Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!

ழுத்து வடிவில் இருக்கும் சிறுகதை, நாவல்களை விஷூவல் வடிவில் பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்று. தமிழ்சினிமாவிலும் ஏராளமான சிறுகதை, நாவல்கள் சினிமாவாக உருமாற்றம் பெற்றுள்ளன. அவற்றில் சில!

தங்கர் பச்சான் கதைகள் 

சிறுகதை, நாவல்களைப் படமாக்குவதில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் தங்கர் பச்சான் காட்டிய அக்கறை அதிகம். இயக்குநராக அறிமுகமான 'அழகி'யை 'கல்வெட்டு' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் முதல் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' கதையை 'சொல்ல மறந்த கதை'யாக சினிமாவில் சொன்னார். தான் எழுதிய 'ஒன்பது ரூபாய் நோட்டு', 'அம்மாவின் கைப்பேசி' நாவல்களை அதேபெயரில் படமாக்கினார். பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கும் இவருடைய 'களவாடிய பொழுதுகள்' படமும் தங்கர் பச்சான் எழுதிய நாவலே!

தலைகீழ் விகிதங்கள் நாவல்

அதிகாலையின் அமைதியில் 

தஸ்தாயெவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'இயற்கை'யின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் எஸ்.பி.ஜனநாதன். நாவலை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய மற்றொரு படம், 'பேராண்மை'. பரீஸ் வஸீலியெவ் என்பவர் எழுதிய 'அதிகாலையில் அமைதியில்' நாவல், ஒரு ராணுவத் தளபதியும், ஐந்து பெண்களும் ஜெர்மன் பாஸிஸ்டுகளுக்கு எதிராக நிகழ்த்திய சாகசங்களைச் சொன்னது. 'பேராண்மை' படமும், இந்தியாவின் ராக்கெட்டிற்குக் குறிவைக்கும், அந்நிய சக்திகளை ஒரு ராணுவ வீரனும், ஐந்து இளம் பெண்களும் சேர்ந்து முறியடிப்பதுதான் கதை. 

அதிகாலையின் அமைதியில் நாவல்

தலைமுறைகள் 

நீல.பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்' என்ற நாவல், அப்படியே 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. 1998-ல் வெளியான 'கனவே கலையாதே' படத்திற்குப் பிறகு, 'ஆட்டோ சங்கர்', 'சந்தனக்காடு' சீரியல்களை இயக்கிக்கொண்டிருந்த வ.கெளதமன் இயக்குநராக 'ரீ-என்ட்ரி' கொடுத்த படம். குமரி மாவட்டத்தில் வாழும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் காலாச்சரமும், கட்டமைப்புமே நாவலின் மையம். 

தலைமுறைகள் நாவல்

ஏழாம் உலகம்

ஜெயமோகன் எழுதிய 'ஏழாம் உலகம்' நாவலின் பாதிப்பில் உருவானது, பாலா இயக்கிய 'நான் கடவுள்' திரைப்படம். பிச்சைக்காரர்கள் எப்படி வாங்க/விற்கப்படுகிறார்கள், அவர்களுடைய உலகம் எப்படி இயங்குகிறது என பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைப் பிரதானமாகப் பேசிய நாவல். இந்த நாவலின் மையத்தை, காசியில் வாழும் ஒரு அகோரியின் வாழ்க்கையோடு இணைத்து திரைக்கதை ஆக்கியிருப்பார், இயக்குநர் பாலா.

ஏழாம் உலகம் நாவல்

எரியும் பனிக்காடு 

பி.எச்.டேனியல் எழுதிய 'ரெட் டீ' நாவல், பல வருடங்களுக்குப் பிறகு 'எரியும் பனிக்காடு' ஆக தமிழில் வெளிவந்தது. தமிழ்நாட்டின் வால்பாறையில் தேயிலைத் தோட்டம் உருவான கதையும், தேயிலைத் தோட்டத்திற்காகப் பலியாக்கப்பட்ட தொழிலாளர்களைப் பற்றியும், அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றியும் பேசுகிறது இந்நூல். பாலாவின் மற்றொரு படைப்பான 'பரதேசி' இந்நாவலின் இன்னொரு வடிவம். 

எரியும் பனிக்காடு நாவல்

லாக்கப் 

சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியான வரவேற்பையும், ஏராளமான விருதுளையும் பெற்ற வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம், மு.சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' நாவலின் தழுவல். 'மிகச்சிறந்த மனித உரிமைக்கான திரைப்படம்' என்ற அங்கீகாரத்தைப் பெற்ற இப்படத்தின் கதை, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. காவல் துறையால் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், அதிலிருந்து மீண்டு வந்த போராட்டத்தையும் மு.சந்திரகுமார் 'லாக்கப்'பில் பதிவு செய்திருக்கிறார்.

லாக்கப் நாவல் சினிமா

இதுதவிர, சு.வெங்கடேசன் எழுதிய 'காவல்கோட்டம்' நாவலின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'அரவான்', சுஜாதாவின் 'ஆ..!' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'சைத்தான்' என ஏராளமான படங்கள் இலக்கியம் டூ சினிமாவாக உருமாறியிருக்கிறது. சுஜாதாவின் ஜன்னல் மலர் நாவல்தான், இறைவியின் விஜய் சேதுபதி போர்ஷன்களில் பல. இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். உங்களைக் கவர்ந்த, நாவல் டூ சினிமா படைப்பைக் கமெண்ட்டில் சொல்லுங்கள்!

- கே.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்
Advertisement