Published:Updated:

தீபா வழியில் கமல், விஜய், அஜித் - கோலிவுட் கலாட்டா!

Vikatan Correspondent
தீபா வழியில் கமல், விஜய், அஜித் - கோலிவுட் கலாட்டா!
தீபா வழியில் கமல், விஜய், அஜித் - கோலிவுட் கலாட்டா!

தமிழக அரசியலின் லேட்டஸ்ட் கிச்சுகிச்சு அத்தியாயம் தீபா தான். கட்சித் தொடங்கி காமெடி செய்யும் காலம் போய் கட்சியின் பெயரிலேயே காமெடி செய்துகொண்டிருக்கிறார்கள் தீபா அண்ட் கோ. ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ என தீபாவின் வழியில் சமீபத்திய முதல்வர் வேட்பாளர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்தால் என்ன பெயர் வைப்பார்கள்? அதையும் பார்த்துடுவோமே!

சப்டைட்டில் ஆண்டவர் கழகம் :

தமிழகத்தில் என்ன நடந்தாலும் 'அன்றே சொன்னார் ஆண்டவர்' என ஒரு குரூப் கிளம்பி வந்துவிடுகிறது. அதற்கேற்றார் போல உலக நாயகனின் பட காட்சியோ வசனமோ பொருந்திப் போவதுதான் மெடிக்கல் மிராக்கிள். போதாக்குறைக்கு ட்விட்டரில் பயங்கர ஆக்டிவாக இருந்து எல்லாரையும் வெச்சு செய்கிறார் ஆண்டவர். என்னவாக வெச்சு செய்கிறார் என்பதுதான் கேள்விக்குறி. ஆகவே அவர் கட்சி தொடங்கினால் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதைக் கூறிக்கொண்டு...

SAC பஞ்சபூதங்கள் பேரவை :

இளைய தளபதிக்கு அவர் அப்பாதான் அரசியல் ஆசான், குரு, ஹெச்.ஓ.டி மற்றும் எல்லாம் எனப் பல வருஷங்களாகப் பேச்சு ஓடிக்கொண்டு இருக்கிறது. எனவே அவர் பெயர் இல்லாத கட்சியா? சரி... அதென்ன பஞ்ச பூதங்கள்? இளைய தளபதி சுறாவைப் போல நீச்சலடிப்பார், குருவியைப் போல பறப்பார் என்பதால் நியாயமாக ஒலிம்பிக் பேரவை எனதான் வைத்திருக்க வேண்டும். ஏதோ விளையாட்டு டீம் போல என்று கூட்டணிக்குக் கட்சிகள் வராவிட்டால்? அதனால் அவர் சாதனைகள் படைத்த பஞ்சபூதங்களைத் துணைக்கு அழைத்துக்கொள்ளலாம்.

சர்வதேச அஜித் முன்னேற்ற கழகம் :

அஜித்துக்கும் சேர்த்து அவர் ரசிகர்களே பேசுவதால் 'அஜித் முன்னேற்றக் கழகம்' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். அதுசரி என்ன சர்வதேச லெவல்? உலகத்தில் இருக்கும் எல்லா நாடுகளிலும் தலைக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும், புரூனே இளவரசி, செச்சோஸ்லோவிகேயா அதிபர் போன்ற வி.ஐ.பி-கள் எல்லாம் தீவிர அஜித் ரசிகர்கள் எனச் சொல்லப்படுகிறது. (யார் சொன்னா? தேவாவே சொன்னான் மொமென்ட்) அதனால் முன்னால் ஒரு பிட்டிங் சேர்த்தாச்சு.

எஸ்.டி.ஆர்.ல.தி.மு கழகம் :

நாசா கண்டுபிடித்துள்ள புது கிரகங்களில்கூட இத்தனை இனிஷியல்களோடு ஒரு கட்சி இருக்காது. டி.ஆரின் குடும்பக் கட்சியான ல.தி.மு.க-வின் உறுப்பினர் எண்ணிக்கை பற்றி டி.ஆருக்குத் தெரியாது என்பதால் அதையும் சிம்பு தொடங்கப்போகும் புதுக்கட்சியோடு இணைத்துவிடலாம். சும்மாவே அப்பா நான்குமணி நேரம், மகன் நான்குமணி நேரம் பேட்டி தருகிறார்கள். இதுல ரெண்டு பேரும் சேர்ந்தா? கண்ணைக் கட்டுது சாமி!

பாரதி குட்டிபாரதி பேரவை :

முண்டாசு கட்டிப் போராடினான் பாரதி... மாட்டுக்காகப் போராடினான் குட்டிப்பாரதி (கிறுகிறுன்னு வருதே!) என்கிற ரீதியில் ஹிப்ஹாப் ஆதியின் திடீர் ரசிகர்கள் ஆரவாரம் செய்வதால் இந்தப் பெயரைவிட வேறு என்ன சாய்ஸ் இருக்க முடியும்? (இந்த பாவம் எல்லாம் சும்மா விடாது தெரியுமா?) பெண்ணுரிமை பேசிய பாரதியாரை ஃபாலோ செய்வதாகக் கூறிவிட்டு துரத்திப்போய் நம்பர் கேட்டு தொல்லை செய்வது, கிளப் பாடல்கள் இயற்றுவது போன்ற புரட்சிகர நடவடிக்கைகள் இந்தக் கட்சியின் மூலம் செய்யப்படும்.

-நித்திஷ்