Published:Updated:

எஜமான், கில்லி, தலைவா - தமிழ் சினிமாவும் 'துண்டு' சீன்களும்!

ஜெ.வி.பிரவீன்குமார்
எஜமான், கில்லி, தலைவா - தமிழ் சினிமாவும் 'துண்டு' சீன்களும்!
எஜமான், கில்லி, தலைவா - தமிழ் சினிமாவும் 'துண்டு' சீன்களும்!

சாதாரண ஒரு பெண்ணுக்கு ட்விட்டர்ல ஒரு  ட்வீட் போட்டுக் கேட்ட ஒரே காரணத்துக்காக தன்னோட அங்கவஸ்திரத்தையே தூக்கிக் கொடுத்துட்டார் மோடினு ஒரு குரூப் சொல்லிட்டு இருக்கிறாங்க. தன்னோட பிறந்தநாளைக்கு துண்டு அணிவிக்க வேணாம் அதுக்குப் பதிலா புத்தகங்களையே கொடுங்கனு ஸ்டாலின் சொன்னதுக்குப் பார்த்தீங்களா எங்க தலைவரை?னு இங்கிட்டு ஒரு குரூப் கம்பு சுத்துது. அரசியல்ல மட்டுமா இந்தத் துண்டுகள் விளையாடிக்கிட்டு இருக்குது. நம்ம தமிழ் சினிமாவுலயும் ஒரு ரவுண்டு வந்திருக்குது பாஸ்... அப்படியே பார்த்துட்டுப் போங்க.

* இது 'சின்னக்கவுண்டர்' படத்துல வந்த சிறப்பான சீன். துண்டை இடுப்புல கட்டினா கோயிலுக்குப் போறேன்னு அர்த்தம். துண்டைத் தோள்ல போட்டேன்னா தீர்ப்பு சொல்லப் போறேன்னு அர்த்தம். துண்டை எடுத்து அப்படி வெச்சேன்னா பட்டையைக் கிளப்பப் போறேன்னு அர்த்தம்னு துண்டுக்கே துண்டு துண்டா விளக்கம் குடுத்து ஃபைட் பண்ணுவாரு விஜயகாந்த். ஆனா துண்டுல மண் பட்டா ஆத்தா மனசு கஷ்டப்படும்னு சொல்றவர் வேட்டி சட்டையோட புழுதியில கிடந்து எதுக்கு சண்டை போடுறார்னுதான் தெரியலை உறவுகளே...

* இது சின்னக்கவுண்டரோட ரஜினி வெர்சன் படமான 'எஜமான்' படத்துல வரும் கொஞ்சம் ஏடாகூடமான சீன். ரஜினியோட துண்டை ஆதாரமாக வெச்சே பஞ்சாயத்தைக் கூட்டுவார் ஐஸ்வர்யா. அப்புறம் ஒருவழியா தர்மத்தை கவ்வி இருந்த சூது விலகி, தர்மமே திரும்ப ஜெயிச்சிடும்.

* 'தலைவா' படத்துல வரும் இன்டர்வெல் சீன் இது. குண்டுவெடிச்சு புல்லுபூண்டே இல்லாத அளவுக்குப் புகை கிளம்புற அந்த சீன்ல சத்யராஜோட துண்டு மட்டும் எப்படி அதர்வா விட்ட பாணா காத்தாடி மாதிரி ஆடி அசைஞ்சு கரைக்டா விஜய்கிட்ட வருதுனு ஒரு குரூப் இன்னமும் கேட்டுட்டு இருக்குதுன்னா பாருங்களேன்...

* அல்டிமேட் ரஜினி ஸ்டைல்னு சொல்லிக்கிற 'படையப்பா' படத்துல வர்ற சீன். ஆனா வீடுகள்ல கட்டி வெச்சிருக்கிற சில ஊஞ்சல்களை மூணு பேர் சேர்ந்து அவிழ்த்தாலே சில நேரம் அவிழ்க்க முடியலை. இவரு எப்படித் துண்டை மேலே போட்டு ஊஞ்சலை கீழே இழுக்கிறார். துண்டு அவ்வளவு ஸ்ட்ராங்கா இல்லை, அந்த  ஊஞ்சல் ரொம்ப வீக்கானு பல பேருக்கு சந்தேகமா இருக்கு... பாம்புப் புத்துக்குள்ள கைய விட்டீங்களே கடிச்சதானு கேட்டதுக்குப்பதிலா இந்தக்கேள்வியையே கேட்டு வச்சிருக்கலாம்.

* பட்டப்பகல்ல முத்துப்பாண்டியையே நடுரோட்டுல ஓடவிட்டு அவரோட வண்டியிலேயே அவரோட முறைப்பொண்ணையும் வெச்சிக்கிட்டு அவரோட துண்டையே அவரோட கழுத்துல போட்டு இழுத்துட்டு ஒரு கையில வண்டியை ஓட்டிக்கிட்டு வருவார் விஜய். இதை இன்ஸ்பிரேசனாக வெச்சுதான் 'குருவி' படத்துல வாயிலேயே ஆக்ஸிலேட்டரை இழுத்து வண்டி ஓட்டினாரோ என்னவோ தெரியலை.

* அப்புறம் இதுதான் 'கரகாட்டக்காரன்' படத்துல வரும் ரொமான்டிக்கான துண்டு சீன். பதறாதீங்க. அதாவது ஒரு கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் ராமராஜன்கிட்ட இருந்து மிஸ் ஆகிற துண்டு அப்படியே ட்ராவல் ஆகி நடு வயலுக்குள்ள கனகாகிட்ட மாலையாகவே மாறி விழும் பாருங்க. அற்புதம். அங்கே வைக்கிறோம் சார் சாங்னு இந்த மான் உந்தன் சொந்த மான்னு டூயட்டை வெச்சுருப்பார் கங்கை அமரன். இருந்தாலும் கனகாவுக்காக அந்த லாஜிக் மிஸ்டேக்கை மறக்கலாம்தானே மக்களே...

- ஜெ.வி.பிரவீன்குமார்