Published:Updated:

'ரஜினி' ரவி, 'கமல்' ஆனந்தன், 'விஜயகாந்த்' குமார் - நாங்கதான் ரியல் க்ரூப்புல டூப்பு!

விகடன் விமர்சனக்குழு
'ரஜினி' ரவி, 'கமல்' ஆனந்தன், 'விஜயகாந்த்' குமார் - நாங்கதான் ரியல் க்ரூப்புல டூப்பு!
'ரஜினி' ரவி, 'கமல்' ஆனந்தன், 'விஜயகாந்த்' குமார் - நாங்கதான் ரியல் க்ரூப்புல டூப்பு!

'ரஜினி' ரவி, 'கமல்' ஆனந்தன், 'விஜயகாந்த்' குமார் - நாங்கதான் ரியல் க்ரூப்புல டூப்பு!

“தூரத்துல இருந்து எங்கள யாராச்சும் பார்த்தா, பக்கத்துல வந்து மூணு செகண்ட் உத்துப் பார்த்துட்டுதான் போவாங்க. ஆரம்பத்துல வாய்ப்புக்காக இப்படி வேஷம் போட்டோம். எல்லோரும் அப்படியே இருக்கீங்க அப்படியே இருக்கீங்கன்னு சொல்லிச் சொல்லி இப்போ அதுவே அடையாளமா மாறிடுச்சு”- சினிமாக் கனவுகளாலும் ஆர்வத்தாலும் தங்களுக்கு இன்னொரு முகத்தை தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட நகல் (டூப்) கலைஞர்களுடன் ஒரு பேட்டி.

விஜயகாந்த் குமார் :

''சொந்த ஊரு நாமக்கல், எனக்குன்னு வெச்ச பேரு வெங்கடாசலம். வீட்டுல குமார்னு கூப்பிடுவாங்க. விஜயகாந்த மாதிரி கெட்டப் போட ஆரம்பிச்சதுல இருந்து விஜயகாந்த் குமார்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. 91=ல எங்க ஊருல இருந்த டான்ஸ் குரூப்ல ரஜினிகாந்த் டான்ஸ் ஆட வாய்ப்பு கேட்டப்போ உனக்கு அது சரி வராதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அப்போ அந்த குரூப்ல இருந்த ஒருத்தர்தான் ரஜினிகாந்த் இல்லைன்னா என்ன விஜயகாந்த மாதிரி உன்னை மாத்திக்காட்டுறேன்னு சொல்லி ஆட வெச்சாரு. அதுவரைக்கும் ரஜினி ரசிகனா இருந்த நான் கேப்டனை உள் வாங்க ஆரம்பிச்சேன், அப்படி ஆரம்பிச்ச பயணம்தான் இது. எனக்கு சுருள் முடி, ஆனா விஜயகாந்த் சாருக்கு கோரை முடி இருக்கும். அப்போ  சாமியார் ஒருத்தர்தான் முட்டையோட வெள்ளைக்கருவைத் தேய்ச்சுக்கிட்டா இப்படி நேரா நிற்கும்னு அறிமுகப்படுத்தினார், ஷோ இருக்கிறப்போ மேக்கப்புல வெள்ளைக்கருவைப் பயன்படுத்திக்குவேன். இப்போ ஆறு படம் நடிச்சுருக்கேன். மிமிக்ரி பாஸ்கர், நாஞ்சில் மணிமாறன் இவர்கள் மூலமா டி.வி ஷோ எல்லாம் பண்ணிருக்கேன்.

