Published:Updated:

‘க்ரூப் டான்ஸர்கள் பிரச்னைக்கு ‘யாதுமாகி நின்றாய்’ படத்தில் பதில் இருக்கு!’ - கலா மாஸ்டர்

‘க்ரூப் டான்ஸர்கள் பிரச்னைக்கு ‘யாதுமாகி நின்றாய்’ படத்தில் பதில் இருக்கு!’ - கலா மாஸ்டர்
‘க்ரூப் டான்ஸர்கள் பிரச்னைக்கு ‘யாதுமாகி நின்றாய்’ படத்தில் பதில் இருக்கு!’ - கலா மாஸ்டர்

பிரபுதேவாவுடன் ‘சார்ளி சாப்ளின்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். பிரபல நடன இயக்குநர்களான ரகுராம் - கிரிஜா தம்பதியின் மகள். சில படங்களில் நடிகை, பின்னர் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய இவர் தற்போது ‘யாதுமாகி நின்றாய்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் மற்றுமொரு பெண் இயக்குநர்.

கதை, திரைக்கதை எழுதி இயக்கியதோடு, தயாரித்து நடிக்கவும் செய்திருக்கிறார் காயத்ரி. ‘யாதுமாகி நின்றாய்’- முழுக்க முழுக்க நடனக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றிய படம். நடிகர்களில் தொடங்கி, தொழில் நுட்பக்கலைஞர்கள் வரையிலும் அனைவருமே புதுமுகங்களே.

‘யாதுமாகி நின்றாய்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடன இயக்குநர் கலா மாஸ்டர் கலந்துகொண்டு பேசினார். “பெண் நடனக் கலைஞர்கள் படும் கஷ்டத்தையும், அவர்களின் வாழ்க்கையையும் பற்றிய படம்தான் ‘யாதுமாகி நின்றாய்’. பெண்களுக்கான, பெண்கள் சார்ந்த படங்கள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. நிச்சயம் அதை இந்தப் படம் பூர்த்தி செய்யும். படத்தில் அனைவருமே புது முகங்கள்தான். காயத்ரி இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம். இருந்தாலும் படத்தின் ஷூட்டிங்கை 24 நாள்களில் முடித்திருக்கிறார். ‘மியூசிக்கல் டான்ஸ் மூவி’ என்று கூட சொல்லலாம்.  

குழந்தைகளைக் கடத்துவது, பணத்துக்காக கொலை செய்வது, பெண்களுக்கு நடக்கும் கொடூரம் என ஒவ்வொருநாளும் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் எல்லாமே அதிர்ச்சி அளிக்கின்றன. இந்தமாதிரி ஒவ்வொரு பெண்ணுக்கும் நிறைய தடங்கல்கள், சிக்கல்கள், பிரச்னைகள் வரும். அந்தப் பிரச்னைகளைக் கடந்து பெண்கள் எப்படி வெளிவர வேண்டும் என்பதை இந்தப் படம் சொல்லும். எங்களைப் போல ஆரம்பத்தில் க்ரூப் டான்ஸர்களாக இருக்கும் நடனக் கலைஞர்களுக்கு எந்த மாதிரியான பிரச்னைகள் வரும் என்பதை இந்தப் படம் உங்களுக்கு உணர்த்தும். எங்கள் குரு ரகுராம் மாஸ்டருடைய மகள், ஒரு படம் இயக்கியிருக்காங்க. ஆனால் அவர் இல்லை என்பதுதான் எங்கள் கவலை. எப்பொழுதுமே அவர் மேலே இருந்து ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார். 

இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், படம் பற்றிச் சில சுவாரஸ்யங்களைப் பகிர்ந்தார். “விஜய் இயக்கத்தில் உருவான ‘தலைவா’ படத்தில் அசோசியேட் இயக்குநரா வேலை பார்த்தேன். என் குருநாதர் விஜய்தான் இந்தப் படத்தை இயக்கவே காரணம். படம் ஆரம்பிக்கிறதுல இருந்து இப்போ வரைக்கும் நிறையவே சப்போர்ட் பண்ணிருக்கார். அவரிடம் நிறையவே கத்திக்கிட்டேன். எப்போதுமே அவர் படத்தில் கவர்ச்சி எதுவுமே இருக்காது. அவரோட திரைமொழியைத்தான் நானும் ஃபாலோ பண்றேன்.

பெண்கள் என்னைக்குமே பயப்படக்கூடாது, குறிப்பிட்ட வயதைத் தாண்டும்போது எந்த மாதிரி இருக்கணும்னு ஒரு விழிப்புணர்வோட படத்தை இயக்கியிருக்கேன். வேலைப் பார்க்கும் பெண்களைச் சுற்றி  இருக்குறவங்க எல்லோருமே நல்லவங்களா இருக்கமாட்டாங்க. சிலர் தப்பான கண்ணோட்டத்தோட அணுகுவாங்க. அதையெல்லாம் தாண்டி  பெண்கள் ஜெயிக்கிற மாதிரியான கதைதான் இது. முழு படத்தையும் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் இயக்கியிருக்கேன். சினிமாவில் இருக்கும் டான்ஸர்கள் வாழ்க்கையில் நான் பார்த்த விஷயங்களைத் தான் படமாக்கியிருக்கேன். ஒன்றரை மணி நேரத்தில் எல்லாருமே யோசிக்கிற மாதிரியான விஷயத்தை படமா சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் பெண்களையோ, ஆண்களையோ தவறா காட்டல. யதார்த்தத்தை அப்படியே படத்தில் உணரவச்சிருக்கேன். இந்தப்  படம் மக்களுக்குப் பிடிச்சா, அடுத்ததா பெரிய நடிகருடன் வேற மாதிரியான கதைக்களத்துடன் அடுத்தடுத்து படம் இயக்குவேன். ஒரு படம் வெளியாகுறது எவ்வளவு கஷ்டம்ங்கிறது எல்லோருக்குமே தெரியும். ‘யாதுமாகி நின்றாய்’ படம் முழுமையா முடிஞ்சு ரெடியாகிடுச்சு. படம் ரிலீஸ் பற்றித்தான் பேசிட்டு இருக்கோம். விரைவில் படத்தை ரிலீஸ் பண்ணிடுவோம்.” என்று முடித்தார் காயத்ரி ரகுராம்.

-முத்து பகவத்-