Published:Updated:

‘நான் ஒரு காமெடியனே கிடையாதுங்க..!’ - சார்லி கலகல

‘நான் ஒரு காமெடியனே கிடையாதுங்க..!’ - சார்லி கலகல
‘நான் ஒரு காமெடியனே கிடையாதுங்க..!’ - சார்லி கலகல

தமிழ் திரைப்படங்கள் 35 ஆண்டுகளுக்கு மேல் ஒரு காமெடியனை வளர்க்கிறது என்றால் அது நடிகர் சார்லிதான். நடிப்பில் மட்டும் அல்ல, தோற்றத்திலும் அவ்வளவு எளிமையானவர். பேட்டி எடுக்க நாம் சென்றதும், வேஷ்டி சட்டையுடனும், ஒரு வார தாடியுடனும் நம்மை இயல்பாக வரவேற்று, தடார் என தரையில் அமர்ந்துகொண்டார். ‘என்ன சார் தாடி...’ என கேட்டதும், ‘சிவகார்த்திகேயன் படத்துல நடிச்சிட்டு இருக்கேன். அதுல நான் அவருக்கு Daddy... அதனால இந்த தாடி...’ என பஞ்ச் கொடுத்தார். நாமும் ஆக்ஷன் சொல்லி பேட்டியை ஆரம்பித்தோம்.

‘‘நீங்கள் ஒரு காமெடியன். ஆனால், ஒரு முழு நீள காமெடி படத்துலேயும் மற்ற படங்களேயும் கேரக்டர் ரோல் பண்றீங்க, அது எப்படி சாத்தியம்?’’

‘‘நான் ஒரு காமெடியனே கிடையாது. முதல்ல நான் ஒரு நடிகன். கேரக்டர் ரோல் பண்ணி எனக்கு அதிகமா பேரு வாங்கிக்கொடுத்தது ‘வெற்றிக்கொடிக்கட்டு’-க்கு பிறகு ‘கிருமி’. இந்த ரோல், நிஜமாகவே எனக்கு ரொம்ப சவால் விடுவது மாதிரி இருந்தது. எனக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும், அதை முடியாதுனு சொல்லாமல், நடிக்கணுங்குறதுதான் என் ஆசை.அதைத்தான் இப்பவரைக்கும் செஞ்சுக்கிட்டு இருக்கேன். ‘அய்யயோ எனக்கு காமெடியெல்லாம் வராது’, ‘அய்யயோ என்னையெல்லாம் சிரிக்கிற சீன்ல போட்டுராதிங்க’னு சிலபேர் சொல்லுவாங்க. இன்னும் சிலபேர்.. ‘சார், அழுகுற சீன்ல இதையெல்லாம் நான் சொன்னா, சிரிப்பாங்க சார்’னு சொல்வதுண்டு. இதில் எல்லாம் எனக்கு உடன்பாடே கிடையாது. குறிப்பிட்ட அந்தக் காட்சி என்ன சொல்லவருதோ, அதைத் திறம்பட செய்யணும் என்பதே, ஒரு நடிகனின் கடமை. அதைத்தான் நான் தொடர்ந்து செய்கிறேன்’’

‘‘நீங்க எப்படி ஒரு காமெடியனா உருவானிங்க?’’

‘‘ஒரு மேடை நடிகனாகத்தான் என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன். ஒருமுறை என்னுடைய நாடகத்தைப் பார்த்த இயக்குநர் பாலசந்தர், மனோகர் என்ற என் பெயரை `சார்லி’ என மாற்றி, வெள்ளித்திரையில் `பொய்க்கால் குதிரை’ படத்தில் அறிமுகப்படுத்தினார். முதன்முதலா ஒரு நகைச்சுவை படத்தில் நடிச்சதுனால என்னமோ, என்னை மக்கள்  காமெடியானாவே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் எப்போதுமே ஒரு வெற்றிகரமான நடிகனாக இருக்கத்தான் நினைச்சேன். அந்த நேரத்துல அடுத்தடுத்த வந்த வாய்ப்புகள் எல்லாம், காமெடியானாக தான் கிடைச்சது. நடிச்ச அத்தனை படங்களிலும், நான் உண்மையான உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கொடுத்தேன். அதுதான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கு. எது நமக்குப் பிடித்ததாக இருக்கிறதோ, அதுவே நமக்குத் தொழிலாக வந்தால், அதுதான் அதிர்ஷ்டம். அந்த வகையில் நான் ரொம்ப அதிஷ்டசாலி." 

