Published:Updated:

‘ஜென் - Z’ ப்ளே லிஸ்ட்டின் ஆல்டைம் ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா..! #20YearsOfYuvanism

‘ஜென் - Z’ ப்ளே லிஸ்ட்டின் ஆல்டைம் ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா..!  #20YearsOfYuvanism
‘ஜென் - Z’ ப்ளே லிஸ்ட்டின் ஆல்டைம் ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா..! #20YearsOfYuvanism

யுவன், இந்தப் பெயரை உச்சரிக்காத தமிழ்நாட்டு யுவன், யுவதிகளைக் காண்பது அரிது. அன்று 16 வயது சிறுவனாக சினிமாவுக்குள் நுழைந்தவர் இன்று இசைத்துறையில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். இதற்கு பின்னால் இருப்பது இருபது வருட உழைப்பு மட்டுமே...

20 வருடங்களுக்கு முன் :

‘அரவிந்தன்’ படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா, அந்த படத்தின் டிரெய்லருக்கு யுவனை இசையமைக்கக் கேட்டிருந்தார். அவரும் இசையமைத்துக் கொடுக்க, அது சிவாவுக்கு மிகவும் பிடித்துப்போனது.  ‘படத்துக்கும் பின்னனி இசை முதற்கொண்டு நீயே இசையமைத்துக்கொடு’ என கேட்டார்.  சிறுவன் யுவன், தன் பெற்றோர்களிடம் அனுமதி வாங்கிவிட்டு இசையமைக்க ஒப்புக்கொண்டார்.  1997 ஆம் ஆண்டு 28 பிப்ரவரி ‘அரவிந்தன்' படம் வெளியானது. ‘இளையராஜாவின் மகன் 16 வயதிலேயே இசையமைப்பாளர் ஆகிவிட்டார்’ என ஊர் முழுக்க பேச்சு. ஆனால், அதற்கு பின் அவர் இசையமைத்து வெளியான ‘வேலை’, ‘கல்யாண கலாட்டா’ படங்களின் பாடல்கள் மக்களை ஈர்க்கவில்லை. ‘இசை மோசம்’ என விமர்சனம் எழுதினர். ஆனாலும், அந்த பதின் வயதில் மனம் தளராமல் அடுத்ததாக அவர் கொடுத்த ஆல்பம்தான் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்'.  யுவனின் இசைப்பயணத்தில் மிகமுக்கியமான ஆல்பம் அது. எல்லா பாடல்களுமே மக்களுக்கு பிடித்துப்போனது.  இரவா பகலா, சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே பாடல்கள் ‘வாக்மேனில் ரிபீட் மோடில்’ ஒலித்தது. விமர்சகர்கள் ‘புதிய இசை..., வித்தியாசமான இசை’ எனப் புகழ்ந்தனர். தன் திறமையை நிரூபித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் ஒய்.எஸ்.ஆர்.

யு1 தான் இதில் நம்பர் ஒன் :

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்' திரைப்படம் யுவனின் மைல் ஸ்டோன். அந்தப் படத்தின் பின்னணி இசை பல தரப்பினராலும் பாராட்டப்பட, அதை மட்டுமே தனி சிடியாக வெளியிட்டனர். இந்தியாவில் பின்னணி இசை துண்டுகளை சிடியாக வெளியிட்டது அதுவே முதன்முறை. ‘ஹிப்ஹாப்' ஜானரை தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்ததும் யுவன்தான். ‘ ‘குறும்பு' படத்தில் வரும் ஆசை நூறு வகை பாட்டு மூலம் ‘ரீமிக்ஸ்’ கலாசாரத்தை முதன்முதலில் தமிழ்நாட்டில் துவக்கி வைத்ததும் அவரே தான்.

ஒரு கல் ஒரு கண்ணாடி :

