Published:Updated:

யூ- டியூபில் கலக்கும் ‘குரங்கன்’ - இது தமிழின் ‘ராக்’ இசைக்குழு..!

யூ- டியூபில் கலக்கும் ‘குரங்கன்’ - இது தமிழின் ‘ராக்’ இசைக்குழு..!
யூ- டியூபில் கலக்கும் ‘குரங்கன்’ - இது தமிழின் ‘ராக்’ இசைக்குழு..!

யூ- டியூபில் கலக்கும் ‘குரங்கன்’ - இது தமிழின் ‘ராக்’ இசைக்குழு..!

தமிழ் கூறும் நல்லுலகுக்கு கிடைத்திருக்கும் புது ‘ராக்’ இசைக்குழு ‘குரங்கன்'. இசைக்குழு என்றவுடன் இளையராஜா, இமான் பாடல்களை பாடுபவர்கள் என நினைக்கவேண்டாம். குரங்கன் பாடும் பாடல்கள் அத்தனையும் குரங்கன் இசைப்பவை. பாடுபொருள்களும், வரிகளும் புது சிந்தனைகளை விதைப்பவை. இசைக்குழுவின் பிரதான இருவர் கேபர் வாசுகி மற்றும் டென்மா. இருவரையும் பெசன்ட்நகர் கடற்கரையில் சந்தித்துப் பேசினோம்.

‘நான் கேபர் வாசுகி. சொந்த ஊர் கோயமுத்தூர். காலேஜ் படிச்சுட்டு இருக்கும்போது நானே பாடல்கள் எழுதி பாட ஆரம்பிச்சேன். நிறைய பேர் கேட்டுட்டு பாராட்டுவாங்க. நானே சொந்த முயற்சியில் கிடார் வாசிக்கக் கத்துக்கிட்டேன். படிச்சு முடிச்சதும் இரண்டு வருஷம் வேலை பார்த்தேன். மறுபடியும் இசையுலகுக்கு வந்து தமிழ்நாட்டின் முதல் க்ரவுட் ஃபண்டிங் இசை ஆல்பமான 'அழகுப்புரட்சி' வெளியிட்டேன். இப்படித்தான் ஆரம்பிச்சது என்னுடைய இசைப்பயணம்' என சுய அறிமுகத்தோடு ஆரம்பித்தார் கபேர் வாசுகி.

‘நான் டென்மா. நார்த் மெட்ராஸ் ஆளு. ரொம்ப சின்ன வயசுல இருந்தே எனக்கு இசை மேல் ஆர்வம் இருந்தது. பொருளாதார பிரச்னையால் 14 வயசுல இருந்துதான் மியூசிக் கத்துக்க ஆரம்பிச்சேன். சர்ச்ல, காலேஜ் பேண்டுல எல்லா இடத்திலேயும் வாசிச்சுருக்கேன். லோன் எடுத்து லண்டன்ல போய் மியூசிக் புரொடக்‌ஷன் படிச்சு முடிச்சு, இங்கே சில வீடியோ கேம்களுக்கு இசையமைச்சுட்டு இருந்தேன். அப்போ தான் கேபர் வாசுகியோட ஷோ ஒன்னு பார்த்தேன். இரண்டு பேரும் சந்திச்சுப் பேசினோம். எங்கள் சந்திப்பின் விளைவுதான் இந்த குரங்கன்' என குரங்கனின் வரலாறு சொன்னார் டென்மா.

‘குரங்கன்’ பெயர்க்காரணம் வரைக...

ஹாஹா...தமிழ் சினிமாக்களில் பெரும்பாலும் ஹீரோ புகழ் பாடுற, காதல் தோல்வியில் பாடுற மாதிரியான பாடல்களே நிறைய வரும். இதைத் தாண்டி அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை, உணர்வுகளை நாம கடந்து வர்றோம். அதைப் பற்றியும் பாடணும்னு நினைச்சேன். அதேபோல், எங்களுக்கு தன்னைத்தானே பரிதாப்படுத்திக்கிறதும் நான்தான் எல்லாமேனு நினைக்குற மென்டாலிட்டியும் பிடிக்கவே பிடிக்காது. 'நான்'ங்கிற இமேஜ் உடையனும்னா சுயபகடி அங்கே வந்தாகனும். அதுதான் எங்களை நாங்களே பகடி பண்ணி 'குரங்கன்'னு பெயர் வெச்சுகிட்டோம்.

