Published:Updated:

‘200 வகைப் புல்லாங்குழலும் ஒரு யூ-டியூப் சேனலும்!’ - இது ‘ஃபுளூட் சிவா’ வரலாறு

‘200 வகைப் புல்லாங்குழலும் ஒரு யூ-டியூப் சேனலும்!’ - இது ‘ஃபுளூட் சிவா’ வரலாறு

யூ-டியூபில் ‘ஃபுளூட் சிவா’ மிகப் பிரபலம். ஹிட் பாடல்களுக்குத் தன் புல்லாங்குழல் இசையையே வரிகளாக்கி, இசையால் வசம் செய்யும் இளைஞர்.

‘‘ ‘ஃபுளூட் சிவா’ ஆனது எப்படி?‘‘

‘‘எட்டு வயசுல இருந்து ஃபுளூட் வாசிக்கிறேன். என்கூட பழகுற எல்லோருக்கும் இது தெரியும். ஸோ... ஸ்கூல் படிக்கும்போதே ‘ஃபுளூட் சிவா’னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. இசையோட சேர்ந்து பெயரைக் கேட்க நல்லாத்தானே இருக்கு? அதான், நானும் சந்தோஷமா சேர்த்துக்கிட்டேன்.’’

‘‘முழுநேரமும் இசைதானா, வேற வேலை பார்க்கிறீங்களா?"

‘‘முழுநேர இசைக்கலைஞர் ஆகணும்னு ஆசைதான். ஆனா, இப்போதைக்கு இன்ஜினியரா வேலை பார்க்கிறேன். நான் பிறந்தது கனடா. சில காலம் சிதம்பரத்துல இருந்தேன். திரும்பவும் கனடா வந்துட்டேன். கடந்த 22 வருடமா கனடாவுலேயே இருக்கேன். என் பேச்சுலர் டிகிரி, மாஸ்டர் டிகிரியை கனடாவுல இருக்கிற கார்ல்டன் யுனிவர்சிட்டியில முடிச்சேன். வேலைக்கு இடையில்தான் இந்த இசைப் பயணம்.’’

‘‘பொதுவா பாடல்களைப் பாடி கவர் சாங்’ ஆக மாத்துவாங்க. உங்களுக்கு அதை ஃபுளூட் கவரா’ மாத்தணும்ங்கிற எண்ணம் எப்படி வந்துச்சு?’’

‘‘ரெஸ்டாரென்ட், ஏர்போர்ட்னு பல இடங்கள்ல நாம இன்ஸ்ட்ரூமென்டல் சாங்ஸ் கேட்டிருப்போம். தவிர, கென்னி.ஜி போன்ற சில கலைஞர்களும் இன்ஸ்ட்ரூமென்டல் கவர் சாங்ஸ் பண்றாங்க. என்னோட ஸ்பெஷல், ஒரு பாட்டை இம்ப்ரூவைஸ் பண்ணாம, என் புல்லாங்குழல் இசையே பாடல் வரிகள் ஃபீல் கொடுக்கணும்னு நினைப்பேன். அது ஒரு தனித்துவமாவும் இருக்கும். என் யூ-டியூப் சேனல்ல சினிமா பாடல்களுக்கு நான் வாசிச்ச ஃபுளூட் வெர்ஷன் கேளுங்க, உங்களுக்கே புரியும். யூ-டியூப்ல என் இசையை இதுவரை ஒரு மில்லியன் ஆடியன்ஸ் ரசிச்சிருக்காங்க.’’

‘‘200 வகையான ஃபுளூட்ஸ் வாசிப்பீங்களாமே... புல்லாங்குழல்ல இத்தனை வகைகள் இருக்கா?’’

‘‘ஃப்ரொபெஷனலா புல்லாங்குழல் வாசிக்கிற ஒவ்வொரு கலைஞர்கள்கிட்டேயும் குறைந்தபட்சம் 50 வகையான புல்லாங்குழல்கள் இருக்கும். கீ போர்டுல 48 கீ இருக்கும். ஒவ்வொரு ‘கீ’யும் ஒவ்வொரு விதமான இசை. அந்த 48 வகையான தனித்தனி இசைக்கான புல்லாங்குழல்கள் என்கிட்ட இருக்கு. இதுதவிர, கர்னாடிக் VS ஹிந்துஸ்தானி ஃபுளூட் இருக்கு. பிளாஷ்டிக் ஃபுளூட்ஸும் இருக்கு. ‘தர்மதுரை’ படத்துல வர்ற ‘ஆண்டிப்பட்டி...’ பாட்டோட ஃபுளூட் வெர்ஷனை நான் பிளாஷ்டிக் ஃபுளூட்லதான் வாசிச்சேன். தவிர, சவுத் கொரியன், துர்கிஷ், நேடிவ் இந்தியன், ஐரிஸ், வெஸ்டர்ன் மெட்டல் ஃபுளூட்னு எல்லாமே என்கிட்ட இருக்கு!’’

‘‘மறக்க முடியாத பாராட்டு?’’

‘‘ஒவ்வொருநாளும் யூ-டியூப் சேனல்ல என் இசைக்கு ரசிகர்கள் கொடுக்குற கமென்ட்ஸ் எல்லாத்தையும் ரசிக்கிறேன். கனடாவுல நடந்த ‘​​​​​​​எஸ்.பி.பி 50’ நிகழ்ச்சியில, எஸ்.பி.பி சார் முன்னாடி அவரோட பாடல்களுக்கு ஃபுளூட் வெர்ஷன் வாசிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அவரும், ரசிச்சுக் கேட்டார். ‘பைரவா’ பட ‘நில்லாயோ...’ பாட்டுக்கு நான் வாசிச்ச ஃபுளூட் கவர் கேட்டுட்டு, பாடகர் ஹரிசரண் ட்வீட் பண்ணியிருந்தார். இதுதவிர, பலபேர் பாராட்டியிருக்காங்க.’’

‘‘அடுத்து?’’

‘‘இப்போதைக்கு தமிழ், மலையாளம், ஹிந்திப் பாடல்களுக்கு ஃபுளூட் கவர்ஸ் பண்றேன். இனி தெலுங்கு, கன்னடம், பெங்காலினு எல்லா மொழிப் பாடல்களுக்கும் ஃபுளூட் கவர்ஸ் கொடுத்து அசத்தணும். என்னோட ரெண்டாவது ஆல்பமான ‘காதல் கிலிட்ஸ்’க்கு வீடியோ ஷூட் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. யூ-டியூப்ல இருக்கிற ‘ஒன் மில்லியன் வியூவர்ஸ்’ங்கிற அங்கீகாரத்தை, பத்து மில்லியனா மாத்தணும். அதுக்கான முயற்சிகளும் எடுத்துக்கிட்டு இருக்கேன். தவிர, ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட பாட்டுக்குப் புல்லாங்குழல் வாசிக்கணும். அது என் கனவு.’’

                                                                                                                                                                                                    - கே.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு