Published:Updated:

ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு எமோஷனல் சூப்பர்ஹீரோ ஃபேர்வெல்! ’லோகன்’ படம் எப்படி?

கார்த்தி
ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு எமோஷனல் சூப்பர்ஹீரோ ஃபேர்வெல்! ’லோகன்’ படம் எப்படி?
ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு எமோஷனல் சூப்பர்ஹீரோ ஃபேர்வெல்! ’லோகன்’ படம் எப்படி?

17 ஆண்டுகளில் எக்ஸ்-மென் சீரிஸ் 10 படங்களை வெளியிட்டு இருக்கிறது. அதில் ஒன்பது பாகங்களில் வோல்வரினாக நடித்து இருப்பார் ஹக் ஜேக்மென். வோல்வரின் சீரிஸில் மூன்றாவது படம் 'லோகன்'.

ஹக் ஜேக்மென் , வோல்வரினாக ‘எக்ஸ்-மென்’ சீரிஸில் நடிப்பது இதுதான் கடைசி முறை என அறிவிக்கப்பட்டதால், ‘லோகன்’ படத்துக்கு, ‘எக்ஸ்-மென்’ ரசிகர்களிடமும் ‘காமிக்ஸ்’ ரசிகர்களிடமும் பலத்த எதிர்பார்ப்பு. அதைப் பூர்த்தி செய்ததா, இந்த வாரம் வெளியான ‘லோகன்’ திரைப்படம்?

2029-ம் ஆண்டில் நடக்கிறது கதை. ரீஜெனெரேசன் சக்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்துவரும் லோகன் (ஹக் ஜேக்மென்), சார்லஸ் சேவிரை கவனித்துக்கொண்டு இறுதி நாட்களைக் கடத்தி வருகிறார். டிரான்ஸிஜென் நிறுவனம் பல குழந்தைகளை மியூட்டன்ட்களாக மாற்றி வருகிறார்கள். அதில் 11 வயது லௌரா அங்கு இருக்கும் ஒரு நர்ஸின் உதவியுடன் தப்பித்து விடுகிறாள். நார்த் டக்கோட்டாவில் இருக்கும் ஈடென் என்னும் இடத்துக்கு எல்லா ‘மியூட்டன்ட்’ சிறுவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். லோகன் லௌராவை வில்லன்களிடம் இருந்து மீட்டு, பத்திரமாக ஈடெனுக்கு அழைத்துச் சென்றாரா என்பதே லோகன் படத்தின் கதை.

முதல் காட்சியில் அடி வாங்கும் லோகனுக்கு, காயங்கள் அப்படியே இருக்கிறது. 17 ஆண்டுகளாக ஹக் ஜேக்மெனை வோல்வரினாக பார்த்து ஆராதித்த ரசிகனுக்கு, இந்த லோகன் சற்றே ஸ்பெஷல். மிகவும் மெதுவாகவே சண்டை போடுகிறார். பல காட்சிகளில் சுருண்டு விழுந்து விடுகிறார்.ஆனால், 11 வயது பெண்ணாக வரும் லோகனின் மகள் லௌரா வெறித்தனம்.(லோகனின் டி.என்.ஏவில் இருந்து, மியூட்டன்ட் லௌராவை உருவாக்கி இருக்கிறார்கள்). 

ஒரு காட்சியில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார் லௌரா. லோகன் அவளை விட்டுவிட்டு, சார்ல்ஸ் சேவியரைக் காப்பாற்ற அங்கு இருந்து காரில் கிளம்புவார். அந்தக் காட்சியில் லௌரா வில்லன் ஆட்களை ரத்தத்தில் தெறிக்க விட, திரை அரங்கம் கிளாப்ஸில் அதிர்கிறது. மிகவும் சாந்தமாக இருக்கும் லௌராவின் (11 வயது டேஃப்னி கீன்) முதல் படம் இது. சமீப காலங்களில் வெளியான அதிகபட்ச வயலன்ஸ் இருக்கும் படம் லோகன் தான். அதிலும், உடலை கிழித்துத் தொங்க விடுவது ஒரு சிறுமி என்பதால், சற்றே ஷாக் கொடுக்கிறான் 'லோகன்'. அதனால், போட்டு இருக்கும் A சர்ட்டிஃபிகேட்டுக்கு மதிப்பளித்து வயது முதிர்ந்தவர்கள் மட்டும் செல்லவும்.

ஹக் ஜேக்மேனின் நடிக்கும் கடைசி பாகம் என்பதால், பல காட்சிகள் ஒரு ரோட் ட்ரிப் ஃபீல் தான்  தருகிறது. சாரல்ஸ் சேவியர்-லோகன், நர்ஸ்- லோகன் என பல உரையாடல்கள் ஃபிலாசபி மோடில் செல்கிறது. "அவ என் குழந்தை இல்ல. ஆனா, நான் அவள அதிகமா நேசிக்கறேன். அவள நீ நேசிக்கல. ஆனா, அவ உன் குழந்தை" ; "பல பேரு என்னைக் காயப்படுத்தி இருக்காங்க, அதனால கெட்ட கனவுகள் வருது" என லௌரா சொல்ல, "எனக்கும் கெட்ட கனவுகள்தான், ஆனா , காயப்படுத்தினது நான்" என்பார் லோகன். இப்படி பல வசனங்கள் செம்ம ரகம்.

எக்ஸ்-மெனின் கடந்த இரு பாகத்திலும் (எக்ஸ்-மென் : டேஸ் ஆஃப் ஃப்யூச்சர் ஃபாஸ்ட், எக்ஸ்:மென்: அபோகலிப்ஸ்) குவிக் சில்வர் கதாபாத்திரத்தில் ஈவென் பீட்டர்ஸ் செய்யும் அதிக வேக காட்சிகள் மிக பிரபலம். அந்த அளவுக்கு இல்லையென்றாலும், ஸ்லோ மோஷனில், ஓட்டலுக்குள், ஹக் ஜேக்மென், எதிரிகளைக் கொன்று சார்லஸ் சேவியர், லௌராவைக் காப்பாற்றும் சண்டைக்காட்சி லோகன் ஸ்பெஷல்.

அதேபோல், லோகன் சாயலில் புதிதாக வில்லன் குழாம் உருவாக்கிய மற்றுமொரு வொல்வரின் காட்சிகளும் அற்புதம், கிராபிக்ஸ் மூலம் இளமையான ஹக் ஜேக்மனை உருவாக்கி இருக்கிறார்கள். அடுத்தடுத்து, எக்ஸ்மென் பாகங்கள் வெளிவர உள்ள நிலையில், சார்லஸ் சேவியர், லோகன்  கதாபாத்திரங்கள் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் இழப்பு.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஒரு சூப்பர் ஹீரோவாக வாழ்ந்த ஹக் ஜேக்மெனுக்கு ஆகச்சிறந்த ஃபேர்வெல் சினிமா தந்த இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்டுக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து. முதல்நாள் கலெக்‌ஷன் மட்டும் 65 மில்லியன் அமெரிக்க டாலர் என்கிறார்கள். புதைக்கப்பட்ட பின், எழுத்துகள் வந்தாலும், 75% திரை அரங்க கூட்டம் சீட்டில் இருந்து எழாமல், அப்படியே அமர்ந்து இருந்ததுதான் அதற்கு சாட்சி.