உங்க பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் பொது மனநிலையை எதிர்த்து கேள்வி கேட்குற பாடல்களாகவே இருக்கே...

கேள்வி கேட்குறதுனு சொல்லமுடியாது. ஏன்னா, கேள்வி கேட்கிற அளவுக்கு நாங்களும் ஒன்னும் யோக்கியர்கள் இல்லையே. பொது மனநிலைன்ற போது எங்களுக்கும் சேர்த்து தான் இந்தப் பாடல்கள். 

பல அழுத்தமான கருத்துகளை பாடல்களில் பதிவு செய்றீங்க... அதற்கு எப்படி உங்களை தயார் செய்துக்கிறீங்க?

‘நிறைய படிப்போம். நிறைய பேர்கிட்ட பேசுவோம். எந்த பிரச்னையைப் பற்றி பாடல் இயற்ற போகிறோமோ அதனால் பாதிக்கபட்டவர்களோடு, அதனோடு சம்பந்தபட்டவர்களோடு பேசுவோம். அவர்களின் இடத்தில் இருந்து யோசிச்சு வரிகள் எழுதுவோம்.


பொறம்போக்கு’ பாடல் பற்றி...

‘‘என்னூர் சிற்றோடையை  ரியல் எஸ்டேட்டாக மாற்றுவதை எதிர்த்து, அதை பாதுகாக்க  'பொறம்போக்கு'னு ஒரு பாடல் பண்ணினோம். அந்தப் பாடல் ஓரளவு மக்களிடையே நல்ல ‘ரீச்’ ஆச்சு. ‘வெட்டிவேர் கலெக்டிவ்’-ங்கிற தன்னார்வ இயக்கம் ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழா’ங்கிற நிகழ்வு ஒன்றை மூணு வருஷமா நடத்திட்டு வர்றாங்க. அந்த விழாவில் பாட வந்த டி.எம்.கிருஷ்ணா ‘‘கர்னாடிக் மியூசிக் எல்லா மக்களிடையேயும் போய் சேராததற்கு காரணம், அது யாருக்கும் புரியலை. சுற்றுச்சுழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துற மாதிரி பாடல் ஒன்று பண்ணலாம்’’ன்ற  மாதிரி பேசியிருக்கார். அப்போ, சுற்றுச்சுழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் 'பொறம்போக்கு' பாடலை பற்றிச் சொல்லியிருக்கிறார். அந்த பாடலை பார்த்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு ரொம்பவே பிடிச்சு போச்சு. சென்னை பேச்சு மொழியில் நான் பாடல் எழுதிக்கொடுக்க, கர்னாடிக் மியூசிக் ஸ்டைலில் அவர் 'பொறம்போக்கு' பாடலைப் பாடினார். அந்த வீடியோ மக்களிடையே ரொம்ப நல்லா ரீச் ஆச்சு’’ என்றார் கேபர் வாசுகி.

திரைப்படத்துக்கு இசையமைக்கும் ஆசை...

‘நாங்க நிறைய குறும்படங்கள், விளம்பரங்களுக்கு இசையமைச்சிருக்கோம். நல்ல படம் தேடி வந்தால் கண்டிப்பா இசையமைப்போம். ஆனால், சினிமாவை நம்பியும் நாங்க இல்லை' என்றனர் குரங்கன் இசை குழுவினர்.

பி.கு: கபேர் வாசுகி, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியாகவிருக்கும் ‘கவண்’ திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையில் 'மாத்துறாய்ங்களாம்...' என்ற பாடலைப் பாடியுள்ளார். ‘kurangan’ என யூ-டியூப்பில் தேடினால் குரங்கன் இசைக்குழுவின் பாடல்களைக் கேட்கலாம்.

- ப.சூரியராஜ்

படங்கள் : ர.வருண்பிரசாத்

அடுத்த கட்டுரைக்கு