Published:Updated:

'கூடு விட்டுக் கூடு பாய்ஞ்சு ட்வீட்!' - போகன் 2 கதை #PunIntended

மு.செய்யது முகம்மது ஆஸாத்
'கூடு விட்டுக் கூடு பாய்ஞ்சு ட்வீட்!' - போகன் 2 கதை #PunIntended
'கூடு விட்டுக் கூடு பாய்ஞ்சு ட்வீட்!' - போகன் 2 கதை #PunIntended

ஜெயம் ரவி இதுக்கு முன்னாடி நடிச்ச எல்லாப் படங்களின் கதைகளையும் கலைச்சுப்போட்டு 'போகன்' ங்கிற கூடுவிட்டுக் கூடுபாயும் படம் வந்தது. இந்தப் படத்தின் பார்ட்-2 எடுக்கிறோம்னு வேற எண்ட்கார்டு போட்டாங்க. அந்தப் படத்துக்கு நாமளே கதை சொல்லுவோம் வாங்க...

போகன் முதல் பாகத்தின் க்ளைமாக்ஸில் ஜெயம்ரவி, அர்விந்த்சுவாமி கழுத்தை நெரிக்கும்போது அவர் வானத்தைப் பார்ப்பதுபோல் காட்டியிருப்பார்கள். அங்கே பறந்து கொண்டிருக்கும் ஒரு கழுகுக்குள் தன் ஆன்மாவை செலுத்தியதால் அவர் மயங்கிவிழ, அர்விந்த்சுவாமி இறந்துவிட்டதாக நினைத்து ஜெயம்ரவி, ஹன்சிகாவைக் கூட்டிக் கொண்டு சென்றுவிடுவார். அதன்  பின்னர், கழுகுக்குள் இருக்கும் தன் ஆத்மாவை திரும்ப உடலுக்குள் புகுத்திக்கொள்ள மயக்கம் தெளிந்து போகன்-2 ஆட்டத்துக்கு ரெடியாகிறார் அர்விந்த்.
ஹன்சிகாவை கடத்தி வந்த காருக்குள் ஏறிக் கொண்டு கதவுகளையெல்லாம் மூடிக் கொள்கிறார். ஜெயம் ரவி கடலுக்குள் வீசிச் சென்ற அந்த ஓலைச்சுவடியை எடுப்பதற்காக அங்கிருக்கும் ஒரு டால்பின் மீனுக்குள் தன் ஆத்மாவைப்  புகுத்தி ஆழத்திற்குள் சென்று அதை மீட்டுக் கொண்டு மேலே வருகிறார். 

அப்போதுதான் இன்னொரு சம்பவம் நிகழ்கிறது. டால்பினை விட வேகமாக விஜய் குதித்துக் குதித்து நீந்திக்கொண்டு சென்றிருக்கிறார் சுறா-2 படத்திற்காக. அப்பாடா ஒருவழியா தப்பிச்சோம் என்று அர்விந்தசுவாமியாகி, ஓலைச்சுவடியுடன்  ஆந்திராவை நோக்கிப் பயணமாகிறார். ஜெயம்ரவியை அப்புறமா பார்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே நாசர் ஆசைகாட்டியபடி அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக வரவேண்டும் என்பதுதான் இப்போதைக்கு போகனின் எண்ணம். கார் வேகமாக ஓட்டிவரும் நேரத்தில், கலர்கலராய் ஃபாரின் பிகர்களுடன் ஒரு குத்தாட்டம் போடுவதாக கனவு காண்கிறார். பாட்டு முடியும்போது வண்டி கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோத மயக்கமாகிறார்.

அர்விந்த்சுவாமியோடு ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டில் வேலைபார்த்த நண்பர் ஒருவர் விபத்தில் மயங்கியவரை அடையாளம் கண்டு, ஆந்திராவில் பிரபலமான 'பப்பல்லோ' மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கிறார். இரண்டுநாள் கழித்து யாருமில்லாத நேரத்தில் நினைவு திரும்பும் அர்விந்த் தன்னைச் சுற்றி நடப்பதை உணர்கிறார். மருத்துவமனை ஜன்னல் வழியாக வெளியே பார்க்க அங்கே கட்டுக்கடங்காத கூட்டம். அதே மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தங்கள் கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான பிரகாஷ்ராஜுக்காக ஒவ்வொரு தொண்டர்களும் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அர்விந்த்சுவாமி மண்டைக்குள் பொறி தட்ட, அப்புறமென்ன, தன் உடலை மற்றவர் பார்வைக்கு மறைத்து பிரகாஷ்ராஜ் உடம்புக்குள் நுழைய இமை அசைகிறது.

