்பது நிமிஷம், எனக்கு இது பத்தி ஒன்னும் தெரியாதுங்கனு சொல்லி அவங்கள கன்வீனியன்ஸ் பண்ணேன். மகிழ்மதியை உருவாக்க என்ன தத்துவத்த ஃபாலோ பண்ணோம்னு சொன்னேன். மத்தபடி எதுவும் பண்ணல." 

"ராஜமௌலி தெலுங்கு சினிமாவுக்குள்ள தன்னை அடக்கிக்கப் போறாரா? இல்ல பாலிவுட், ஹாலிவுட் எல்லாம் போவாறா?"

"ஒரு கதைசொல்லியா, நம்மளுடைய கதைய நூறு பேர் கேட்கணும்; ஆயிரம் பேர் கேட்கணும்; லட்சம் பேர் கேட்கணும்; இன்னும் அதிகம்னுதான் ஆசை இருக்கும். பாகுபலிக்கு இருக்கும் ஒரு ப்ளஸ்... அது தெலுங்கு படம் மட்டும் கிடையாது. மொழி தடை இல்லாம ஒரு இந்திய சினிமாவாகிடுச்சு. என்னப் பொறுத்தவரை மொழி தடை இல்லாம, ஒரு சினிமா எடுக்கணும். அதை இந்தியா முழுக்க பார்க்கணும். அதையும் தாண்டி எங்கெங்க படத்தை சேர்க்க முடியுதோ அவ்வளோ தூரம் கொண்டு போகணும். அதுதான் என்னுடைய விருப்பம்."

"இத்தனை பெரிய பட்ஜெட்ல படம் பண்றீங்க, உங்க தயாரிப்பாளர்கள் என்ன சொல்றாங்க?"

"ஷோபு இப்பவும் சர்ப்ரைசிங் மோட்லதான் இருக்கார். சின்னாவுக்கு மட்டும் முகத்தில் கொஞ்சம் டென்ஷன் இருக்கு. ஆனா, ரெண்டு பேரும் இந்த டீமை அவ்வளவு நம்பறாங்க. இதை ஆரம்பிக்கும்போது நாம எதுக்காக இவ்வளவு செலவழிக்கப் போறோம், என்ன புராடெக்ட் வரப் போகுதுன்னு அவங்களுக்கு முன்னமே தெரியும். இதை எந்தெந்த விதத்தில் எல்லாம் சந்தைப்படுத்தலாம், ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படத்துக்கெல்லாம் என்னென்ன்ன பண்றாங்க, அதை ஏன் நம்மளால பண்ண முடியாதுன்னு யோசிச்சு, டிவி சீரிஸ், கேம்ஸ், காமிக்ஸ் எல்லாத்தையும் நாலு வருஷம் முன்னாலயே ஆரம்பிச்சிட்டாங்க. அப்படியான தயாரிப்பாளர்கள் கிடைக்கறது கஷ்டம். எனக்குக் கிடைச்சது அதிர்ஷ்டம்."

"பாகுபலி முடிச்சதும், மகாபாரதத்தை படமா எடுக்கப் போறதா சொல்றாங்களே?"

"அட அப்படி எல்லாம் இல்லங்க. மகாபாரதத்தை படமா எடுக்கணும்ங்கறது என்னுடைய ஆசை. எப்போ ஆரம்பிப்பீங்கனு கேட்டா அதுக்கு நிறைய டைம் ஆகும். அந்த அளவுக்கு இன்னும் நிறைய டெக்னாலஜி தேவைப்படும். அதையும் இந்தக் கதையையும் சேர்த்து ஸ்க்ரீன்ல எப்படி காட்டணும்னு ப்ளான் பண்ணனும். அதுக்கெல்லாம் இன்னும் பத்து வருட அனுபவம் தேவைப்படும். அதுக்குள்ள என்னென்ன டெக்னாலஜி  வரும்னு தெரியலை. இதை நான் பல முறை சொல்லிட்டேன். ஆனா, எல்லாரும் அதைத் தள்ளி வெச்சுட்டு, பாகுபலிக்கு பிறகு மகாபாரதம்னு ஃபிக்ஸ் ஆகிட்டாங்க."

"அப்போ பாகுபலிக்குப் பிறகு என்ன?"

"இன்னும் முடிவு பண்ணல. படம் ரிலீஸ் ஆனதும், ரெண்டு மூணு வாரங்கள் புரமோஷனுக்காக பயணிக்கணும். அதுக்குப் பிறகு எங்கேயாவது வெகேஷன் போயிடலாம்னு இருக்கோம்."

- பா.ஜான்ஸன்