மெலடி இசையானாலும், அதிரடி இசையானாலும் இரண்டிலும் இறங்கி அடிப்பதுதான் யுவனின் ஸ்டைல். அவரது மெலடி பாடல்கள் அனைத்தும் காதலர்களால் கொண்டாடப்படுபவை. ‘இரவா பகலா, சொல்லாமல் தொட்டுச் செல்லும், முன்பனியா, காதல் வளர்த்தேன், சாமி கிட்ட சொல்லிபுட்டேன், தாவணி போட்ட தீபாவளி, கண்னை விட்டு கண் இமைகள், போகாதே, ஒரு கல் ஒரு கண்ணாடி, பறவையே எங்கு செல்கிறாய், இறகைப் போலே, உன் பார்வை மேலே பட்டால்... என யுவனின் ‘ஆவ்ஸம்’ மெலடிகளின் லிஸ்ட் ரொம்பவே பெரியது. அதேபோல், தடதடக்கும் துள்ளல்  இசையிலும் புகுந்து விளையாடுவார்.  ஊரோரம் புளியமரம், மக்க கலங்குதப்பா என தாரை, தப்பட்டைகள் தெறிக்கும் அதே நேரத்தில் ‘எங்க ஏரியா உள்ள வராதே, எவன்டி உன்ன பெத்தான், பாய்ஸ் ஆர் பேக்' என வெஸ்டர்ன் ஸ்டைலிலும் ‘ட்ரம்ஸ்’ அதிரும். பருத்திவீரனுக்கும், பையாவுக்கும், தர்மதுரைக்கும், தீபாவளிக்கும், ஆரண்ய காண்டத்துக்கும், நந்தாவுக்கும் இசையமைத்தது ஒருவர் தான். அது யுவன் தான்.

பி.ஜி.எம் ராசா நான் :

‘தீனா' படத்தில் தான் யுவனின் பின்னணி இசை முதன்முதலில் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. ‘இசை தான் இந்த படத்தின் உயிர்' என பட்டியல் படத்துக்கு விமர்சனம் எழுதினர். திமிரு, வேல், பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என மாஸ் கமர்ஷியல் படங்களின் தீம் மியூசிக்கள் இன்றும் நம் நினைவில் தாளம் தப்பாமல் ஒலிக்கிறது. கற்றது தமிழ், ஆரண்யகாண்டம், 7ஜி ரெயின்போ காலனி படங்களின் காட்சிகளை விட பின்னணி இசை தான் நினைவுக்கு வேகமாய் எட்டுகிறது. அதுதான் யுவனின் மேஜிக். அது தான் யுவனை 'கிங் ஆஃப் பிஜிம்' என்ற இடத்தில் அமர்த்தியிருக்கிறது. பின்னணி இசையின் ராஜாவின் சமீபத்திய பரிசு ' கோபி பேட் தீம்'.

வசீகரிக்கும் குரல் :

யுவன் இசையமைக்கும் பாடல்களுக்கு இருக்கும் க்ரேஸை விட, அவர் பாடிய பாடல்களுக்கு  க்ரேஸ் அதிகம். ஒவ்வொரு ஆல்பம் வெளியாகும்போதும், அவற்றில் யுவன் பாடிய பாடல் எதுவென பார்த்து அதைத்தான் ‘ப்ளே’ செய்வோம். பட்டியல் படத்தில் கண்ணை விட்டு கண் இமைகள், தீபாவளி படத்தில் போகாதே, சென்னை - 28 படத்தில் வேர்ல்டு கப், பானா காத்தாடி படத்தில் தாக்குதே கண் தாக்குதே, சிவா மனசுல சக்தி படத்தில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என அவரின் ஆல்டைம் ஃபேவரைட் பாடல்கள் பல அவர் பாடியதே. அதேபோல், இளையராஜா இசையில் சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது, ஏ.ஆர்.ஆர் இசையில் ‘கடல் ராசா நான்',  ஜி.வி.பிரகாஷ் இசையில் 'முத்தம் கொடுத்த மாயக்காரி, குறளரசன் இசையில் 'கண்ணே உன் காதல்' ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார்.

ஹி இஸ் பேக்:

இடையில் சில காலம் காணாமல் போயிருந்த ரசிகர்களின் யுவன் , தர்மதுரை, தரமணி, யாக்கை, நெஞ்சம் மறப்பதில்லை ஆல்பங்கள் மூலம் மீண்டும் வந்தார். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு ரகத்தில் மிரட்டினார். அப்படி இரு துருவங்களிலும் அசால்டாக இறங்கி அடிக்கும் அந்த திறமைதான் ரசிகர்கள் பார்த்து வியத்த யுவன் ஷங்கர் ராஜா. அதை அவர் மீண்டும் செய்ய ஆரம்பித்துவிட்டார். முன்பு, படம்பார்த்து விட்டு ரசிகர்கள் சொல்லும் வார்த்தை ‘இந்தப் படத்துல யுவன்தான் ஹீரோ'. அதை மீண்டும் சொல்ல வைத்துவிட்டார். அவரது ரசிகர்கள் மறுபடியும் காலரைத் தூக்கிவிட்டு அவர் பாடலை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஹி இஸ் பேக் நவ்...

-ப.சூரியராஜ்