'வாவ்..! வாட் எ மெடிக்கல் மிராக்கிள்!' என்றபடி அங்கிருக்கும் டாக்டர்கள் கண்ணாடியைக் கழற்ற பிரகாஷ்ராஜ் எழுந்து உட்கார்கிறார். ``75 நாட்களாக கோமாநிலையில் கிடந்த நீங்க எழுந்திருச்சிட்டீங்க... எங்களை வழிநடத்தத் தலைவர் மீண்டும் வந்துட்டார்''னு   உணர்ச்சி வசப்படுகிறார் அவரது உடன்பிறவா சகோதரன் சமுத்திரக்கனி. `நீ யாருப்பா' என முதல் கேள்வியிலேயே சமுத்திரக்கனிக்கு பிரகாஷ்ராஜ் ஷாக் கொடுக்க, ஜெர்க் ஆன டாக்டர்களும் சுதாரித்தபடி, `கோமாவில் இருந்து இப்பத்தானே எழுந்திருக்காரு; பழைய ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமா வந்துடும். அவரை அழைச்சிட்டுப் போங்க'னு  சொல்லி பிரகாஷ்ராஜை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். 

`ரொம்ப நல்லவன் டைப்' பிரகாஷ்ராஜுக்குள் போகன் புகுந்ததால் அவரின் செயல்பாடுகள் மாறுகிறது. முதலமைச்சர் என்னும் அதிகாரத்தை வைத்துக் கோடிகளில் கொள்ளை அடிக்கிறார். சமுத்திரக்கனி இதைக் கண்டிக்க அவரை, `தன்னை கொலை செய்ய முயல்வதாகப்' பழிபோட்டு அனுப்பி விடுகிறார். பிரகாஷ்ராஜின் கட்சித் தலைவர் ராஜ்கிரணும் அவரை கடுமையாக எதிர்க்கிறார். இதனால் கட்சிக்குள் கலகலப்பு வர,  கட்சியைத் தான் கைப்பற்றுவதற்காக ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை  எல்லாம் ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, அவர்களை நல்லாக் கவனித்து எல்லோரிடமும் வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்குவதோடு, கட்சியையும் கைப்பற்றுகிறார். இதனால் ராஜ்கிரணுக்கு ஹார்ட் அட்டாக் வர, அவரை பப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். அங்கு, அரவிந்த்சாமி ராஜ்கிரணை சந்தித்து நடந்ததைக் கூறுகிறார். ராஜ்கிரண், அர்விந்த்சுவாமி, சமுத்திரக்கனி மூவரும் சேர்ந்து போகனை காலி செய்ய வியூகம் வகுக்கிறார்கள். அதன்படி சமுத்திரக்கனி வெளிநாட்டில் இருந்து வரும் தொழில் அதிபர் போல பிரகாஷ்ராஜுடன் நெருக்கமாகிறார். இரவு பார்ட்டிக்கு அவரை வரவைக்கிறார்கள். ராஜ்கிரண் திட்டப்படி அங்கு ஏற்கனவே அரவிந்த்சுவாமியை ஒரு ரிமோட் வெடிகுண்டு பொருத்தப்பட்ட நாற்காலியில் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள். 

பார்ட்டி முடித்ததும் கிளம்பும் பிரகாஷ்ராஜை, அர்விந்த்சுவாமியை கட்டி வைத்திருக்கும் அறைக்கு கூட்டிவந்து மிரட்டுகிறார்கள். எங்களுக்குத் தேவை ஊழலற்ற ஆட்சிதான். உன்னால் இந்த நாட்டில் ஊழல் பெருத்துவிட்டது. இதை அழிக்கணும்னா நல்லவன் பிரகாஷ்ராஜ் நாட்டை ஆளணும். 'ஒழுங்கு மரியாதையா உன் உடம்புக்குப் போய்டு. இல்லேன்னா அதை அழித்துவிடுவோம். அப்புறம் நீ வேறு எந்த உடம்புக்குள்ளும் போகமுடியாது' என்று மிரட்ட, மீண்டும் ஆன்மா மாற்றம் நடக்க, `நல்ல' பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மூவரும் வெளியேறுகிறார்கள். கொஞ்சதூரம் வந்ததும் ரிமோட்டை அழுத்த அந்த அறை முழுவதும் ஒரு புகை மண்டலம். போகன் போய்ச் சேர்ந்துட்டான் என்று இவர்கள் காரில் கிளம்ப, புகை மூட்டத்துக்குள் இருந்து ஒரு பெருச்சாளி வெளியேறி தன் முன்னங்காலை பக்கவாட்டில் ஒரு வெட்டு வெட்டி, மூக்கைச் சொறிய போகன் -3 தொடர்வான் என டைட்டில் கார்டு ஓடுகிறது... அடுத்த பாகத்தில் கூடுவிட்டுக் கூடு பாய்ஞ்சு ட்வீட் போடும் காட்சிகள் எல்லாம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

- எம்.செய்யது முகம்மது ஆசாத்