Published:Updated:

அருண் விஜய்யின் க்ரைம் ரெக்கார்டுக்கு தம்ஸ்-அப் சொல்லலாமா? - 'குற்றம் 23’ விமர்சனம்

முத்து பகவத்
அருண் விஜய்யின் க்ரைம் ரெக்கார்டுக்கு தம்ஸ்-அப் சொல்லலாமா? - 'குற்றம் 23’ விமர்சனம்
அருண் விஜய்யின் க்ரைம் ரெக்கார்டுக்கு தம்ஸ்-அப் சொல்லலாமா? - 'குற்றம் 23’ விமர்சனம்

இயக்குநர் அறிவழகனின் ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ என மூன்று படங்களுமே வெவ்வேறு கதைக்களங்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள். அறிவழகனின் நான்காவது படம் ‘குற்றம் 23’.

சென்னையில் மர்மமான முறையில் பாதிரியார் ஒருவர் இறந்துவிடுகிறார். அதே நேரம் பிரபல டிவி அதிபரின் மனைவியும் காணாமல் போகிறார். இரண்டு கொலைகளுக்குமே லிங்க் ஒன்றுதான் என்று கண்டுபிடிக்கிறார் காவல்துறை அதிகாரி அருண்விஜய். அதற்கான ஐ-விட்னஸ் ஹீரோயின் மஹிமா நம்பியார். அடுத்தடுத்து சில காரணமில்லா தற்கொலைகளும் நடக்கின்றன. அதில் ஒன்று அருண்விஜயின் அண்ணி அபிநயாவின் மரணம். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாததைப் போல் தோன்றும் சம்பவங்களுக்குப் பின்னணி என்ன? அது என்ன ‘குற்றம் 23' என்பதை விறுவிறுப்பாகச் சொல்கிறது படம்.

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக விக்டர் கேரக்டரில் மிரட்டிய அருண்விஜய் இந்தமுறை நேர்மையான போலீஸ் அதிகாரியாக கெத்துக்காட்டியிருக்கிறார். போலீஸ் அதிகாரிக்கான மிடுக்கிலும் மஹிமா நம்பியார் மீதான காதல் காட்சிகளிலும் லைக்ஸ் அள்ளுகிறார். குற்றத்தின் ஒவ்வொரு இழையையும் பிடித்துக் குற்றவாளிகளை நோக்கி நகரும் இடங்கள் புத்திசாலித்தனமானவை. அண்ணி அபிநயாவின் மரணத்தில் உடைந்துபோவது, அண்ணனைச் சந்தேகப்பட்டு சண்டை போடுவது, தன் அண்ணியின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு முடித்ததும் உணர்ச்சிவசப்பட்டு சுட்டுத் தள்ளுவது என்று நிறையவே உழைத்திருக்கிறார் அருண்விஜய்.

துடுக்குத்தனமான பெண்ணாக மகிமா நம்பியார். மீண்டும் மீண்டும் விசாரணை என்ற பெயரில் எரிச்சலூட்டும் அருண்விஜயிடம் கோபப்படுவது, ''உங்க பொண்ணை நான் கட்டிக்கிறேன்" என்று தைரியமாகத் தன் அப்பாவிடம் அருண்விஜய் சொல்வதைக் கேட்டு வெட்கப்படுவது என்று கதைக்குப் பொருத்தமான பாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மகிமா. அதிலும் வீட்டு வாசலுக்கே வில்லன்கள் வந்துவிட்டதை அறிந்து அவர் தவிக்கிற தவிப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

மிகச்சில காட்சிகள் வந்தாலும் உருக்கமான நடிப்பால் கவர்கிறார் அபிநயா. திருமணமான பெண், குழந்தையில்லாமல் இருந்தால், யார் மீது தவறு என்று யோசிக்காமலே மொத்த வசவுகளையும் ஒரு பெண்ணே வாங்கவேண்டியிருக்கும் அவலத்தை அழுத்தமாகச் சொல்கிறது அபிநயாவின் பாத்திரம். இவர்கள் மட்டுமின்றி, வம்சி கிருஷ்ணா, அரவிந்த் ஆகாஷ், அமித்பார்கவ்  என்று அனைத்துக் கேரக்டர்களுமே கச்சிதம். 

ஏற்கெனவே 'ஈரம்' படத்திலேயே குற்றப்பின்னணியுள்ள கதையை அழகாகச் சொல்லியிருப்பார் அறிவழகன். இந்தப் படத்திலும் அதே அழகு மற்றும் அறிவு. அதிலும் 'குற்றம் 23' என்பதற்கான குறியீடு நச். 

ஹீரோயிசமாக இல்லாமல், இயல்பான சண்டைக்காட்சிகள் நம் வீட்டு ஹாலில் நடப்பதைப் போல் அவ்வளவு எதார்த்தம் ப்ளஸ் விறுவிறுப்பு. வெரைட்டி காட்டியிருக்கிறார் சண்டைப்பயிற்சியாளர் சில்வா. விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்குப் பொருத்தம். பாஸ்கரின் ஒளிப்பதிவும், புவன் ஸ்ரீநிவாசனின் எடிட்டிங்கும் பாந்தமாய்ப் பொருந்துகின்றன.

இவ்வளவு பிளஸ்கள் இருந்தாலும் ஆங்காங்கே சின்னச் சின்ன மைனஸ்கள் கதையின் ஓட்டத்துக்கு ஸ்பீடு பிரேக்கர்கள். முக்கியமாக தம்பி ராமையா காமெடி என்ற பெயரில் வழக்கம்போல் மைண்ட் வாய்ஸ் கமென்ட்களை அள்ளிவிடுவது எரிச்சல். இப்படியான ஒரு கதைக்கு எதுக்கு காமெடி? அருண்விஜய் - மகிமா காதல் காட்சிகள் சுவாரஸ்யம் என்றாலும் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.

ஆரம்பத்திலேயே ஹீரோயினைத் தாக்கவரும் சில்வாவைப் பற்றி போலீஸில் விசாரிக்கச்சொல்கிறார் அருண்விஜய். ஆனால் அதற்குப்பிறகு அதை அருண்விஜயும் அறிவழகனும் மறந்துவிட்டது ஏனோ? என்னதான் பிளாக்மெயில் மிரட்டலால் அபிநயா பயந்து நடுங்கினாலும் அவர் வீட்டிலேயே ஒரு போலீஸ் அதிகாரி இருக்கும்போது அதைப்பற்றி அவர் சொல்லாதது உறுத்துகிறது. மெடிக்கல் க்ரைமைப் பற்றிச் சொல்லிவிட்டு, அதை அங்கேயே கிடப்பில் போட்டுவிட்டு, வில்லனை பழிவாங்குவதோடு படத்தை முடிச்சிட்டீங்களே டைரக்டர். மெடிக்கல் க்ரைம் பற்றி இன்னும் விரிவாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கலாம். போலீஸ் படம் என்றாலே என்கவுண்டர்களை நியாயப்படுத்துவது சரியல்ல, அதுவும் மனித உரிமைகள் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்திருக்கும் இந்தக் காலத்தில்.

குறைகள் சில இருந்தாலும் விறுவிறுப்பிலும் பரபரப்பிலும் வேகம் கூட்டுகிறது ‘குற்றம் 23’.