எலெக்‌ஷன் டைம்ல கேப்டன் கட்சி மீட்டிங்  கூட்டிப்போவாங்க. இதுவரை தனிப்பட்ட முறையில் கேப்டனைப் பார்த்தது இல்லை, மேடைகளில் தூரத்துல இருந்து பார்த்ததோட சரி. வயசு நாப்பத்தி ஏழு ஆச்சு, பி.காம் பாதியிலேயே லாரி கம்பெனியில் அக்கவுன்டன்ட் வேலைக்குப் போனேன். நடிகனாகனும்ங்கிற கனவுலதான் இந்த வேலைக்கு வந்தேன். பொண்ணு கொடுக்க மாட்டாங்களோன்னு பயத்துல, வேற வேலை பார்க்கிறேன்னு சொல்லித்தான் கல்யாணம் பண்ணினேன். இந்த வேலை பார்க்கிற விஷயம் தெரிஞ்சப்போ மாமியார் வீட்டுக்கு ரெண்டு வருஷம் போகம இருந்தேன். எனக்கு ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருக்காங்க, காலேஜ் போயிட்டு இருக்காங்க. யாருக்கும் நான் இப்படிப் பண்றது அவங்களுக்குப் பிடிக்காது. சினிமாவுல ஒரு நல்ல நடிகனா மாறணும். கனவை எட்டிப் பிடிக்கணும்.''

கமல் ஆனந்தன் :

'' சொந்த ஊரு சென்னைதான், 22 வருசமா கமல் வேஷம் போட்டுக்கிட்டு இருக்கேன். என் வீட்டுப் பக்கத்துல இருந்தவர் டான்ஸ் ட்ரூப் வெச்சுருந்தார். அவர்கூட போய் எனக்கு இந்த ஆசை வந்துருச்சு. அப்போ நிறைய முடி வெச்சுருப்பேன். ரஜினி வேஷம் போடலாமேன்னு சொன்னாங்க அப்றம் இன்னும் சில நண்பர்கள் கமல் சாயல் இருக்கேன்னதும் கமல் வேஷம் போட ஆரம்பிச்சேன், அப்படித்தான் நான் உள்ள வந்தேன். கார்பெண்டர் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். இன்னொரு பக்கம் இப்படி ஸ்டேஜ் ஷோவும் பண்ணிட்டு இருக்கேன். ஸ்டேஜ் ஷோவை நம்பி கார்பெண்டர் வேலையும் விட முடியலை. கார்பெண்டர் வேலைய மட்டுமே பார்க்கிறதுக்கு மனசுக்குப் பிடித்தமா இல்லை. ஆடி மாசம் ஆனா கோயில் திருவிழாவுல கச்சேரி களைகட்டும். வீட்டைவிட்டுப் போனா ஒரு மாசத்துக்கு திரும்பவே மாட்டோம். அந்த அளவுக்கு புரோகிராம் இருக்கும். இப்போவெல்லாம் அப்படி வாய்ப்பு கிடையாது, நிறைய இடங்கள்ல தடை போட்டுட்டாங்க. அதுக்காகவும் போராடிக்கிட்டு இருக்கோம்.

எனக்கு கமல் மாதிரி உருவ அமைப்பு இருக்கும். ஆனா குரல் வராது. அதனாலேயே நமக்கு வாய்ப்புகள் கிடைக்கலையோன்னு தோணும். இப்போ வயசு 40 ஆச்சு, ஆனாலும் இன்னும் அந்தத் தேடல் எனக்குள்ள இருக்கு. ஷோ இருக்கிற நாட்கள்ல பிரச்னை இல்லை. மற்ற நாட்கள்ல வெளியில எங்கேயாச்சும் போனோம்னோ ஒவ்வொருத்தங்க பார்வையே கிண்டல் தொணியில இருக்கும், ஆரம்ப நாட்கள்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இதெல்லாம்  பார்த்தா வேலைக்கு ஆகுமான்னு கண்டுக்கிறது இல்லை. கமல் சார், ரஜினி சாரை நேர்ல பார்த்து ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை. அதே மாதிரி சின்னத்திரையில ஒரு ரவுண்டு வரணும்கிறது ஒரு கனவு. இது எதுவும் குடும்பத்தைப் பாதிக்கக் கூடாதுங்கிற அளவுல நிற்காம ஓடிக்கிட்டு இருக்கேன்.''

