Published:Updated:

‘நீங்க பாலாவின் ரசிகரா இருக்கலாம்.. அதுக்காக....!?' - ‘முப்பரிமாணம்’ படம் எப்படி?

‘நீங்க பாலாவின் ரசிகரா இருக்கலாம்.. அதுக்காக....!?' - ‘முப்பரிமாணம்’ படம் எப்படி?
‘நீங்க பாலாவின் ரசிகரா இருக்கலாம்.. அதுக்காக....!?' - ‘முப்பரிமாணம்’ படம் எப்படி?

‘நீங்க பாலாவின் ரசிகரா இருக்கலாம்.. அதுக்காக....!?' - ‘முப்பரிமாணம்’ படம் எப்படி?

ஒரு எமோஷனலான காதலனுக்கும் பிராக்டிக்கலான காதலிக்கும் இடையே உள்ள காதல் என்னவாகிறது என்பது தான் 'முப்பரிமாணம்' படத்தின் ஒன்-லைன். இயக்குநர் அதிரூபன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு இராசாமதி.

'ஸ்டைலிஷான' மற்றும் 'முரட்டுத்தனமான' என சாந்தனுவுக்கு இரண்டு லுக்குகள் படத்தில். நடிப்பில் புகுந்துவிளையாட இடமிருந்தும் அடக்கியே வாசித்திருக்கிறார். அதனாலேயே இரண்டு பரிமாணங்களுக்கு இடையில், நடிப்பில் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. சிருஷ்டி டாங்கேவுக்கும் நடிப்பில் மிரட்டுவது மாதிரியான கதாபாத்திரம் தான். அதில்  முடிந்தளவு நன்றாகவே நடித்திருக்கிறார். தம்பிராமையாவை சமையலறையில் இருக்கும் பணியாரச்சட்டியைப் போல, உபயோகப்படுத்தாமல் சும்மாவே வைத்திருக்கின்றனர். குணச்சித்திர நடிகருக்கான தேசியவிருது வென்ற அப்புகுட்டியும் படத்தில் இருக்கிறார். கன்னட நடிகர் ஸ்கந்தா அசோக்கிற்கு சில இடங்களில் டப்பிங் சிங்க் ஆகவில்லை. 

ஹீரோவும் ஹீரோயினும் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர். இடையில், ஹீரோவை விட பணம், புகழ், அந்தஸ்து அத்தனையிலும் சிறந்த ஒருவன் ஹீரோயினிடம் 'உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க கூட வாழ ஆசைப்படுகிறேன்' என்கிறான். அதை பிராக்டிக்கலாக யோசித்துப் பார்க்கும் ஹீரோயினும் அவனை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்கிறாள். அந்த முடிவை நியாயப்படுத்தி அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் 'ஹீரோயின் செய்தது சரிதானே..' என சொல்லவைக்கிறது. எமோஷனலாகப் பேசும் ஹீரோவைப் பார்த்து 'நீ சுயநினைவில் இல்லாத மாதிரி தெரியுது' என்று சொல்லும்போது நமக்கும் அப்படியே தோன்றுகிறது. ஆனால், இறுதியில் 'உணர்வுகள் தான் பெரியது' என சொல்லி இயக்குநர் படத்தை முடிக்கும்போது நமக்கே அதில் உடன்பாடில்லாமல் போய்விடுகிறது. படம் பார்த்து முடித்த பின்னர் 'பள்ளிப்பருவத்தில் முடிவு செய்த காதலை மறுபரீசிலனை செய்ய ஒரு பெண்ணுக்கு எந்த வகை உரிமையுமே இல்லையா?' என்ற கேள்வி தான் நம் மனதுக்குள் எழுகிறது.