‘‘நாகேஷ் மாதிரி முகபாவனைகளில் வித்தியாசப்படுத்துறீங்களே?’’

‘‘நடிகர் விஜய்யின் மூன்று படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றதால், சென்னை கமலா தியேட்டரில் அதற்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த சமயத்தில் விஜய் சாரின் எல்லாப் படத்திலும் நானும் இருப்பது வழக்கம். அதனால், அந்த விழாவில் நானும் கலந்துகொண்டேன். அந்த தருணத்தில், நாகேஷ் சார் பேசும்போது, 'காமெடியன்களில் இரண்டு ரகம். ஒன்று, டைமிங் நல்லா இருக்கிற காமெடியன். இன்னொன்று, டைம் நல்லா இருக்கிற காமெடியன். இதில் சார்லி முதல் ரகம்' என்று மனம் திறந்து பாராட்டினார். அதை நான் மிகப்பெரிய விருதாகவும், அங்கீகாரமாகவும் எடுத்துக்கொண்டேன். மனசுக்குள்ள அவரு இருந்ததால், நீங்கள் சொல்ற மாதிரிகூட இருக்கலாம்.’’

"உங்கள் பார்வையில், ஒரு நகைச்சுவை எப்படி இருக்க வேண்டும்?’’

‘‘ஒரு சீரியஸான விஷயத்தைக் கூட, கலகலப்பாகச் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். இப்படித்தான், நான் சினிமாவுல அறிமுகமானபோது, கூட நடித்த ஒரு நடிகர், தயாரிப்பாளரிடம், ‘கண்டிப்பாக இந்தப் படம் டென் வீக் சார்' என்றார். ஓ, பத்து வாரம் ஓடுமா, சூப்பர்’ என்றார் தயாரிப்பாளர். ஆனால், அந்தப் படம் ஓடாமல் ஃபிளாப் ஆனது. தயாரிப்பாளர் அவரைக் கூப்பிட்டு, விளக்கம் கேட்டார். ‘நான்தான் அன்னிக்கே சொன்னேனே சார்,  இந்தப்  படம்  டென் வீக்னு... டைரக்டர் ஒரு வீக், ஹீரோ ஒரு வீக்,  தாயரிப்பாளர் ஒரு வீக் இப்படி இந்தப் படத்துல 10 வீக் இருக்கு. அப்பறம் எப்படி சார் படம் ஓடும்?’ என்று பதில் சொன்னார். அதுதான் நகைச்சுவை. இன்று பல இடங்களில் ஒன்று, இது இல்லாமல் இருக்கிறது. இல்லையென்றால், தேவைக்கு அதிகமாக ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது.’’

‘‘​​​​​உங்களுக்குப் பிடித்த காமெடி காட்சி? காமெடி நடிகர் யார்?’’ 

‘‘உலகத்திலேயே நம்ம மட்டும்தான் ஹுயூமர்ல செல்வ செழிப்போடு இருக்கோம். தமிழில் இருக்கக்கூடிய நகைச்சுவை வளம், ஆங்கிலம் உட்பட வேற எந்த மொழிகளையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில், 'இந்தப்பா.. உங்க அப்பா, நாய் கொடுத்தார். ஜுலினு பெயர் வெச்சேன். செத்துப்போச்சு. பேரு வச்ச சரி, சோறு வச்சியா'னு டைமிங்கோட நடித்திருப்பார்கள். அதை இப்ப பார்த்தாலும், நினைச்சு நினைச்சு சிரிப்பேன். அதே மாதிரி கலைவாணர், வி.கே.ராமசாமி, சந்திரபாபு, நாகேஷ், எஸ்.எஸ்.சந்திரன் வரை அனைவருடைய நகைச்சுவையும் விரும்பிப் பார்ப்பேன். பல நேரங்களில் அதை நினைத்து நினைத்து தனியாக சிரித்திருக்கிறேன்." 