பிரசாத் ராஜ் :

''சென்னை புழல்தான் நம்ம ஏரியா. அப்பாவுக்கு கவர்மென்ட் வேலை. மொத்தம் எட்டுப் பேரு என்கூட பொறந்தவங்க. அப்பா டிரைவரா இருந்ததால தாஜ் ஹோட்டல்ல டிரைவரா வேலைக்கு சேர்ந்துட்டேன். அப்போ பார்க்கிறவங்க எல்லாம் சினிமாவுல நடிக்கிற மாதிரி முகவெட்டு இருக்கு. நீ எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லைன்னு சினிமா ஆசையை வளர்த்து விட்டாங்க. பிரகாஷ்ராஜ் மாதிரி இருக்கேன்னு சொன்னா மட்டும் போதுமா... அந்த கேரக்டருக்காக அவரை மாதிரியே கூலிங் கிளாஸ், காஸ்ட்யூம் எல்லாம் தேடித் தேடி வாங்க ஆரம்பிச்சேன். பிரகாஷ்ராஜ் படங்கள் ஒண்ணு விடாம பார்க்க ஆரம்பிச்சேன். 'வில்லு' படம் வந்த டைம்ல நான் பாண்டிச்சேரியில ஷோ முடிச்சுட்டு வந்தேன். அப்போ என்கிட்ட வந்தவங்க உண்மையான பிரகாஷ்ராஜ்னு நெனச்சு கூட்டம் சேர்த்துட்டாங்க. அப்புறம் நான் டூப்புங்கன்னு சொல்லி வர்றப்ப செம்ம காமெடியாகிடுச்சு. இது மாதிரி சம்பவங்கள் நிறைய நடந்துருக்கு. இப்போ கஸ்தூரிராஜா சார் டைரக்ட் பண்ற 'காசு பணம் துட்டு மணி' படத்துல பிரகாஷ்ராஜ் சாருக்கு நான்தான் டப்பிங் பேசிருப்பேன். இப்போவரை பிரகாஷ் ராஜ் என்கிற மாபெரும் கலைஞனோட நிழல்தான் என்னோட அடையாளமா இருக்கு. பிரகாஷ் ராஜ் போர்வைக்குள்ள ஒளிஞ்சுருக்க பிரசாத் ராஜ் தனக்கான அடையாளத்துக்காகவும் ஒடிக்கிட்டு இருக்கேன்.''

ரஜினி ரவி :

''சொந்த ஊரு சேலம் ஆத்தூர். இருபது வருஷமா ஸ்டேஜ்ல ஷோ பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல டி.வி.எஸ். கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்பவே டான்ஸ் ஆடுறது, ரஜினி சார் மாதிரி முடி அதிகமா வளர்க்கிறதுன்னு இருப்பேன். என் நண்பர் மூலமாதான் டன்ஸ் ட்ரூப்ல ஆடுறதுக்கு வாப்பு கிடைச்சுது. முதல் தடவையா 'எஜமான்'ல ராக்குமுத்து ராக்கு பாட்டுக்கு ஆட ஆரம்பிச்சேன். இன்னைகு வரைக்கும் ரஜினி கெட்டப்லதான் ஆடிக்கிட்டு இருக்கேன். ஸ்டேஜ்ல ரஜினி வர்றார், ரஜினி வர்றார்னு நமக்குக் கிடைக்கிற கைத்தட்டல்தான் ஒரு போதை மாதிரி இந்த ஃபீல்டுல இருக்க வெச்சுருக்கு. வயசு நாற்பத்தி ரெண்டு. ரெண்டு பசங்க  இருக்காங்க. வீட்டுல யாருக்குமே இஷ்டம் இல்லை. தீபாவளி, பொங்கல்னு எந்த விசேஷம்னாலும் நான் வீட்டுல இருக்க முடியாது. ஃபங்‌ஷன்னு கிளம்பி எங்கேயாவது போயிருவேன். ரஜினி -25னு நிகழ்ச்சி நடந்தப்போ தூரத்துல இருந்து ரஜினி சாரைப் பார்த்திருக்கேன். அதுக்குப் பிறகு எவ்வளோ தடவை பார்க்க முயற்சி பண்ணி அவர் வீட்டுப் பக்கம் போயிருக்கேன். ஒரே ஒரு போட்டோ எடுக்கணும் அவர்கூட சேர்ந்து; இதுதான் என் ஆசை.''

உண்மைதானே... யார் போலவோ இருக்கிற யாரையும் யாரோ என அவ்வளவு எளிதாய்க் கடந்துவிட முடிவதில்லை!

- ந.புஹாரி ராஜா

அடுத்த கட்டுரைக்கு