இதைத் தவிர்த்து படமாக்கலில் நிறைய கன்டினியுட்டி குளறுபடிகள். ஒரே கார் ஒரே காட்சியில் மூன்று வெவ்வெறு நம்பர் ப்ளேட்டுகளில் வருகிறது. ஹீரோயினின் ரூம் முழுவதும் ரஜினியில் இருந்து ராஜமௌலி வரை பல திரைப்பிரபலங்களின் படங்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. ஆனால், படத்திலேயே 'சினிமா ஹீரோ' கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்கந்தாவின் படம் ஒன்று கூட இல்லை. கேரளா எல்லைக்குள் செல்வதற்கு சில காட்சிகளுக்கு முன்பே தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆற்றுக்குள் வீசியிருப்பார் சாந்தனு. ஆனால், போலீஸோ பாலக்காடில்தான் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது என டிராக் செய்து கண்டுபிடிக்கிறார்கள். புரொடக்‌ஷன் சைடு லிப்ஸ்டிக் மொத்தமாக  சீனாவிலிருந்து இம்போர்ட் செய்தார்களா எனத் தெரியவில்லை. எல்லோருமே ராமராஜனின் ரசிகர்கள் போல உலா வருகிறார்கள். அப்புக்குட்டியை மச்சான் என சாந்தனு கூப்பிடுவதைக்கூட ஏற்றுக்கொள்ள முடிகிறது. சுவாமிநாதனையும் "என்னடா மச்சான்" என்று சொன்னால் பார்க்கும் நமக்கு 'பக்கோ' என இருக்கிறது.

ஸ்டன்ட் மாஸ்டர் 'ஸ்டன்ட்' கோட்டி வடிவமைத்த சண்டைக் காட்சிகள் படத்துக்குப் பெரிய பலம். இராசாமதியின் கேமரா சில இடங்களில் சூப்பர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் பிஸியாகிவிட்டார் என்பது படத்தின் பாடல்களைக் கேட்கும்போது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. பின்னணி இசைக்குப் பெரிதாய் ஒன்றும் அவர் மெனக்கெடவில்லை. படம் ஆரம்பிப்பதற்கு முன் ரமேஷ் அப்பா, சுரேஷ் அப்பாவைத் தவிர எல்லோர் பெயரையுமே 'ஸ்பெஷல் தாங்ஸ் டு'வில் போடுகிறார்கள். அது ஏன் என்பதைப் படத்தைப் பார்த்தால்தான் உங்களுக்கு புரியும்...

சின்ன வயது ஈர்ப்பு, அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர், அம்மாவுக்கு கேன்சர்(அல்லது ஹார்ட் பிராப்ளம்), காதலித்தால் கொலை செய்யும் அண்ணன், இரவில் காதலி வீட்டுக்குள் எகிறிக் குதித்து வரும் ஹீரோ என ஒரு காட்சிக்குக்கூட புதிதாக யோசிக்கவில்லை. ஆனால் தொக்கி நிற்கும் சில கேள்விகளுக்கு விடை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் இரண்டாம் பாதி ஓகே. படத்தின் முதல் பாதியில் காட்சிகள் புதிதாக இருந்திருந்தால் இந்த ட்விஸ்ட் கூடுதல் சுவாரஸ்யத்தை உருவாக்கியிருக்கும்.

இயக்குநர் பாலாவின் ரசிகராக இருக்கலாம். அதற்காக ’சேது’ படத்தில் விக்ரம், அபிதாவைக் கடத்திச் சென்று மிரட்டும் காட்சியை ஷாட் பை ஷாட்டாகவா பிரதி எடுப்பது? க்ளைமாக்ஸ் பாடலும், அந்த சோகத்தை கடத்த நினைத்ததும் கூட அக்மார்க் பாலா ஸ்டைல். 

எல்லா விஷயத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கும் என்பது தான் படம் சொல்ல வரும் செய்தி. முப்பரிமாணம் படத்துக்கும் அப்படி ஒரு கோணம் இருக்கலாம். அது இயக்குநருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்

முப்பரிமாணம். இரண்டு பக்கத்தைத்தான் காட்டினீங்க. இன்னொரு பரிமாணத்தையும் காட்டியிருந்தா தெரிஞ்சுருக்கும்ல!

அடுத்த கட்டுரைக்கு