‘‘ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி வரை உங்களின் நடிப்புப் பயணம் தொடர்கிறது. இதில் உங்களுக்கு கிடைத்த  அனுபவங்களை சொல்லுங்களேன்?’’ 

‘‘நடிகர் திலகம், கமல் சார், ரஜினி சார் என பெரிய நடிகர்கள் அனைவருடனும் படம் பண்ணும்போது, மனதுக்குள் பெரிய சந்தோஷம் இருந்தாலும், இதில் நமக்கான ரோலை சரியா செய்தோமா என்ற கேள்விதான் எனக்குள்ள எழும். இப்ப எமன்’ல விஜய்ஆண்டனி,  நடிச்சுகிட்டு  இருக்கிற வரைக்கும் என் ரோலை நான் சரியா செய்தேனா என்ற கேள்வி மட்டும்தான் எனக்குள் இருக்கும். அதற்கு, நான் நாடகத்துறையில் இருந்து வந்ததுகூட ஒரு காரணமாக இருக்கலாம். இவை எல்லாம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபங்கள். பல நேரங்களில் இதை நினைத்து பார்க்கையில் சிலிர்க்கும்.’’

‘‘நடிச்சுகிட்டே இன்னொரு பக்கம் படிப்பையும் தொடர்றீங்களாமே?’’

‘‘நகைச்சுவை ஜாம்பவான் வி.கே.ராமசாமி என்னிடம் ஒருமுறை, தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை நடிகர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டார்கள். அவற்றைத் தேடிப்பிடித்து நீதான் பதிவு செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அவர் சொன்ன அந்த வார்த்தை, எனக்குள் ஒரு தீயை மூட்டியது. அவர் சொன்ன வார்த்தையை, என் தகப்பன் எனக்கு கொடுத்துச் சென்ற கடமையாக எடுத்துக்கொண்டேன். அதனால், கடந்த 2013-ம் ஆண்டு தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் எம்.பில் பண்ணி முடிச்சேன். இப்ப, நகைச்சுவை கலைஞர்களைப் பற்றி பி.ஹெச்டி செஞ்சிக்கிட்டு இருக்கேன். இந்த ஆண்டு இறுதிக்குள் முனைவர்’ பட்டம் வாங்கிடுவேன்.’’

‘‘தமிழ் சினிமா உங்களுக்கு கற்றுத் தந்த செய்தி மற்றும் அனுபவம் என்ன? இந்தக் கேள்விக்கு, காமெடியாவும், சீரியஸாகவும் பதில் சொல்லுங்க பார்க்கலாம்?’’ 

‘‘ ‘இடியே விழுந்தாலும் சரி, நம்பிக்கையை கை விட்டுராதே, அசரவே அசராதே. இது சீரியஸ் தம்பி. இப்ப கியூமராசொல்ரேன் பாருங்க. உன்னுடைய கப் ஆஃப் டீ உனக்குத்தான். அக்கம் பக்கத்துல திரும்பி மெர்சல் அடையாத. ஸ்டைட்டாபோயிகிட்டே இரு’. இது ஓகே-வா?’’ என்று நம்மைக் கேட்டுக்கொள்கிறார். ‘‘சகிப்பு தன்மை, பொறுமை, இது எல்லாவற்றையும் விட, 'ஈடுபாடு இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்யாதே’னு எனக்குத் தமிழ் சினிமா கத்துக்கொடுத்திருக்கு.’’

‘‘தமிழ் சினிமாவின் பொக்கிஷமென்றால், நீங்கள் எதை சொல்விங்க?’’

‘‘தமிழ் சினிமாவின் பொக்கிஷத்துக்கூடதான் இப்ப நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க’’ என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார். 

‘‘சினிமாவில், உங்களுக்கு நிறைவேறாத ஆசை எதாவது இருக்கிறதா?’’

‘‘நிறைவேறும் செயலை நோக்கித்தான் நான் போயிகிட்டு இருக்கேன். அதுனால, நிறைவேறாத ஆசை என்பது என்னுடைய வாழ்க்கையிலேயே கிடையாது. நான் இயல்பானவன்.’’ 

- ரா.அருள் வளன் அரசு 

படங்கள் : பா.காளிமுத்து